குலசை முத்தாரமே நீங்காது நின் நினைவு !

குலசை முத்தாரமே!  நீங்காது நின் நினைவு!!

           

                          சி. தனபால், நிலை-1 நிர்வாக அலுவலர் (ஓய்வு)
                                     இந்து சமய அறநிலையத் துறை                          


 
       

                                         ‘பருப்பத வேந்தன் பெற்ற   

                                         பார்வதி தேவி நின்றன் 

                                   திருப்பணி செய்து வாழ  

                                         திருவருள் புரிதல் வேண்டும் 

                                   விருப்புடன் பணியும் அன்பர் 

                                         வேண்டிடும் செல்வம் நல்கும்

                                  அருட்திரு குலசை முத்தார

                                         அம்மையே போற்றி ! போற்றி !’



அறிமுக உரை.

                                              

                 செந்தில் ஆண்டவனின் அருள் மணம் கமழும் புனித மண்ணைத் தொட்டுத் தழுவும் ஆசையில், கடல் அலைகள் கரையை நோக்கி தவழ்ந்து வந்த உச்சிப் பொழுது வேளையில், தொலை தூரத்தில் கோவில் ராஜகோபுரம் எனது கண்ணுக்குத் தெரிந்தது. கோபுர தரிசனம் கோடிப் புண்ணியம் என்பர் நம் முன்னோர். எனவே கோபுரம் தெரிந்த திசையை நோக்கி, அறுமுகனின் அருள் வேண்டி வணங்கினேன். ‘திருச்சீரலைவாய்’ என போற்றப்படும் முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் திருத்தல எல்லையை, நான் பயணித்த அரசுப் பேருந்து வந்து சேர்ந்தது.


             திருச்செந்தூர் பேருந்து நிலையத்தில் இறங்கியவுடன், உடன்குடி செல்வதற்கு நாலுமூலைக் கிணறு, பிச்சுவிளைசீர்காட்சி, நயினார்பத்து வழியாக செல்லும் வேறு ஒரு பேருந்தில் மாறி, எனது பயணத்தை தொடர்ந்தேன். வழி நெடுகிலும் சிவப்பு கம்பளம் விரித்தது போன்று இருந்த செம்மண் தேரி மண்ணில், பனை மரங்கள், தென்னை மரங்கள், வாழைத் தோட்டங்கள், வெற்றிலைக் கொடிக்கால்கள், பூமி அன்னைக்கு குடை பிடித்தாற் போல் நின்ற உடை மரங்கள் என கண்ணுக்கு இனிய காட்சிகள் மனதுக்கு இதமாக இருந்தன.

             தென்மேற்கு திசையிலிருந்து காற்று வீசத் துவங்கி இருந்த தமிழகத்தின் கோடை காலம் அது. காற்றின் அசுர வேகத்திற்கு ஈடு கொடுக்க இயலாமல், வீறு கொண்டு எழுந்த செம்மண் புழுதிப்படலம், மேற்கு வானத்தில் பரவி செக்கச் சிவந்து காட்சி அளித்தது. வழி நெடுகிலும் இருந்த ஓலைக் குடில்களில், பனங் கருப்பட்டி தயாரிக்க, விறகு அடுப்பில் நெருப்பை மூட்டி எரித்ததில் ஏற்பட்டிருந்த கரும்புகையும், காய்ச்சிய பதனீரிலிருந்து கம கம என வெளி வந்த இனிய மணமும், இப்பகுதி எங்கும் பரவி இருந்தது.


             1973 ஜுன் மாதம், உடன்குடி அருகேயுள்ள செட்டியாபத்து சிதம்பரேசுவரர் மற்றும் ஐந்து வீட்டு சுவாமி கோவில் நிர்வாக அலுவலராக பொறுப்பேற்க, இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள எனது சொந்த ஊரிலிருந்து புறப்பட்டு திருச்செந்தூர் வழியாக உடன்குடி சென்றேன். அப்போது, திருச்செந்தூரில் இருந்து உடன்குடி செல்லும் வழி நெடுகிலும் நான் கண்ட காட்சிகள்தான் மேலே கூறியவை. செக்கச் சிவந்த தேரி மண்ணில், இயற்கை அன்னையின் எழில் கோலம் கண்டு வியந்தவாறுஉடன்குடி பேருந்து நிலையம் வந்து சேர்ந்தேன். உடன்குடி பேருந்து நிலையத்தில் வெற்றிலைக் கட்டுக்களை, வெளியூர் பேருந்துகளில் ஏற்றும் பணி மும்முரமாக நடந்து கொண்டிருந்தது.


         பேருந்திலிருந்து இறங்கியவுடன், செட்டியாபத்து கோவிலுக்கு செல்லும் வழியையும், தூரத்தையும் அருகில் இருந்தவரிடம் விசாரித்து அறிந்தேன். ஏனெனில், திருச்செந்தூருக்கு தெற்கில் அதுவரை நான் பயணம் செய்தது இல்லை. மேலும், செட்டியாபத்து கோவிலைத் தொடர்பு கொள்ள, இன்றைய நாளில் உள்ளது போல் தொலைத் தொடர்பு வசதி அல்லது ஆட்டோ போன்ற ஏதாவது ஒரு வாடகை வாகனத்தை ஏற்பாடு செய்யும் வசதி எதுவும் அந்நாளில் இல்லை. எனவே, கொண்டு வந்திருந்த சூட்கேஸை கையில் எடுத்துக் கொண்டு, தென்மேற்கு திசையிலிருந்து வீசிய புழுதிக் காற்றை எதிர்கொண்டவாறு, 2 கி.மீ. தூரத்திலிருந்த செட்டியாபத்து ஊரை நோக்கி, மெல்ல நடக்க ஆரம்பித்தேன்.  


            வானம் பார்த்த பூமி என்று அழைக்கப்படும், இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி எனது சொந்த ஊராக இருப்பினும், வளர்ந்த ஊர் இராமநாதபுரம் அருகேயுள்ள சத்திரக்குடி ஆகும். 1970 ஆம் ஆண்டில் இராமநாதபுரம் சேதுபதி அரசு கலைக் கல்லூரியில் பட்டப் படிப்பை முடித்தவுடன்அதே ஆண்டின் இறுதியில், தமிழ்நாடு அரசுத் தேர்வாணையம் நடத்திய, அறநிலையத் துறையின் நிலை-4 நிர்வாக அலுவலர் (Executive Officer Grade-4) தேர்வுக்கான, எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றேன். பின்னர், 1971 ஆம் ஆண்டில், சென்னையில் அரசுத் தேர்வாணையம் நடத்திய நேர்முகத் தேர்விலும் வெற்றி பெற்று, கோவில் நிர்வாக அலுவலர் பணிக்கு தேர்வானேன். இதன்மூலம், தமிழக கோவில்களில் பணியாற்றும் ஒரு வாய்ப்பை பெற்றேன். 


        1971 ஆம் ஆண்டு ஜூலை மாதம், கோயமுத்தூரில் எனக்கு அளிக்கப்பட்ட நிர்வாக அலுவலருக்கான அடிப்படை பயிற்சியை முடித்தவுடன், திருச்சி மாவட்டம் இலால்குடி அருகில் கொள்ளிடம் ஆற்றுக் கரையை ஒட்டி, பசுமைப் போர்வையை விரித்தாற் போல பச்சைப் பசேலென வயல்வெளிகள் சூழ இருந்த, இடையாற்று மங்கலம் எனும் ஊரில் அருள்பாலிக்கும் மாங்கலீசுவரர் கோவிலின் நிர்வாக அலுவலராக முதன் முதலில் பொறுப்பேற்றேன்.


          தெய்வீகம் சார்ந்த அரசுப் பணியாக கருதி, கோவில் நிர்வாக அலுவலர் பணியில் மிகவும் ஆர்வமுடன் சேர்ந்தேன். ஆனால், கோவில் நிர்வாக அலுவலர் பணியில், நான் சந்தித்த பிரச்சனைகள், எதிர்கொண்ட இடர்ப்பாடுகள் ஏராளம்! ஏராளம்!!. எனினும், நான் கொண்டிருந்த அசைக்க இயலாத ஆழ்ந்த தெய்வ நம்பிக்கை, பிரச்சனைகளை தீர்த்து வைக்கும் திறனையும், இடர்ப்பாடுகளை எதிர் கொள்ளும் ஆற்றலையும் எனக்கு அளித்தன. 


       இன்றைய இராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்களை உள்ளடக்கிய, அன்றைய பிரிக்கப்படாத எனது செந்த மாவட்டமான இராமநாதபுரம் மாவட்டத்திற்கு மாறுதல் பெற முயற்சி செய்தேன். ஆனால், எனது முயற்சி வெற்றி பெறவில்லை. எனினும் முயற்சியைக் கைவிடாது, இராமநாதபுரம் மாவட்டத்தை ஒட்டிய வேறு ஏதாவது ஒரு மாவட்டத்துக்குள் மாறுதல் பெற விட வேண்டும் என்ற எண்ணத்தில், 1973 ஆம் ஆண்டில், பிரிக்கப்படாத திருநெல்வேலி மாவட்டம், திருச்செந்தூர் அருகிலுள்ள செட்டியாபத்துக்கு மாறுதல் பெற்றேன். அந்த நேரத்தில் குலசை முத்தாரம்மன் கோவில், நிர்வாக அலுவலர் நிர்வாகத்தின் கீழ் கொண்டு வரப்படவில்லை என்பது இங்கு நினைவு கூறப்படுகிறது.


     ஆனால், சொந்த மாவட்டத்துக்கு அருகாமையில் பணிபரிந்த மகிழ்ச்சியும் தொடர்ந்து நீடிக்கவில்லை. 1974 ஆம் ஆண்டில், எனக்கு அளிக்கப்பட்ட நிலை-3 நிர்வாக அலுவலர் (Executive Officer Grade-3) பதவி உயர்வு காரணமாக, சுமார் 15 மாதங்கள் மட்டுமே செட்டியாபத்து கோவிலில் பணி புரிந்திருந்த நிலையில், அம்பாசமுத்திரம் அருகே உள்ள அரியநாயகிபுரம் கைலாசநாதசுவாமி கோவிலுக்கு மாறுதல் செய்யப்பட்டேன். 


                  இந்து சமய அறநிலையத் துறையில், நிர்வாக அலுவலராக 1971 செப்டெம்பர் மாதம் 15 ல் பணியைத் தொடங்கி, 35 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்த எனது அரசுப் பணியில், பணியாற்றிய பல்வேறு கோவில்களில் புதிய கட்டுமானப் பணிகளை செய்தல், கோவில் சொத்துக்கள் மீதான ஆக்கிரமிப்புக்களை கண்டறிந்து அவற்றை அகற்றுதல், கோவில் வருமானத்தை உயர்நிலைக்கு உயர்த்துதல், கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுத்தல், கோவிலுக்குச் சொந்தமான இடங்களில் மரங்களை நட்டு வளர்த்தல் ஆகிய பணிகளுக்கு முன்னுரிமை அளித்து செய்தேன். 


              அரசுப் பணியில் மாறுதல் என்பது தவிர்க்க இயலாத ஒன்று என்பதால், மனைவி, மக்கள் என குடும்பத்துடன் இடம் மாறி வாழ நேர்ந்த ஊர்கள் தமிழகத்தில் பலவாகும். எனது சொந்த மாவட்டத்தை தவிர்த்து, திருச்சி, திருநெல்வேலி, தஞ்சாவூர், கரூர், சேலம், ஈரோடு, தூத்துக்குடி என பல்வேறு மாவட்டங்களில் பணிபுரிந்தேன். கோவில்களில், குறைகளுக்கு இடமளிக்காது பணிபுரிந்த மன நிறைவுடன், 2007 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஓய்வு பெற்றேன். ஓய்வுக்குப் பின் அமைதியாக வாழும் நல்லதொரு சூழலை, தூத்துக்குடி எனக்கு உருவாக்கி கொடுத்தது.


  தமிழகத்தில் பல்வேறு கோவில்களில் பணியாற்றி இருந்தாலும், குலசை முத்தாரம்மன் கோவிலில் பணியாற்றிய 15 ஆண்டு காலம், ஈரோடு மாவட்டம் கொடுமுடி மகுடேசுவரர் கோவிலில் பணியாற்றிய 5 ஆண்டு காலம், என் நெஞ்சில் நீங்காத நினைவுகள் பலவற்றை கொண்டதாகும். அதேபோல் திருச்செந்தூர் அருகேயுள்ள குதிரைமொழி கிராமம், தேரிக்குடியிருப்பு கற்குவேல் அய்யனார் கோவிலை, அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் கொண்டு வந்து, கோவிலைச் சுற்றியிருந்த நூறு ஏக்கருக்கும் மேற்பட்ட நிலங்களை மீட்கவும், பக்தர்களுக்கு சாலை வசதி, தண்ணீர் வசதி செய்து கொடுக்கவும், கோவில் சுற்றப்புறங்களில் மரங்களை நட்டு வளர்க்கவும் மேற்கொண்ட பல்வேறு முயற்சிகளை அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது.    


      எழுபத்து மூன்று வயது கடந்த நிலையிலும் நல்ல நினைவாற்றலை எனக்கு அளித்து, கணினி முன்பாக கொண்டு போய் நிறுத்தி, குலசை முத்தாரம்மன் கோவிலின் விரிவாக்கம் மற்றும் அதன் அடிப்படைக் கட்டமைப்பு பணிகளுக்கு வித்திட்ட அந்த நாளைய நிகழ்வுகளை, நாளைய தலைமுறையினரும் அறிந்து கொள்ளும் வகையில், என்னை எழுதத் தூண்டிய அந்த அருட்சக்தி அன்னை முத்தாரம்மனே! இன்றளவும், எனது வாழ்வின் ஒளியாக இருந்து என்னை வழி நடத்தி வரும், அன்னை முத்தாரம்மன் சுவாமி ஞானமூர்த்தி ஈசுவரர் பொற்பாதம் பணிந்து, அந்நாளைய நினைவுகளை அனைவருடனும் பகிர்ந்து கொள்வதில் பெரிதும் மகிழ்கின்றேன். 


 1. செட்டியாபத்து கோவில் மீண்டும் பொறுப்பேற்பு.


           1978 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கியிருந்த நேரம் அது. செட்டியாபத்து கோவிலில் இருந்து நான் மாறுதலாகி சென்று சுமார் நான்கு ஆண்டு காலம் ஆகி இருந்தது. இந்த சூழ்நிலையில், செட்டியாபத்து கோவிலில் நிர்வாக அலுவலராக இருந்தவர், அவரது சொந்த மாவட்டத்திற்கு மாறுதல் பெற்று இருந்தார். இதனால் செட்டியாபத்து கோவிலுக்கு புதிதாக ஒரு நிர்வாக அலுவலரை நியமனம் செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டு இருந்தது. இந்த நேரத்தில், உடன்குடி சிவமுருகன் சிட் பண்ட்ஸ் நிறுவனர் பொன்.இராமநாத ஆதித்தன் அவர்கள், செட்டியாபத்து கோவிலின் அறங்காவலர் குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டு இருந்தார். 


          ஏற்கனவே, செட்டியாபத்து கோவிலில் நான் பணி புரிந்த போது எனக்கு நன்கு அறிமுகமாகி இருந்த பொன்.இராமநாத ஆதித்தன் அவர்கள், இந்த சூழ்நிலையைப் பயன்படுத்தி, செட்டியாபத்து கோவிலுக்கு மீண்டும் என்னை மாறுதல் பெற வைக்கும் எண்ணத்தில், கோவில் கணக்காளர் வீ.ஜெயராமகிருஷ்ணன் என்பவரையும் உடன் அழைத்துக் கொண்டு எனது சம்மதம் பெற, அரியநாயகிபுரம் வந்தார். பொன்இராமநாத ஆதித்தன் அவர்கள், தனது விருப்பத்தை என்னிடம் நேரில் தெரிவித்த போது, எனது சொந்த மாவட்டத்திற்கு மாறுதல் பெறும் எண்ணம் காரணமாக, செட்டியாபத்துக்கு மீண்டும் வர விருப்பம் இல்லை எனக் கூறி மறுத்தேன்.


          ஆனால், பொன்.இராமநாத ஆதித்தன் அவர்கள் தொடர்ந்து வலியுறுத்தியதால், அவர் மீது நான் கொண்டிருந்த தனிப்பட்ட நட்பு, செட்டியாபத்து கோவிலுக்கு மீண்டும் மாறுதல் பெற சம்மதிக்க வைத்தது. மேலும், பொன்.இராமநாத ஆதித்தன் அவர்களின் தொடர் முயற்சியால், அதுவரை நிர்வாக அலுவலர் நிலை-(Executive Officer Grade-4) ஆக இருந்து வந்த செட்டியாபத்து மற்றும் குலசை ஆகிய இரண்டு கோவில்களும், நிர்வாக அலுவலர் நிலை-3 (Executive Officer Grade-3ஆக நிலை உயர்வு செய்து, எனக்கு அந்நாளில் மாறுதல் அளிக்கப்பட்டது.


2. குலசை முத்தாரம்மன் கோவில் பொறுப்பேற்பு. 

 

  ஒருவேளைபொன்.இராமநாத ஆதித்தன் அவர்கள், அந்நாளில் எனது மாறுதலுக்கு அழுத்தம் எதுவும் கொடுக்காமல் இருந்திருந்தால், குலசை முத்தாரம்மன் கோவிலில் பொறுப்பேற்கும் சூழ்நிலையும், கோவில் விரிவாக்கம், கட்டுமானம் போன்ற பல்வேறு வளர்ச்சிப் பணிகளை குலசேகரன்பட்டினம் கோவிலில் முன்னெடுத்துச் செய்யக் கூடிய ஒரு அரிய வாய்ப்பும் எனக்கு கிடைக்காமலே போயிருக்கக் கூடும்.


  எனினும், 'எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது. எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது. எது நடக்க இருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும் என்ற கீதையின் அருள் மொழியில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்ட எனக்கு, 1978  ஆம் ஆண்டில் செட்டியாபத்து கோவில் பொறுப்புக்களை மீண்டும் ஏற்ற வேளையில், அதன் தொகுப்பு கோவிலாக (group temple) இருந்து வந்த குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் பொறுப்புக்களை முதன் முதலாக ஏற்றுக் கொண்டேன்.


 3. அன்னையின் சந்நிதியில் கேட்டது கிடைக்கிறது; நினைத்தது நடக்கிறது.

 

     தமிழகத்தின் தென் தென்பகுதியான பாண்டிய நாடு முத்துக்களுக்கு பெயர் பெற்றது. அதிலும் குறிப்பாக, தூத்துக்குடி இன்றளவும் முத்துக்களுக்கு பெயர் பெற்று விளங்குவதால், இவ்வூர் முத்துநகர் என்றும் சிறப்பித்து கூறப்படுகிறது. நவமணிகள் என்று சிறப்பித்து கூறப்படும் முத்து, பவளம்மரகதம், புஷ்பராகம், நீலம், கோமேதகம், வைரம், வைடூரியம், மாணிக்கம் ஆகியவற்றுள் முத்து மட்டுமே தானே ஒளிரும் தன்மையுடையது


      முத்துக்களை ஆரமாக அணிந்தவள் என்பதால் முத்தாரம்மன் என்றும், வெம்மையால் உடலில் தோன்றும் முத்துக்களை ஆற்றும் வல்லமை கொண்டவள் என்பதால், முத்து+ ஆற்று+ அம்மன்= முத்தா(ற்ற)ரம்மன் எனவும், அன்னை முத்தாரம்மன் இந்த மண்ணின் மணம் மற்றும் பழக்க வழக்கங்களுக்கு ஏற்ப, பலவாறாக பெயர்க் காரணம் பெறுகிறாள். கற்பக தருவின் கீழ் இருப்பவர், எண்ணியதை எண்ணியாங்கு பெறுவது போல், கற்பக தருவாக அன்னை முத்தாரம்மன் வீற்றிருந்து அருள் புரிவதால், அன்னையின் சந்நிதியில் நம்பிக்கையோடு நின்று வேண்டுவோருக்கு கேட்டது கிடைக்கிறது; நினைத்தது நடக்கிறது. 

 

 4. பரிவர்த்தனை யோக நிலையில் அருள்தரும் அன்னையின் சிறப்பு.

 

       சோதிடத்தில், செவ்வாய் வீட்டில் சுக்கிரனும், சுக்கிரன் வீட்டில் செவ்வாயும் இருப்பது பரிவர்த்தனை யோகம் என அழைக்கப்படுகிறது. அதுபோன்றே சுவாமி ஞானமூர்த்தி ஈசுவரர் ஆற்றலை அன்னை முத்தாரம்மன் பெற்று சிவமயமாகவும்அன்னை முத்தாரம்மன் ஆற்றலை, சுவாமி ஞானமூர்த்தி ஈசுவரர் பெற்று சக்தி மயமாகவும் அருள் பாலிப்பதுஇத்தலத்தின் பெரும் சிறப்பாகும். பரிவர்த்தனை யோக நிலை காரணமாக, அன்னை முத்தாரம்மனின் அருள், இங்கு ஒரு காட்டாற்று வெள்ளமென பொங்கிப் பெருக்கெடுத்து, ஆனந்த வீச்சுடன் வெளிப்பட்டு அவள் பொற்பாதம் பற்றிய அனைவரையும் தழைத்துச் செழிக்கச் செய்கிறது.


5. குலசை முத்தாரமே! நீங்காது நின் நினைவு !!

 

             குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில், 1978-1986 மற்றும் 1989-1996 ஆகிய இருவேறு காலங்களில், நிலை-3 மற்றும் நிலை-2 என இருவேறு நிலைகளில், நிர்வாக அலுவலராகப் பணியாற்றும் அரிய வாய்ப்பு எனக்கு கிடைத்தது. நான் பொறுப்பேற்பதற்கு முன்பே, தசரா திருவிழாவை சிறப்பாக கொண்டாடக் கூடிய கோவிலாக குலசை முத்தாரம்மன் கோவில் இருந்தது. எனினும், ஒரு கிராமக் கோவில் போன்ற தோற்றத்தில், குறுகிய இடத்தில், விரிவாக்கத்துக்கு தேவையான இடவசதி ஏதும் இல்லாததால், மிக குறைந்த வருமானம் வரக்கூடிய கோவிலாக இருந்து வந்தது


   இந்த சூழ்நிலையில், சிறிய அளவில் இருந்த கோவிலில் உட்காரக் கூட இடமின்றி தவித்த பக்தர்களுக்கு விரிவான இடவசதியை ஏற்படுத்தி கொடுக்கவும், கொடிமர மண்டபம், அர்த்த மண்டபம், மகாமண்டபம் மற்றும் சுற்றுப் பிரகார மண்டபம் போன்ற உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும், கோவிலில் அன்றாடம் நடைபெற்று வந்த இரண்டு கால பூஜையை, படிப்படியாக நான்கு கால பூஜையாக மாற்றி அமைக்கவும், கோவில் வருமானத்தை உயர் நிலைக்கு கொண்டு செல்லவும், இரண்டு முறை குலசையில் பணியாற்ற கிடைத்த வாய்ப்பு எனக்கு பெரிதும் உதவியது என்றே கூற வேண்டும்.


  கோவில் விரிவாக்கம் மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக, சிறிதும் பெரிதுமாக சுமார் இரண்டு ஏக்கர் அளவுள்ள காலிமனை நிலங்களை பலரிடம் நன்கொடையாகப் பெற்றது, நன்கொடையாளர் பலரது உதவி கொண்டு எழில்மிகு தோற்ற பொலிவுடன் கட்டப்பட்ட கோவில் உள்கட்டமைப்புப் பணிகள், கலையரங்க கட்டுமானப் பணி, பாதுகாப்பான முறையில் பக்தர்கள் கடலில் புனித நீராட, சிதம்பர ஈசுவரர் கோவில் எதிரே உள்ள கடற்கரை பகுதியை தேர்ந்தெடுத்து கடற்கரை வரை புதிய சாலையை ஏற்படுத்தியது, கடற்கரை சாலையின் இருமருங்கிலும் நிழல் தரும் வேப்ப மரங்களை நட்டு பசுமை வழிச் சாலையை உருவாக்கியது, கோவிலுக்கு எதிரில், மிகக் குறுகலான தெருவில், நெரிசல் மிகுந்த சூழலில் நடைபெற்று வந்த அன்னை முத்தாரம்மனின் மகிசாசுர சம்ஹார நிகழ்ச்சியைகடற்கரை சிதம்பர ஈசுவரர் கோவில் திறந்த வெளிப் பகுதிக்கு மாற்றம் செய்தது ஆகியன குறிப்பிட்டு கூறத்தக்க எனது பணிக்கால நிகழ்வுகளாகும்.


 குலசை முத்தாரம்மன் கோவில் நிர்வாக அலுவலராக, 1978 ல் பொறுப்பேற்று அரை நூற்றாண்டு காலம் தொடுகின்ற தூரத்தில் வந்து விட்டது. அதுபோல, குலசை முத்தாரம்மன் கோவில் பொறுப்பிலிருந்து விடுபட்டு கால் நூற்றாண்டு காலம், கட கட என கடந்தும் விட்டது. காலம் பல கடந்தாலும், சிறிய இடத்திலிருந்த கோவிலை விரிவுபடுத்தி, வளர்ச்சியின் உச்சத்துக்கு கொண்டு செல்ல அந்நாளில் மேற்கொண்ட மிகப்பெரும் முயற்சியும், இந்த முயற்சியில், அன்னை முத்தாரம்மன் மீது பற்றுக் கொண்ட பலரும் அளித்த அளப்பறிய ஆதரவும், ஒத்துழைப்பும், இதன் பின்னணியில் நிழலாக என் முன் நின்று, என்னை வழி நடத்திய அன்னை முத்தாரம்மனின் அருளும், என் நினைவிலிருந்து என்றென்றும் நீங்கா.  

    

6. இந்து சமய அறநிலையத் துறை நிர்வாகத்தில் குலசை முத்தாரம்மன் கோவில்.


        குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில், 1955 ஆம் ஆண்டில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டதுஅறநிலையத்துறை நிர்வாகத்தின் கீழ் கொண்டு வரப்பட்ட நாளிலிருந்து சுமார் 20 ஆண்டு காலம், அறநிலையத் துறையால் நியமனம் செய்த அறங்காவலர்களது நிர்வாகத்தின் கீழ் முத்தாரம்மன் கோவில் இருந்துள்ளது. இதில், குறிப்பிடத்தக்க அறங்காவலர் குழு தலைவர்கள் குலசை T.R.K.திருவேங்கடம் பிள்ளை, குலசை அ.முத்தையா ஆகியோர் ஆவர்.


   ₹10,000/-க்கும் அதிகமாக வருமானம் வரக்கூடிய கோவில்களை பட்டியலில் சேர்ந்தவை (listed institutions) எனவும்10,000/-க்கும் குறைவாக வருமானம் வரக்கூடிய கோவில்களை பட்டியலில் சேராதவை (non listed institutions) எனவும்வருமான அடிப்படையில் கோவில்களை வகைப்படுத்தும் நடைமுறை, அறநிலையத் துறையில் உள்ளது. அந்த அடிப்படையில் 1976 ஆம் ஆண்டு வரை, குலசை முத்தாரம்மன் கோவில் ₹10,000/-க்கும் குறைவாக ஆண்டு வருமானம் வரக்கூடியதாக, பட்டியலில் சேராத கோவில்களில் (non listed institution) ஒன்றாக இருந்துள்ளது.


7. குலசை கோவில் நிர்வாகத்தை மேம்படுத்த நிர்வாக அலுவலர் நியமனம்.

 

   1976 ஆம் ஆண்டு மார்ச் மாதம், குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் நிர்வாகத்தை மேம்படுத்தும் நோக்கில், செட்டியாபத்து கோவில் நிர்வாக அலுவலரை, முத்தாரம்மன் கோவிலுக்கும் பொதுவான நிர்வாக அலுவலராக (Common Executive Officer), அறநிலையத்துறை முதன் முதலாக நியமனம் செய்துள்ளது. செட்டியாபத்து கோவில் நிர்வாக அலுவலராக இருந்த கே.எஸ்.பொன்னுச்சாமி என்பவர், குலசை முத்தாரம்மன் கோவிலின் முதல் நிர்வாக அலுவலராக பொறுப்பேற்றுள்ளார்


          தமிழக திருக்கோயில்களில் இயங்கி வந்த அறங்காவலர் குழுக்கள் அனைத்தும், 1976 ஆம் ஆண்டில் அன்றைய அரசியல் சூழ்நிலை காரணமாக கலைக்கப்பட்டன. இதில், குலசை முத்தாரம்மன் கோவிலில் இயங்கி வந்த அறங்காவலர் குழுவும் கலைக்கப்பட்டு, கோவில் நிர்வாக அலுவலரே தக்காராகவும் நியமிக்கப்பட்டார். கே.எஸ்பொன்னுச்சாமி என்பவர் இரண்டு மாதங்கள் மட்டும் குலசை கோவிலில் பணி புரிந்த நிலையில் மாறுதல் செய்யப்பட்டு, தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த எஸ்.இராமநாதன் என்பவர் நிர்வாக அலுவலராக பொறுப்பேற்றார். எஸ்.இராமநாதன் என்பவர் இரண்டு ஆண்டுகள் மட்டும் பணிபுரிந்த நிலையில், அவரது சொந்த மாவட்டத்திற்கு மாறுதலானார்.


        இரண்டாண்டு காலத்தில், இரண்டு நிர்வாக அலுவலர்களை முத்தாரம்மன் கோவில் அடுத்தடுத்து சந்தித்திருந்த வேளையில், மூன்றாவதாக குலசை கோவிலில் பொறுப்பு ஏற்கும் வாய்ப்பை நான் பெற்றேன். மேலும், அந்நாளில் செட்டியாபத்து கோவில் வருமானம் அதிகமாகவும், குலசை கோவில் வருமானம் மிகக் குறைவாகவும் இருந்ததால், செட்டியாபத்து எனக்கு தலைமையிடமாக (Headquarters) நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. எனவே, செட்டியாபத்து அருகிலுள்ள உடன்குடியில் தங்கி, இரண்டு கோவில் நிர்வாகத்தையும் அன்றாடம் கவனிக்கும் பொருட்டு, உடன்குடிக்கு கிழக்கே சுமார் 4 கி.மீ. தூரத்தில் இருந்த குலசைக்கு காலை வேளையிலும், உடன்குடிக்கு மேற்கே சுமார் 2 கி.மீ. தூரத்தில் இருந்த செட்டியாபத்துக்கு மாலை வேளையிலும், மாறி மாறி சைக்கிளில் மிதித்துப் பயணித்து பணியாற்றிய, எனது இளமைக் காலத்து இனிய நாட்கள் அவை.


 8. குலசேகரன்பட்டினம் ஊர் பெருமையும், சிறப்பும்.

 

   திருச்செந்தூர் - கன்னியாகுமரி கடற்கரை சாலையில், திருச்செந்தூருக்கு தெற்கில் சுமார் 13 கி.மீ தூரத்தில்குலசை என்று சுருக்கமாக அழைக்கப்படும் குலசேகரன்பட்டினம் எனும் வரலாற்று சிறப்பு மிக்க ஊர் உள்ளது. குலசேகர பாண்டிய மன்னன் பெயரால் உருவான இந்த ஊர், பாண்டிய நாட்டின் மிகச் சிறந்த இயற்கை துறைமுகமாகும். பழந்தமிழர்களின் கடல் கடந்த வணிகத்தில் குலசை அந்நாளில் சிறப்புற்று விளங்கியதாக கூறப்படுகிறது. குலசையில், தங்க நாணயங்கள் அச்சிடும் அக்கசாலை இருந்தது என்பதற்கு அடையாளமாக, அன்னை முத்தாரம்மன் சந்நிதிக்கு நேர் எதிரில் கிழக்கு நோக்கிய அருள் பார்வையில், அக்கசாலை விநாயகர் என்ற சுந்தர விநாயகர் இன்றளவும் அருள்பாலித்து வருகிறார்.


              கடற்கரை சிதம்பர ஈசுவரர் கோவிலுக்கு தெற்கில் உள்ள தெரு, அந்நாளில் ஏற்றுமதி, இறக்குமதி வணிக பொருட்களின் மையப் பகுதியாக இருந்துள்ளது. இதனால், இன்றளவும் இந்த தெரு, பண்டகசாலை தெரு என்றே அழைக்கப்பட்டு வருகிறது. அரபு நாட்டிலிருந்து குதிரைகள் பெருமளவில் இங்கு இறக்குமதி செய்யப்பட்டதாகவும், இலங்கை மற்றும் இந்தியாவின் மேற்கு கடற்கரை பகுதியில் உள்ள ஊர்களுடன் தொன்று தொட்டு, கடல் வணிகம் மிகவும் சிறப்பாக நடைபெற்று வந்ததாகவும் கூறப்படுகிறது.


        குலசையில் உள்ள பல வீடுகள், மிகப் பிரமாண்டமான முறையில் அந்நாளில் கட்டப்பட்டவை ஆகும்எனினும், எந்த ஒரு கட்டிடமும் சுடு செங்கற்கள் கொண்டு கட்டப்படவில்லை. மாறாக, குலசேகரன்பட்டினம் கடற்கரையை ஒட்டிய நிலத்தடி பகுதியிலிருந்து அறுத்து எடுக்கப்படும் மணல் கற்களால் சுண்ணாம்பு கலவை கொண்டு கட்டப்பட்டுள்ளதுவெள்ளையர் ஆட்சிக் காலத்தில், KLR (Kulasekara patnam Light Railway) என்ற பெயரில் இங்கு குறைந்த வேக ரயில் தொடர் இயக்கப்பட்டு வந்துள்ளது. பாரி சர்க்கரை ஆலை என்ற பெயரில், பதனீரிலிருந்து வெள்ளை சர்க்கரை தயாரிக்கும் ஆலை ஒன்றும் இங்கு இயங்கி வந்துள்ளது.


   அறம் வளர்த்த நாயகி உடனுறை காஞ்சி விஜய கச்சி கொண்ட பாண்டீஸ்வரர் கோவில், சிதம்பர ஈசுவரர் கோவில் ஆகிய இரண்டு சிவாலயங்களும், விண்ணவரம் பெருமாள் கோவில் என்ற ஒரு வைணவ ஆலயமும் இங்குள்ளது. இதில் முத்தாரம்மன் திருக்கோயில் ஊரின் மையப்பகுதியில் நடுநாயகமாக அமைந்துள்ளது. 'அட்டகாளி' எனப்படும் எட்டு காளி கோவில்கள் அமையப் பெற்ற சிறப்புள்ள ஊர் குலசை ஆகும்.


                   குலசை கடற்கரையை ஒட்டியுள்ள சிதம்பர ஈசுவரர் கோவில் மற்றும் திருச்செந்தூர் பிரதான சாலையில் இருந்து வரும் குலசேகரன்பட்டினம் விண்ணவரம் பெருமாள் கோவில் ஆகிய இரண்டு கோவில்களும், வருமானமின்றி அன்றாட பூஜைக்கே மிகவும் சிரமப்பட்டு கொண்டிருந்தது. இந்த சூழ்நிலையில், 1978 ஆம் ஆண்டில், குலசையில் கிராம நிர்வாக அலுவலர் சி்.சிவகாமிநாதன் என்பவர் பொறுப்பிலிருந்த இரண்டு கோவில்களையும், நான் பொறுப்பேற்றுக் கொண்டேன். இந்த இரண்டு கோவில்களும், அன்று முதல் முத்தாரம்மன் கோவிலின் துணைக் கோவில்களாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. 


9. நான் கண்ட குலசை முத்தாரம்மன் கோவில். 

 

       1978 ஆம் ஆண்டில் குலசை முத்தாரம்மன் கோவிலில் பொறுப்பேற்ற போது, ஒரு சாதாரண கிராமக் கோவில் எவ்வாறு இருக்குமோ அந்த அமைப்பில் மிகச் சிறியதாக இருந்தது. அன்றைய முத்தாரம்மன் கோவில் தோற்றத்தின் புகைப்படம் ஒன்று கீழே கொடுக்கப்பட்டுள்ளது. கோவில் முன்புற உயரமான ஓட்டு கொட்டகையின் கீழ், உலோகத் தகடுகள் ஏதும் பொதியப்படாமல், பெயரளவில் ஒரு சிறிய மரத்தாலான கொடிமரமும், கோவில் கருவறையின் (மூலஸ்தானம்) மேல் மிகச் சிறிய அளவில் விமானமும் இருந்தன. கருவறை உள்ளே சுவாமி ஞானமூர்த்தி ஈசுவரரும், அன்னை முத்தாரம்மனும் ஒரே பீடத்தில், வடக்கு நோக்கி அமர்ந்து அருள்பாலிக்கும் நிலையில், கருவறையின் வாசல் மிக விரிவாக, இன்றுள்ளது போன்றே இருந்தது.


           மேலும், பேச்சியம்மன் சந்நிதி, கருப்பசுவாமி சந்நிதி, பைரவர் சந்நிதி ஆகியன தற்போதுள்ள இடங்களிலேயே இருந்தனஆனால், மகாமண்டபம் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு இருந்தது. இதில், அர்த்த மண்டபத்தை ஒட்டியிருந்த பகுதி மிகத் தாழ்வாக கைக்கு எட்டும் உயரத்திலும், அதனை ஒட்டிய வடக்கு பகுதி, அதைவிடச் சற்று கூடுதலான உயரத்திலும் இருந்தன. மாறுபட்ட இரண்டு உயரங்களை கொண்ட மகாமண்டபத்துக்கு இடையே கிழக்கு மேற்காக, குறுக்கு சுவர் ஒன்றும் இருந்தது. குறுக்கு சுவரின் கீழ்புறத்தில், குனிந்து சென்று சந்நிதியில் தரிசனம் செய்யக் கூடிய அளவில், உயரம் குறைவான வாசல் ஒன்றும், சந்நிதியில் தரிசனத்தை முடித்து விட்டு திரும்ப வசதியாக, கருப்பசுவாமி சந்நிதிக்கு நேர் எதிரே சிறிய அளவில் வாசல் ஒன்றுமாக, இரண்டு வாசல்கள் அடுத்தடுத்து வடக்கு நோக்கி இருந்தன.


 


          நான் கண்ட குலசை முத்தாரம்மன் கோவில் -1978


 

       கருவறைக்கு முன்பாக இருந்த அர்த்த மண்டப நுழைவு வாசல் மிகச் சிறிய அளவில் இருந்ததால், ஒரே நேரத்தில் பத்து அல்லது பதினைந்து பேர் மட்டுமே, சந்நிதி முன்பாக நின்று சுவாமி தரிசனம் செய்யும் நிலை இருந்தது. மேலும் கொடிமரம் அமைந்திருந்த ஓட்டுக் கொட்டகை மண்டபத்தின் பிரதான வாசல் வழியாக கோவிலுக்குள் சென்று, அதே வழியாக திரும்ப வெளியே வரும் நிலைமை இருந்ததால், திருவிழா காலங்களில் கோவிலுக்குள் சென்று தரிசனம் செய்து திரும்புவதற்கு, பக்தர்கள் மிகவும் சிரமப்பட்டனர்.


            கோவில் சுவர்கள் அனைத்தும், குலசை கடற்கரைப் பகுதியில் அறுத்து எடுக்கப்படும் மணல் கற்களைக் கொண்டு, சுண்ணாம்பு கலவை கொண்டு கட்டப்பட்டு இருந்தது. கடற்கரை உப்புக் காற்று காரணமாக, சுவர்களின் மேல் பூச்சு ஆங்காங்கே உதிர்ந்தும், மகாமண்டப மேற்கூரை மற்றும் தரைப் பகுதி நீர்க் கசிவு காரணமாக ஆங்காங்கே பழுதான நிலையிலும் இருந்தன. மகாமண்டபத்தில் ஒரு சிறிய இரும்பு உண்டியலும்கொடிமர ஓட்டுக் கொட்டகையின் வெளி முகப்பின் வலதுபுற சுவரில் பதிக்கப்பட்ட நிலையில் ஒரு சிறிய இரும்பு உண்டியலும் ஆக இரண்டு சிறிய இரும்பு உண்டியல்கள் மட்டும் பக்தர்கள் காணிக்கை செலுத்த வசதியாக வைக்கப்பட்டு இருந்தன.


               கோவிலுக்கு வெளியில் முன்புறம், கீழ் வரிசையில் ஆஸ்பெஸ்டாஸ் மேற்கூரை அமைப்புடன் கூடிய கோவில் கல்யாண மண்டபம் ஒன்றும், அதன் எதிரே மேல் வரிசையில் சிறிய அளவில் கோவில் அலுவலகமும் இருந்தன. கோவிலைச் சுற்றி, கிழக்கில் ஒன்றும், தெற்கில் ஒன்றுமாக இரண்டு தேங்காய் பழக்கடைகள் மட்டுமே அந்நாளில் இருந்தன. வாராந்திர செவ்வாய், மாதாந்திர செவ்வாய், ஆடிக்கொடை மற்றும் தசரா திருவிழா காலங்களில் மட்டும் பக்தர்கள் வருகை குறிப்பிட்டுக் கூறும் அளவில் இருந்தது


 10. அந்நாளில் கோவில் வருமானம், தினப்பூஜை மற்றும் பணியாளர்கள். 

 

   1978 ல் நான் பொறுப்பேற்ற போது, குலசை முத்தாரம்மன் கோவிலின் ஆண்டு வருமானம், சுமார் ₹15,000/- என்ற அளவில்தான் இருந்தது. இந்த வருமானம் உண்டியல், அர்ச்சனை சீட்டு விற்பனை மற்றும் காணிக்கை பொருட்கள் விற்பனை மூலம் கிடைத்தன.


          தினசரி இரண்டு கால பூஜைகள் மட்டும் கோவிலில் நடைபெற்று வந்தது. கோவில் நடை, தினசரி காலை 8-00 மணிக்கு திறந்து, பகல் 12-00  மணிக்கு உச்சிகால பூஜையும், உச்சி கால பூஜை முடிந்தவுடன், பகல் 12.30 மணி அளவில் கோவில் நடை மூடப்பட்டு வந்தது. பின்னர் மாலை 5.00  மணிக்கு கோவில் நடை மீண்டும் திறக்கப்பட்டு இரவு 8.00 மணிக்கு அர்த்த ஜாம பூஜையும், அர்த்த ஜாம பூஜை முடிந்த பின்னர் இரவு 8.30 மணி அளவில் கோவில் நடை மூடப்பட்டு வந்தது.


              அந்நாளில், ஐந்து பணியாளர்கள் மட்டும் மிகவும் குறைந்த ஊதியத்தில் கோவில் பணியில் இருந்தனர். இவர்களில் அர்ச்சகர் எஸ்.சுப்பிரமணிய பட்டர் என்பவர் ₹10/- மாத ஊதியமும், மணியம் அ.இசக்கி என்பவர் ₹55/- மாத ஊதியமும், இரவு காவலர் எஸ்.செந்தில் கோனார் என்பவர் ₹30/- மாத ஊதியமும், உள்துறை பலவேலை ஒ.மகாலிங்க கோனார் என்பவர் ₹/2- வார ஊதியமும், உள்துறை திருவலகு பணி ஈசுவரத்தம்மாள் என்பவர் ₹2/- வார ஊதியமும் பெற்று வந்தனர். ஊழியர்கள் சம்பளச் செலவு, கோவில் வருமானத்திற்கேற்ப மிகவும் குறைவாக இருந்தது.


               உள்துறை பலவேலை பணியாளர் ஒ.மகாலிங்க கோனார், தினசரி மாலை வேளையில் சுமார் 4 கி.மீ. தொலைவிலிருந்த உடன்குடிக்கு சைக்கிளில் சென்று, அங்கிருந்து அர்த்தஜாம (இரவு நேர) பூஜைக்கு வேண்டிய தீப எண்ணைசூடம்பத்தி, சந்தனம்குங்குமம், மாலைகள் போன்ற பொருட்களை பலரிடம் நன்கொடையாகப் பெற்று, இரவு 7.30  மணியளவில் அர்த்தஜாம பூஜை நடைபெறும் நேரத்திற்கு சற்று  முன்பாக, கோவிலுக்கு கொண்டு வந்து சேர்ப்பதை வழக்கமாக கொண்டிருந்தார். இதை அவர் தனது வாழ்நாள் முழுவதும் செய்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


11. அந்நாளில் இருந்த திருவிழா நடைமுறைகள்.

 

   மாதாந்திர கடைசி செவ்வாய், ஆடிக்கொடை, தசரா திருவிழா போன்ற திருவிழாக்கள் அனைத்தும் தற்போதுள்ள வழக்கமான நடைமுறையில் அந்நாளில் நடைபெற்றன. எனினும், வெளியூர்களில் இருந்து கோவிலுக்கு வரும் பக்தர்கள் வருகை மிகவும் குறைவாகவே இருந்தது. அன்று வீட்டுக்கு வீடு தொலைக் காட்சி பெட்டிகள் இல்லாத காலம் என்பதால், ஆடிக் கொடை விழா நாட்களில் நடைபெற்ற வில்லிசை, மகுட இசை, கரகாட்டம் போன்ற நிகழ்ச்சிகள், தசரா திருவிழா நாட்களில் நடைபெறும் கலை நிகழ்ச்சிகள் ஆகியவற்றை காண, உள்ளூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள மக்கள் திரளாக கோவில் முன்பாக கூடினர். ஆனால், கோவில் மிகவும் குறுகிய இடத்தில் இருந்ததால், திருவிழா நாட்களில் ஏற்படும் நெரிசலை சமாளிப்பது கோவில் நிர்வாகத்திற்கு பெரும் சவாலாக இருந்து வந்தது. 


          மேலும், திருவிழா நாட்களில், இரவு நேர கலை நிகழ்ச்சிகள் நடத்த கோவிலில் அதற்கென தனியாக இடவசதி ஏதும் இல்லாததால், கோவில் கொடிமர மண்டப ஓட்டுக் கொட்டகையின் பிரதான வாசலை ஒட்டி மேல்புறமாக, வடக்கு நோக்கி சிறிய அளவில் ஒரு தற்காலிக மேடை அமைத்து, அதில் கொடை விழா மற்றும் தசரா நாட்களில் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. தசரா திருவிழா ஆறாம் திருவிழா இரவுப் பொழுது முதல், தசரா குழுவினர் மேளதாளம் முழங்க காப்புக் கட்ட வரத் துவங்கி விடுவர். எனவே, கலை நிகழ்ச்சிகள் அனைத்தும் ஆறாம் திருவிழாவுடன் நிறைவு செய்யப்பட்டுகோவில் முன்பு அமைக்கப்படும் தற்காலிக மேடையை அகற்றும் நிலை இருந்தது. 1978, 1979 ஆகிய ஆண்டுகளில், இத்தகைய நடைமுறையைப் பின்பற்றியே ஆடிக் கொடை விழா மற்றும் தசரா திருவிழா கலை நிகழ்ச்சிகளை நான் இங்கு நடத்தினேன்.


          அந்நாளில் தசரா திருவிழா முதல் நாளான கொடியேற்ற நாளன்று மட்டும், பக்தர்கள் வருகை அதிக அளவில் இருந்தது. அதன்பின் ஆறாம் திருவிழாவுக்கு பின்னரே, வெளியூர் பக்தர்களின் வருகை இருந்தது. இரண்டாம் திருவிழா முதல் ஆறாம் நாள் திருவிழா வரையில் பகல் பொழுதில் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை மிக மிக குறைவாக இருந்தது


         இந்த சூழ்நிலையில், தசரா திருவிழா நாட்கள் பகல் பொழுதிலும் பக்தர்கள் வருகையை அதிகரிக்கச் செய்யும் நோக்கத்தில், 1985 ஆம் ஆண்டில் குடமுழுக்கு நன்னீராட்டுப் பெருவிழா முடிந்ததும், அந்த ஆண்டில் தசரா திருவிழா கொடியேற்ற நாளிலிருந்து ஒவ்வொரு நாள் பகல் பொழுதிலும், காலசந்தி, உச்சி காலம் மற்றும் சாயரட்சை ஆகிய பூஜைகால வேளைகளில், மூலவர் முத்தாரம்மன் மற்றும் ஞானமூர்த்தி ஈசுவரருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் ஆராதனைகள் தொடர்ந்து நடைபெறும் வகையில், உபயதார்கள் மூலம், புதிதாக சிறப்பு அபிஷேக கட்டளைகள் உருவாக்கப்பட்டன. இதன் காரணமாக, தசரா திருவிழா நாட்களில் பகல் பொழுது வேளையிலும், பக்தர்கள் வருகை அதிகரிக்கத் தொடங்கியது.


         தசரா திருவிழா 10 ஆம் திருவிழா நாளில், மகிசாசுர சம்ஹார நிகழ்ச்சி இரவு 12 மணியளவில் காவலர் குடியிருப்பை ஒட்டி அமைந்துள்ள உதயமார்த்தாண்ட விநாயகர் கோவிலில் இருந்து, முத்தாரம்மன் கோவிலுக்கு எதிரே அமைந்துள்ள அக்கசாலை விநாயகர் என்ற சுந்தர விநாயகர் கோவில் வரையிலும், கிழக்கு மேற்காக இருக்கும் குறுகிய தெருவில் நடைபெற்று வந்தது. இது மிகவும் குறுகலான தெரு என்பதால், மகிசாசுர சம்ஹார நிகழ்ச்சி நடைபெறும் நேரத்தில், பக்தர்கள் மிகுந்த நெரிசலில் சிக்கித் தவிக்கும் நிலை இருந்தது.


12. கோவிலுக்கு எதிரில், இடையூறாக இருந்த தனியாருக்கு சொந்தமான நீண்ட மதில் சுவர்.

 

     1978ல் நான் பொறுப்பேற்ற போது, குலசை முத்தாரம்மன் கோவிலுக்கு முன்பாக மேல்புறத்தில், கிராம நத்தம் புல எண் 186-1 ல், 44  சென்ட் அளவுள்ள காலிமனை நிலம், தனியாருக்கு சொந்தமாக இருந்து வந்தது. இந்த காலி மனையை சுற்றி நான்கு எல்லைகளிலும் மதில் சுவர் (Compound wall) எழுப்பப்பட்டு இருந்தது. காலி மனையின் கிழக்கு மற்றும் தென்கிழக்கு எல்லையிலிருந்த சுற்று மதில் சுவரின் ஒரு பகுதி, முத்தாரம்மன் கோவிலுக்கு நேர் எதிரே Lவடிவத்தில் இருந்தது.


          இந்த Lவடிவ சுற்று மதில் சுவரின் கிழக்குப் பகுதி, கோவிலுக்கு எதிரில் தெற்கிலிருந்து வடக்காக, சுமார் 105 அடி (32மீட்டர்) நீளமும், சுமார் 6 அடி (2மீட்டர்) உயரமும் கொண்டதாக இருந்தது. இந்த சுவர் பராமரிப்பு ஏதுமின்றி, பாசி படிந்து, கரிய நிறத்தில் இருந்தது. பழமையான இந்த மதில் சுவர், திருவிழா காலங்களில் பக்தர்களுக்கு மிகுந்த நெரிசலையும், பாதுகாப்பற்ற ஒரு நிலையையும் உருவாக்கி இருந்தது. இத்தகைய சூழ்நிலையில், பக்தர்களுக்கு பெரிதும் இடையூறாக இருந்து வந்த பழமையான நீண்ட மதில் சுவரை, இடித்து அப்புறப்படுத்தி விட வேண்டும் என முடிவு செய்தேன். 

 

       குலசை முத்தாரம்மன் கோவிலில் நான் பொறுப்பேற்ற நாள் முதல், குலசேகரன் பட்டினத்தைச் சேர்ந்த பலர் எனக்கு அறிமுகமாகி இருந்தனர். அவர்களில், எஸ்.சுப்பையா பாண்டியன், இ.பி.பாண்டியன், கிராம முன்சீப் சிவசுப்பிரமணிய பிள்ளை, திருவருள் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் வீரபாகு பிள்ளை, ஓய்வு பெற்ற ஆசிரியர் இசக்கிதாஸ், ஓய்வு பெற்ற ஆசிரியர் மகாலிங்கம் பிள்ளை, தியாகி காசியா பிள்ளை, சிவா என்ற ஏ.எஸ்.லெட்சுமண பிள்ளை, புதுத்தெரு ஆதித்த பிள்ளை, அஞ்சலகர் அணைந்த பெருமாள் பிள்ளை, பந்தல் சுடலைமுத்து தேவர், விஸ்வகர்ம தொழிலியல் கூட்டுறவு சங்க செயலர் எஸ்.இரகுநாதன், இந்தியன் வங்கி கந்தசாமி ஆகியோர் குறிப்பிடத் தக்கவர்கள் ஆவர். இதில், எஸ்.சுப்பையா பாண்டியன், இ.பி.பாண்டியன் ஆகிய இருவரும், கோவிலுக்கு எதிரில் பக்தர்களுக்கு இடையூறாக இருந்த நீண்ட மதில் சுவரை இடித்துத் தள்ளும் எனது முயற்சிக்கு ஆதரவு அளித்தனர். 

 

              எனவே, எஸ்.சுப்பையா பாண்டியன், இ.பி.பாண்டியன் ஆகியோர் மூலமாக, கோவிலுக்கு எதிரில் இருந்த காலி மனை உரிமையாளரை அணுகி, அதனை விலைக்குப் பெறும் முயற்சியில் இறங்கினேன். ஆனால், காலிமனை உரிமையாளர் காலிமனையை உடனடியாக விற்பனை செய்ய முன்வரவில்லை. எனினும், எனது தொடர் முயற்சியை கைவிட்டு விடாமல், நம்பிக்கையோடு காத்திருந்தேன். மேலும், இந்த பிரச்சனையில் அப்போது எனக்கு நேரடியாக உதவ, அறங்காவலர் குழு அல்லது திருப்பணி குழு போன்ற நிர்வாகம் சார்ந்த அமைப்புகளும் இல்லை.

 

             குலசையில் பிறந்து வளர்ந்தோர் அல்லது அருகில் உள்ள ஊர்களிலிருந்து முத்தாரம்மன் கோவிலுக்கு அடிக்கடி வந்து சென்றவர்கள் ஆகியோரில், தற்போது அறுபது வயதை எட்டும் நிலையில் உள்ளோர் அல்லது அதற்கும் மேற்பட்ட வயதுடையோர், கோவிலுக்கு எதிரில் இருந்த இந்த நீண்ட பழமையான மதில் சுவர் குறித்து அறிந்திருக்க கூடிய வாய்ப்பு உள்ளது. மற்றவர்கள் நிச்சயம் அறிந்திருக்க வாய்ப்பில்லை.


       1978 ஆம் ஆண்டில் குலசை முத்தாரம்மன் கோவில் நிர்வாக அலுவலராக பொறுப்பேற்றவுடன், நடந்த தசரா திருவிழாவின் போது எடுக்கப்பட்ட பந்தல் மற்றும் மின்னொளி வண்ணப் புகைப்படம் கீழே தரப்பட்டுள்ளது. 43 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா காட்சியையும், அன்றைய நாளில் கோவில் முன்பாக இருந்த சுற்றுப்புற சூழலையும் இந்த படம் நம் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறது.

 

  குலசையை சேர்ந்த அன்பர் ஒருவர் (அவரது பெயர் நினைவில் இல்லை) வெளிநாட்டில் அப்போது வேலை பார்த்து வந்தார். 1978 ஆம் ஆண்டு தசரா திருவிழா நேரத்தில், அவர் குலசைக்கு வந்திருந்த போது, இரவு நேரத்தில் மின்னொளியுடன் கூடிய கோவில் முகப்பு அலங்கார பந்தலை படம் எடுத்து, அவர் பணிபுரிந்த வெளி நாட்டில் கொண்டு போய் பிரதி (Print) எடுத்து, இந்த படம் மட்டுமல்லாது அந்த நேரத்தில் எடுத்த வேறு சில படங்களையும் சேர்த்து எனக்கு அனுப்பி இருந்தார்வண்ணப் புகைப்படம் என்பது நமது நாட்டில் மிகவும் அரிதாக இருந்த நேரம் அது.


 


1978 தசரா பந்தல் மின் அலங்காரம்-  கோவிலுக்கு எதிரில் இருந்த நீண்ட மதில் சுவர்

 

இந்த படத்தில், கொடிமர மண்டப ஓட்டுக் கொட்டகையின் பிரதான வாசலை ஒட்டி, மேல்புறமாக அமைந்துள்ள சிறிய தற்காலிக மேடையில் தசரா திருவிழா கலை நிகழ்ச்சி நடைபெறுவதையும், அதனை பொது மக்களில் பலர் தரையில் அமர்ந்தும், சிலர் மதில் சுவரில் சாய்ந்தும் பார்க்கக் கூடிய காட்சியை இதில் காணலாம். அதுபோல, குறுகலான சந்நிதி தெருவையும், கோவிலுக்கு எதிரில் நெருக்கடியை ஏற்படுத்தி இருந்த தனியார் மதில் சுவரின் கிழக்கு பகுதி, வலது ஓரத்தில் (அம்புகுறி இட்ட பகுதி) தெரிவதையும் படத்தில் காணலாம்.


 13. காலிமனையை விலைக்கு வாங்க இயலாததால் ஏற்பட்ட மனக்குழப்பம்.           


           நான் பொறுப்பேற்று ஓராண்டு காலம் ஆகியும் கூட, கோவிலுக்கு பெரிதும் இடையூறாக இருந்து வந்த மதில் சுவரை இடித்துத் தள்ளும் எனது முயற்சியில் எந்த ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றமும் ஏற்படவில்லை. இந்த சூழ்நிலையில், 1979 ஆம் ஆண்டு தசரா திருவிழா கொடியேற சில நாட்கள் இருந்த போது, காலி மனையை விற்பனை செய்வதற்கு, அதன் உரிமையாளர் இல்லங்குடியா பிள்ளை என்பவர் விரும்புவதாகவும்₹7000/- விலை கேட்பதாகவும், குலசை எஸ்.சுப்பையா பாண்டியன் அவர்கள் எனது கவனத்திற்கு கொண்டு வந்தார்.


          இந்த சூழ்நிலையில், தனிநபர் எவரேனும், வணிக நோக்கத்தில் கோவிலுக்கு போட்டியாக, சுமார் அரை ஏக்கர் பரப்பளவு உள்ள இந்த காலி மனையை வாங்க முற்பட்டால், கோவில் முன்பாக இருந்து வரும் நெருக்கடிக்கு தீர்வே இல்லாமல் பேய் விடும் என கருதினேன். எனவே, கோவில் நிதியிலிருந்து அல்லது நன்கொடையாளர் மூலம், காலிமனையை விலைக்கு வாங்கி விட வேண்டும் என்பதில் மிகவும் உறுதியாக இருந்தேன்.

    

          மேலும், முத்தாரம்மன் கோவிலில் அறங்காவலர் குழு இல்லாத சூழ்நிலையில், நான் கோவில் தக்கார் ஆக இருந்து வந்தேன். உடன்குடி ஊராட்சி ஒன்றிய வேளாண்மை விரிவாக்க அலுவலர், கோவில் இரண்டாம் சாவி பொறுப்பு அலுவலராக இருந்து வந்தார். ஆனால், கோவிலின் ஒட்டு மொத்த நிர்வாகப் பொறுப்பும் என்னிடம் இருந்தும் கூட, காலி மனையை கோவில் நிதியிலிருந்து வாங்குவதற்கு உரிய கால அவகாசம் இல்லாமல் போனது. மேலும் சம்மந்தப்பட்ட காலிமனை, கிராம நத்தம் வகைப்பாடு நிலமாக இருந்ததால், இதனை விலைக்குப் பெற அறநிலையத்துறை அனுமதி வழங்குமா என்ற ஐயமும் என்னுள் இருந்தது. எனவே, காலம் தாழ்த்தாது காலி மனையை யார் மூலமாவது கோவிலுக்கு நன்கொடையாக பெற்று விட வேண்டும் என நினைத்தேன்.


            ஆனால், நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு ₹7000/- என்பது மிகவும் மதிப்புள்ள ஒரு தொகையாக இருந்தது. ஏனெனில், ஒரு பவுன் (8 கிராம்தங்கம் ₹500/- க்கு விற்ற நேரம்.  மேலும், பணப்புழக்கம் மக்களிடம் மிக மிக குறைவாக இருந்த நேரம் அது. மேலும், நான் பொறுப்பேற்று ஓராண்டு காலமே ஆகியிருந்த நிலையில், ₹7000/- செலவு செய்து, காலி மனையை வாங்கி கோவிலுக்கு கொடுக்க விரும்பும் ஒரு நன்கொடையாளரை, தேடி அடையாளம் காண்பது அவ்வளவு எளிதான செயலாக இல்லை. ஒருவேளை, காலி மனையை கோவிலுக்கு வாங்கும் எனது முயற்சி தோல்வி அடைந்தால் என்ன செய்வது என்ற கேள்வி எழ, மிகுந்த மனக் குழப்பத்திற்கு ஆளானேன். 


14. காலி மனை - நன்கொடையாளரை அடையாளம் காட்டிய அன்னை.

 

  இத்தகைய சூழ்நிலையில், 1979 ஆம் ஆண்டு தசரா 10 ஆம் திருவிழா கோலாகலமாக நடந்து கொண்டிருந்த இரவுப்பொழுது அது. மேளதாளம், தாரை தப்பட்டைகள் முழங்க அணி அணியாக தசரா குழுவினர்கள் அன்னையின் அருள் நாடி கோவிலை வலம் வந்து கொண்டு இருந்தனர். எங்கு நோக்கினும் பக்தர்களின் நெரிசல், ஆரவார பேரொலி, இசைக்கருவிகள் எழுப்பிய முழக்கம் என கோவிலைச் சுற்றிலும் அதிர்ந்து கொண்டிருந்தது. இந்த ஆரவாரச் சூழலில், உடன்குடி அருகே உள்ள சுண்டங்கோட்டை என்ற ஊரைச் சேர்ந்த சிவ.சௌந்திரபாண்டிய நாடார் அவர்கள் மனதில் கோவிலுக்கு நன்கொடை வழங்கும் எண்ணத்தை உருவாக்கி, எனது மனக் குழப்பத்திற்கு தீர்வு காண, ஆலய அலுவலகத்தில் இருந்த என்னிடம் அனுப்பி வைத்தாள் அன்னை.


           கோவில் அலுவலகத்திற்கு வந்த சிவ.சௌந்திரபாண்டிய நாடார் அவர்கள், என்னை நேரில் சந்தித்து, கேரளாவில் வணிக நிறுவனம் ஒன்றை நடத்தி வருவதாக தன்னைப் பற்றி அறிமுகப்படுத்தி கொண்டு, கோவிலுக்கு பயன்படக் கூடிய பித்தளை சமையல் பாத்திரங்கள் அல்லது விளக்குகள் போன்றவற்றை, சுமார் ₹5000/- மதிப்பில் வாங்கி கொடுக்க விரும்புவதாக தெரிவித்தார். எனது மனக் குழப்பத்தை தீர்த்து வைக்க, தசரா திருவிழா 10 ஆம் திருவிழா நன்னாளில் நன்கொடையாளரை அனுப்பி, அடையாளம் காட்டிய அன்னையின் அருளை எண்ணி எண்ணி வியந்தேன். ஆழ்ந்த தெய்வ நம்பிக்கை கொண்ட எனக்கு, இந்த நிகழ்வு அன்னை முத்தாரம்மன் மீதான நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தியது.


           கோவிலுக்கு தளவாடப் பொருட்களை வாங்கி கொடுக்க முன்வந்தவரிடம், காலி மனையை வாங்கித் தர வேண்டும் என்ற எனது விருப்பத்தை உடனடியாக தெரிவிக்க விரும்பவில்லை. காரணம் கோவிலுக்கு என்ன தேவை என்பதை, தசரா திருவிழா முடிந்தவுடன் பேசி முடிவு செய்து கொள்ளலாம் என்ற முடிவுக்கு வந்தேன். மேலும், அன்னை முத்தாரம்மன் சம்ஹாரத்திற்கு புறப்பட ஆயத்தமாகி கொண்டிருந்த பரபரப்பான நள்ளிரவுப் பொழுது என்பதால், கோவிலைச் சுற்றிலும் இசைக் கருவிகளின் மிகப்பெரும் பேரிரைச்சலுக்கு இடையே ஒருவருக்கொருவர் மனம் விட்டு பேச முடியாத நிலைமை இருந்தது. இந்த சூழ்நிலையில், தசரா திருவிழா முடிந்த பின்னர், ₹5000/- க்கு எ‌‌ன்ன வாங்கலாம் என்பது குறித்து யோசித்து முடிவு செய்யலாம் எனக்கூறி, தரிசனம் செய்ய வருகை தந்த சிவ.சௌந்திரபாண்டிய நாடார் மற்றும் அவரது குடும்பத்தினரைகோவிலுக்குள் அழைத்துச் சென்று தரிசனம் செய்து அனுப்பி வைத்தேன்.


15. காலிமனை - கோவிலுக்கு வாங்கி கொடுக்க சம்மதித்த நன்கொடையாளர்.

 

சுண்டங்கோட்டை சிவ.சௌந்திரபாண்டிய நாடார் அவர்கள் கோவிலுக்கு வந்து சென்ற பின்னர், காலி மனையை வாங்கி விடலாம் என்ற நம்பிக்கை எனக்கு ஏற்பட்டது. எனவே, தசரா திருவிழா முடிந்தவுடன் அடுத்த கட்ட நடவடிக்கையில் இறங்கினேன்இந்த காலி மனையின் உட்பகுதி முழுவதும் வேலிக்கருவை செடிகள் முளைத்து புதர் போல அடர்ந்து இருந்தது. மேலும், கோவிலுக்கு முன்பாக தெற்கு வடக்காக இருந்த நீண்ட மதில் சுவரில் காலி மனைக்கு செல்ல, எந்த ஒரு இடத்திலும் வாசல் அல்லது வழி எதுவும் இல்லை. அதேவேளையில், இந்த காலி மனைக்கு செல்ல, கோவிலுக்கு வடக்கே, திருச்செந்தூர் பிரதான சாலைக்கு தெற்கில், குலசை அரசு மருத்துவ மனையின் கிழக்கு மதில் சுவரை ஒட்டி, தெற்கு வடக்காக சுமார் 80 அடி (24மீட்டர்) நீளம்சுமார் 13 அடி (4மீட்டர்) அகலத்தில் தனியார் பாதை இருந்தது.


            திருச்செந்தூர் செல்லும் பிரதான சாலை முகப்பில், வடக்கு நோக்கி இருந்த, இந்த பாதை உள்ளிட்ட சுமார் 17 சென்ட் இடத்தில், சிறிய அளவில் உணவு விடுதி ஒன்றை நடத்தி வந்த நில உரிமையாளர் இல்லங்குடியா பிள்ளை என்பவர், அந்த இடத்தை தன்னுடைய கையிருப்பில் வைத்து கொண்டு, முத்தாரம்மன் கோவிலுக்கு மேல்புறம் இருந்த 44 சென்ட் காலி மனை நிலத்தை மட்டும் முதலில் விற்பனை செய்ய முன்வந்தார்சிறிது காலம் கழித்து அதே நில உரிமையாளர், தனது கையிருப்பில் இருந்த சுமார் 17 சென்ட் மனை நிலத்தையும், சுண்டங்கோட்டை திருமதி பூமணி அம்மாள் மற்றும் அவரது புதல்வர் டி.எஸ்..ஜோதி ஆனந்தன் குடும்பத்தினரிடம் விற்பனை செய்தார். பின்னாளில், திருமதி பூமணி அம்மாள் அவர்களிடமிருந்து 17 சென்ட் நிலத்தையும், கோவிலுக்கு நன்கொடையாக பெற்றேன். 


             இந்த சூழ்நிலையில், முத்தாரம்மன் கோவிலை ஒட்டி, மேல்புறம் ஏறத்தாழ அரை ஏக்கர் நிலப்பரப்பில் இருந்த காலிமனையின் முழு அமைப்பையும், வெளியிலிருந்து பார்ப்பதற்கு அதனைச் சுற்றி இருந்த மதில் சுவரும், உள்ளேயிருந்த முட்புதரும் இடையூறாக இருந்தது. எனவே, மதில்சுவருக்கு உள்பகுதியில் சென்று சுற்றிப் பார்த்தால், காலி மனையின் அமைப்பை முழுமையாக நன்கொடையாளரிடம் எடுத்துக் கூறி, சம்மதம் பெற எளிதாக இருக்கும் எனக் கருதினேன். எனவே, காலிமனையை விலைக்கு பெறும் முயற்சியில் எனக்கு துணையாக இருந்த குலசை எஸ்.சுப்பையா பாண்டியன், குலசை இ.பி.பாண்டியன் ஆகிய இருவரையும் உடன் அழைத்துக் கொண்டு, கோவில் ஊழியர் அ.இசக்கி உள்ளிட்ட நாங்கள் நால்வரும், மேலே குறிப்பிட்ட தனியார் வழித்தடம் வழியாக, காலி மனையின் அமைவிடத்தை மேலோட்டமாக சுற்றிப் பார்க்கும் எண்ணத்தில் உள்ளே சென்றோம்.


            ஆனால், காலி மனையின் உள்ளே போன பின்னர், அங்கு அடர்ந்திருந்த வேலிக்கருவை முட்புதர் மட்டுமின்றி, பழைய கட்டிடத்திலிருந்து இடிக்கப்பட்ட கட்டிடக் கழிவு கற்களும், பழைய கட்டிடத்தின் அஸ்திவார சுவர் பகுதிகளும் தோண்டி எடுக்கப்படாமல், அப்படியே ஆங்காங்கே விடப்பட்டு இருந்த காட்சியைக் கண்டோம். எனவே காலிமனை பகுதிக்குள் நுழைந்த நாங்கள் நால்வரும், முட்புதருக்கும், கற்குவியலுக்கும் இடையே அகப்பட்டு மிகவும் சிரமப்பட்டு அங்கிருந்து மீண்ட நிகழ்வு, இன்று வரை நீங்காத நினைவுதான். 


            தசரா திருவிழா முடிந்து சில நாட்கள் கழித்து சிவ.சௌந்திரபாண்டிய நாடார் அவர்களை நேரில் சந்தித்து, ₹5000/- மதிப்புள்ள தளவாட சாமான்களுக்கு பதிலாக, கோவிலுக்கு இன்றியமையா தேவையாக இருந்த, ₹7000/- மதிப்பிலான காலிமனை நிலத்தை நன்கொடையாக வாங்கித் தர வலியுறுத்துவதென முடிவு செய்தேன்.  சிவ. சௌந்திரபாண்டிய நாடார் அவர்களது சொந்த ஊரான சுண்டங்கோட்டையில் உள்ள அவரது இல்லத்திற்கு, கோவில் அர்ச்சகர் எஸ்.சுப்பிரமணிய பட்டர், கோவில் ஊழியர் அ.இசக்கி ஆகிய இருவரையும் உடன் அழைத்து கொண்டு, மரியாதை நிமித்தமாக நேரில் சந்திக்கச் சென்றேன். நேரில் சந்தித்து, காலி மனையை வாங்குவது குறித்த எனது விருப்பத்தை தெரிவித்தேன். ஆனால், எனது விருப்பத்திற்கு எவ்வித மறுப்பும் தெரிவிக்காது, காலி மனையை கோவிலுக்கு வாங்கி கொடுக்க, சுண்டங்கோட்டை சிவ.சௌந்திரபாண்டிய நாடார் அவர்கள் சம்மதம் தெரிவித்த போது, நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை என்றே கூறலாம்.


16. கோவிலுக்கு இடையூறாக இருந்த மதில் சுவர் - இடித்து தள்ளப்பட்டது.  

 

குலசேகரன்பட்டினம் கிராம நத்தம் புல எண் 186-1 ல் 44 சென்ட் அளவுள்ள  மனை நிலம், இல்லங்குடியா பிள்ளை என்பவரிடமிருந்து, சிவ.சௌந்திரபாண்டிய நாடார் அவர்களால் 1980 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கிரயம் பெறப்பட்டது. இந்த இடத்தை விலைக்கு வாங்க வேண்டும் என்பதில், ஆரம்ப நாளிலிருந்தே எனக்கு மிகவும் துணையாக இருந்த குலசை எஸ்.சுப்பையா பாண்டியன் மற்றும் குலசை இ.பி.பாண்டியன் ஆகியோர் முன்னிலையில்கோவிலுக்கு எதிரில் நீண்ட நெடுங்காலமாக அதன் வளர்ச்சிக்கு இடையூறாக இருந்த, 105 அடி நீளமுள்ள பழமையான மதில் சுவர் இடித்து அகற்றப்பட்டது.  


        1980 ஆம் ஆண்டில் சுண்டங்கோட்டை சிவ.சௌந்திரபாண்டிய நாடார் அவர்களிடமிருந்து கோவிலுக்கு நன்கொடையாக பெறப்பட்ட, 44 சென்ட் அளவுள்ள இந்த காலி மனை நிலம்தான், குறுகிய இடத்திலிருந்த கோவிலை விரிவுபடுத்தவும், பக்தர்களுக்கான வசதிகளை மேம்படுத்தவும், அடுத்த கட்ட வளர்ச்சிக்கு கோவிலை கொண்டு செல்லவும் புதிய வாய்ப்பை உருவாக்கி கொடுத்தது.


17. சிவ.சௌந்திரபாண்டிய நாடார் அவர்களது தொடர் அறப்பணிகள்.

 

சுண்டங்கோட்டை சிவ.சௌந்திரபாண்டிய நாடார் அவர்கள், குலசை கிராம நத்தம் சர்வே எண் 186-1 ல் 44 சென்ட் காலிமனை நிலத்தை கோவிலுக்கு நன்கொடையாக வழங்கியதோடு நின்று விடவில்லை. தான் வாங்கிக் கொடுத்த காலி இடத்தில், படிப்படியாக பல்வேறு வளர்ச்சிப் பணிகளை தனது செலவில் செய்து கொடுத்தார். 1980 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட அவரது அறப்பணி, 1989 ஆம் ஆண்டில் கலையரங்கம் முன்பாக விரிவாக்க மண்டபம் ஒன்றை கட்டிக் கொடுக்கும் வரை, சுமார் 10 ஆண்டு காலம் தொடர்ந்து நீடித்தது.


 


 சுண்டங்கோட்டை சிவ.சௌந்திரபாண்டிய நாடார் அவர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பாராட்டு.

 

கோவிலுக்கு அருகில் காலி மனையை விலைக்கு வாங்கி கொடுத்தவுடன், திருவிழா காலங்களில் கலை நிகழ்ச்சிகளை எவ்வித இடையூறும் இல்லாமல் நடத்த வேண்டும் என்பதற்காக, முதலில் கிழக்கு நோக்கிய அமைப்புடன் கூடிய கலையரங்க மேடையையும், மேடைக்கு இடதுபுறம் கோவில் அலுவலக அறை, மேடைக்கு வலதுபுறம், சிறிய அளவில் ஒப்பனை அறை ஆகியவற்றையும் சுண்டங்கோட்டை சிவ. சௌந்திரபாண்டிய நாடார் அவர்கள் கட்டிக் கொடுத்தார். இதனால், 1980 ஆம் ஆண்டு முதல், தசரா திருவிழா நாட்களில் தொடர்ந்து ஒன்பது நாட்களும், மிகப்பெரிய நிகழ்ச்சிகளைக் கூட எளிதாக நடத்தும் வாய்ப்பு ஏற்பட்டது. அந்நாளில் திரைப்படத் துறையில் கொடிகட்டிப் பறந்த பலரது நிகழ்ச்சிகள் இந்த அரங்கத்தில் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


அதன்பின், சிவ.சௌந்திரபாண்டிய நாடார் அவர்கள், கலையரங்க வலது புறத்தில் ஓய்வு இல்லம் ஒன்றை கட்டிக் கொடுத்ததுடன், கலையரங்க வளாகத்தில் மிகவும் பழுதடைந்த நிலையில் இருந்த தெற்கு, மேற்கு மற்றும் வடக்கு சுற்று மதில் சுவர்களை பழுதுபார்த்தும், வடக்கு, தெற்கு சுற்று மதில் சுவர்களை ஒட்டி இருமருங்கிலும் பக்தர்களுக்கு நிழல் தரும் வகையில், பெரிய வேப்ப மரங்களை தனது ஊரிலிருந்து கொண்டு வந்து நட்டு கொடுத்தும், கலையரங்க வளாகத்தை பசுமைப் பகுதியாக மாற்றிக் கொடுத்தார்.


 18. காவல் நிலையம் செல்லும் இணைப்புச் சாலை - விரிவாக்கம்.


   முத்தாரம்மன் சந்நிதிக்கு முன்புறம், வடக்கு நோக்கிய சந்நிதி தெருவும், பின்புறம் தெற்கு நோக்கிய கீழமலையன் தெருவும், கோவிலுக்கு வந்து செல்ல எதிரெதிரே இரண்டு குறுகிய தெருப் பாதைகள் மட்டுமே இருந்தன. இதனால், திருவிழா காலங்களில், கோவிலுக்கு வந்து செல்வதில் பக்தர்கள் மிகப்பெரும் நெரிசலை எதிர் கொண்டனர். இந்த சூழ்நிலையில், கோவிலை மேற்கு பிரதான தார்ச் சாலையுடன் இணைக்கக் கூடிய மூன்றாவது பாதை, ஒற்றையடி பாதையாக உருமாறி வேலிக்கருவை முட்செடிகள் முளைத்து ஒதுக்குப்புற பகுதியாக இருந்தது. எனவே கோவிலுக்கு மேற்கில் சுமார் 150 அடி (50மீட்டர்) தூரத்தில், காவல் நிலையம் அருகே பிரதான சாலையை இணைக்கக் கூடிய இந்த மூன்றாவது பாதையை மேம்படுத்தி, திருவிழாக் காலங்களில் நெரிசல் இல்லாமல், வரிசைமுறை அடிப்படையில் பக்தர்களை பாதுகாப்பாக கோவிலுக்குள் அனுப்பி,  தரிசனம் செய்து வைக்க திட்டமிடப்பட்டது.


               இந்த இணைப்புச் சாலை விரிவாக்கப் பணியை, திருச்செந்தூர் ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்களது நாட்டு நலப்பணி திட்டத்தின் கீழ் செய்து கொடுக்க, ஆதித்தனார் கல்லூரி முதல்வர் இரா.கனகசபாபதி அவர்கள் முன்வந்தார். திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி மாணவர்களின் உழைப்பாலும், கல்லூரி முதல்வர் இரா.கனகசபாபதி அவர்கள், பேராசிரியர் இராஜமார்த்தாண்டம் ஆகியோரது சீரிய ஒத்துழைப்பாலும், இந்த சாலையில் அடர்ந்து வளர்ந்திருந்த, வேலிக் கருவை முட்புதர்கள் வேருடன் வெட்டி அகற்றி, ஒற்றையடிப் பாதையை சாலையாக விரிவுபடுத்தி, பக்தர்களின் பயன்பாட்டுக்கு 1981 ஆம் ஆண்டு வாக்கில் கொண்டு வரப்பட்டது.


            புதிய சாலை உருவாக்கம் காரணமாக, திருவிழா காலங்களில் கோவிலுக்கு தரிசனம் செய்ய வரும் பக்தர்கள்மேற்கிலுள்ள பிரதான தார்ச்சாலை வழியாக புதிதாக மேம்படுத்தப்பட்ட புதிய இணைப்புச் சாலையை வந்தடைந்தவுடன், கலையரங்கத்தின் தென்பகுதியில் வரிசை முறை அமைத்து, முதியோர், பெண்கள், சிறுவர்கள் அனைவரும் நெரிசலின்றி, பாதுகாப்பான முறையில் கோவிலுக்குள் சென்று தரிசனம் செய்யும் நடைமுறை கொண்டு வரப்பட்டது.


19. கோவிலில்  திருப்பணிக் குழு அமைப்பு.

 

   முத்தாரம்மன் கோவிலில் பல்வேறு கட்டுமானப் பணிகளை முடித்து, குடமுழுக்கு விழாவை விரைந்து நடத்த வேண்டும் என்ற நோக்கத்தில், உடன்குடி கே.எஸ்.கணேசன் அவர்களை தலைவராக கொண்ட திருப்பணி குழு1981 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டது. இந்த திருப்பணி குழுவில் சிவ.சௌந்திரபாண்டிய நாடார் (சுண்டங்கோட்டை), எஸ்.சுப்பையா பாண்டியன் (குலசை), இ.பி.பாண்டியன் (குலசை), கே.நாகமணி (குலசை), சிவா என்ற ஏ.எஸ்.லெட்சுமண பிள்ளை (குலசை), ப.சுப்பையா (குலசை) ஆகியோர் உறுப்பினர்களாக இருந்தனர். பின்னர், பிரிமியர் எஸ்.சிவநேசன் (சிறுநாடார் குடியிருப்பு), அ.ஜெயதரன் (தண்டுபத்து)எஸ்.சுந்தரவேல் (சந்தையடியூர்), பி..எஸ்.செந்தில்குமார் (தண்டுபத்து), பி.கோபால் (காயாமொழி), வி.சுப்பிரமணியம் (மெய்ஞானபுரம்), எஸ்.முருகானந்தம் (குலசை) ஆகியோர் கூடுதல் உறுப்பினர்களாக இதில் சேர்க்கப்பட்டனர். திருப்பணிக் குழுவின் செயலாளர் மற்றும் பொருளாளராக, கோவில் நிர்வாக அலுவலர் என்ற முறையில் நான் இருந்தேன்.


             திருப்பணி குழு தலைவராக தேர்வு செய்யப்பட்ட கே.எஸ்.கணேசன் அவர்களின் சிறப்புமிக்க பண்புகள் குறித்து இந்த இடத்தில் கூறுவது அவசியம் என எண்ணுகிறேன். கே.எஸ்.கணேசன் அவர்கள், எளிமையான தோற்றமும், யாரிடத்தும் சினம் கொள்ளாது, இன்முகத்துடன் அனைவரையும் அரவணைத்துச் செல்லும் பண்பும் உடையவர். குலசை முத்தாரம்மன் கோவிலில் நிர்வாக அலுவலர் நியமனம் செய்யப்படுவதற்கு முன்பு, கட்டிட கமிட்டி தலைவராகவும், அறங்காவலராகவும் இருந்துள்ளார். இந்தப் பகுதியில் தொழில் துறையில் சிறந்து விளங்கிய பலரிடம், நெருங்கிய நட்பிலும், தொடர்பிலும் இருந்தவர். மேலும் குலசை முத்தாரம்மன் மீது அளவு கடந்த பற்றுக் கொண்டவர் ஆவார். 


                  முத்தாரம்மன் கோவிலின் வளர்ச்சிப் பணிகளில் 1981 ஆண்டு தொடங்கி 1996 ஆண்டு வரை, கே.எஸ்.கணேசன் அவர்களுடன் இணைந்து பல்வேறு வளர்ச்சிப் பணிகளை செய்யும் ஒரு நல்வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அன்னை முத்தாரம்மன் கோவில் கட்டுமானப் பணிகளுக்காக, நன்கொடையாளர் பலரை அழைத்து வந்து, எனது பணிக்காலத்தில் திட்டமிட்ட பணிகள் பலவும், தங்கு தடையின்றி நடைபெற பெரிதும் எனக்கு துணையாக இருந்தவர் கே.எஸ். கணேசன் அவர்கள் ஆவார்


20. கொடிமர மண்டப கட்டுமானம்.

 

புதிதாக அமைக்கப்பட்ட திருப்பணிக் குழு, தனது முதல் பணியாக கோவில் முகப்பில் பழுதான நிலையிலிருந்த பழைய கொடி மர ஓட்டுக் கொட்டகை மற்றும் அதில் இற்று பழுதாகி இருந்த மரத்தாலான சிறிய கொடிமரம் இவற்றை நீக்கி விட்டுநன்கொடையாளர் உதவியுடன் 3500 சதுர அடி பரப்பில், புதிதாக காங்கிரீட் மண்டபமாக கொடிமர மண்டபத்தை கட்ட முடிவு செய்தது. மேலும், புதிதாக கட்டப்பட இருந்த கருவறை (மூலஸ்தான) விமானத்தின் உயரத்திற்கேற்ப, முற்றிலும் செப்பு தகடு பொதிந்த தேக்கு மரத்தாலான புதிய கொடி மரம் நிறுவுவது எனவும் முடிவு செய்தது.


          கொடிமர மண்டபம் கட்டுமானம், புதிய செப்பு கொடிமரம் நிறுவுதல், சாலை கோபுரம் அமைத்தல் ஆகிய மூன்று முக்கியமான திருப்பணி வேலைகளையும் செய்து கொடுக்க, தண்டுபத்து திருமிகு கே.பி.கந்தசாமி அவர்களின் சரசுவதி கந்தசாமி ஆன்மீக அறப்பணி மன்றத்தினர் முன் வந்தனர்.


       அறப்பணி மன்றத்தின் கட்டுமானப் பணிகளை மேற்பார்வை செய்யவும், பணிகளில் தொய்வு ஏதும் இல்லாமல் விரைவாக முடிக்கவும்தாண்டவன்காடு சிவ.மனோகரன் அவர்கள், அறப்பணி மன்றத்தின் சார்பில் மேற்பார்வையாளராக நியமனம் செய்யப்பட்டு இருந்தார். கொடிமர மண்டப கட்டுமானப் பணிகள், கொடி மரம் நிறுவுதல், சாலை கோபுரம் அமைப்புப் பணி ஆகிய மூன்று பணிகளும் தங்கு தடையின்றி நடைபெற, கோவில் நிர்வாகத்திற்கும், அறப்பணி மன்றத்துக்கும் இடையே இணைப்பாக இருந்து சிவ.மனோகரன் அவர்கள் திறம்பட செயல்பட்டார். மேலும், பணிகளை குறிப்பிட்ட நாளில் முடித்து, குடமுழுக்கு நடத்த வேண்டும் என்பதில் மிகவும் ஆர்வமாக இருந்தார். தாண்டவன்காடு சிவ.மனோகரன் அவர்கள், பின்னாளில் குலசை முத்தாரம்மன் கோவில் அறங்காவலராகவும் இருந்துள்ளார்.


          1983 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தசரா திருவிழா முடிந்தவுடன், பக்தர்களுக்கு இடையூறு ஏதும் இல்லாத அளவில்கொடிமர மண்டப கட்டுமானப் பணிகளை துவக்க முடிவு செய்யப்பட்டது. மேலும், கட்டுமானப் பணிகளுக்கான மணல்செங்கல், கருங்கல் ஜல்லி, சிமிண்ட், இரும்பு கம்பிகள் உள்ளிட்ட கட்டுமானப் பொருட்கள் அனைத்தும், தசரா திருவிழா முடிந்தவுடன், கோவில் கலையரங்க வளாகப் பகுதியில் கொண்டு வந்து சேர்க்கப்பட்டன.


21. காலமழை தவறியதால் கட்டுமானத்திற்கு நிலத்தடி நீர்த் தொட்டி கட்டியது.

 

 வழக்கமாக, அக்டோபர் மாதம் தொடங்கி டிசம்பர் மாதம் வரை பெய்ய வேண்டிய பருவ மழை, 1983 ஆம் ஆண்டில் பெய்யவில்லை. எனவே இப்பகுதி முழுவதும் வறட்சியின் பிடிக்குள் சிக்கியது. இதனால், நிலத்தடி நீர்மட்டம் மிகவும் குறைந்து, கொடிமர மண்டப காங்கிரீட் கட்டுமானப் பணிக்கு தேவையான தண்ணீர் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. கட்டுமானப் பொருட்கள் அனைத்தும் வந்து சேர்ந்த நிலையில், நிலைமையை எவ்வாறு சமாளிப்பது என்ற குழப்பம் ஏற்பட்டது.


இந்த குழப்பத்திற்கு தீர்வு காண, கலையரங்க வடக்கு காம்பவுண்ட் மதில் சுவரை ஒட்டி, தரைக்கு அடியில் மிகப் பெரிய அளவில் தண்ணீர் தொட்டி ஒன்றைக் கட்டவும், வெளியிலிருந்து லாரிகள் மூலம் தண்ணீரைக் கொண்டு வந்து தொட்டியில் தேக்கி வைத்து கட்டுமானப் பணிகளை செய்யவும் முடிவு செய்து, அதன் அடிப்படையில் மிகப் பெரிய நிலத்தடி நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டது. தைப் பொங்கல் முடிந்தவுடன், கோவில் முன்பாக பழுதான நிலையில் இருந்த கொடிமர ஓட்டுக் கொட்டகையை முற்றிலும் அகற்றி விட்டு, காங்கிரீட் தூண்கள் அமைக்கும் பணிக்கு அஸ்திவாரம் தோண்டும் பணி தொடங்கியது


22. கோடையில் பெருமழையை பெய்ய வைத்தாள் அன்னை.

       அப்போது, அனைவரும் வியக்கத்தக்க அதிசயத்தை அன்னை முத்தாரம்மன் நிகழ்த்தினாள். 1984 ஜனவரி மாதம் பிற்பகுதியில் தைப் பொங்கல் கழித்து துவங்கிய மழை, ஒரு நாளோ இரண்டு நாளோ அல்ல பல நாட்கள், பருவகால மழையை விஞ்சும் வகையில் கொட்டித் தீர்த்தது. இதனால், நிலத்தடி நீர்த்தேக்க தொட்டியில் தண்ணீர் தேக்க வேண்டிய அவசியமே இல்லாமல் போனது. செங்கற்கள் கொண்டு கட்டப்பட்ட இந்த நிலத்தடி நீர் தேக்க தொட்டி, இன்றளவும் கோவில் கலையரங்க வடக்கு காம்பவுண்ட் மதில் சுவரை ஒட்டி, சுமார் 40 ஆண்டுகளாகியும் பயன்பாட்டில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

         ஒவ்வொரு நாள் இரவுப் பொழுதில் பெய்த பெருமழை, பகல் பொழுதில் பெய்யாது கட்டுமான பணிகள் தொடர்ந்து நடைபெற உதவியது. மேலும், தொடர் மழை காரணமாக காங்கிரீட் தூண்கள் மீது, குளிர்விப்புக்காக சுற்றப்பட்டிருந்த வைக்கோல் பிரிகளில், உதிராமல் இருந்த நெல்மணிகள் முளைத்து நாற்று ஆக வளர்ந்த நிகழ்வும் நடந்தது எனில்பெய்த மழையின் அளவு எத்தகையது என்பதை இதனைப் படிப்பவர்கள் ஊகத்துக்கே விட்டு விடுகிறேன்.


           தொடர் மழையால், குலசை பகுதியில் இருந்த நீர் நிலைகள் அனைத்தும் நிரம்பி வழிந்தன. இந்த நிகழ்வை பருவம் தவறிய மழை என வானிலையாளர் வர்ணித்தனர். ஆனால் இதனை பருவம் தவறிய மழை எனக் கூறி சாதாரணமாக ஒதுக்கி விட முடியாது. ஏனெனில், கருணையே உருவான அன்னை முத்தாரம்மன், தனது கோவில் கட்டுமானப்பணிகள் தங்கள் தடையின்றி நிறைவேற, கோடையில் பெரு மழையை கொட்ட வைத்து, தன்னை நம்பிய பக்தர்களின் மனங்களை குளிர வைத்தாள் என்றே கூறலாம்.   


23. செப்புத் தகடு போர்த்திய எழில்மிகு கொடிமரம் நிறுவியது.

 

கொடிமர மண்டப கட்டுமானப் பணிகள் முடிவு பெறும் நிலையை நெருங்கிக் கொண்டிருந்த அதேவேளையில், புதிய கொடிமரம் தயார் செய்வதற்கு, மேற்கு தொடர்ச்சி மலை புனலூர் பகுதியிலிருந்து சுமார் 33 அடி (10 மீட்டர்) உயரமுள்ள தேக்கு மரம் ஏற்கனவே கொண்டு வரப்பட்டு, மரத்தை இழைத்து சுத்தப்படுத்தும் பணி முடிக்கப்பட்டு இருந்தது. புதிய கொடிமரத்திற்கு செம்பு தகடு போர்த்தும் பணிகள், கோவில் மண்டபத்தில் வைத்து மரத்தின் சுற்றளவுக்கு ஏற்ப வடிவமைத்து, நுணுக்கமாக செய்யப்பட்டன.


          கொடிமர அடித்தளப் பகுதிக்கான கருங்கல் பீடம், நாகர்கோவில் அருகே உள்ள மைலாடி எனும் ஊரில் வடிவமைத்து கொண்டு வரப்பட்டது. அனைத்து பணிகளும் நிறைவு செய்த பின், கொடி மரத்தை நிறுவி, அதனைச் சுற்றி கருங்கல் பீடம் அமைக்கும் பணியையும், தண்டுபத்து திருமிகு கே.பி.கந்தசாமி அவர்களின் சரசுவதி கந்தசாமி ஆன்மீக அறப்பணி மன்றத்தினர் சிறப்பாக செய்து கொடுத்தனர்.


24. கருவறை (மூலஸ்தானம்) மீது புதிய விமானம் கட்டுமானம்.

 

கொடிமர மண்டப கட்டுமானப் பணிகள் நடைபெற்ற அதே நேரத்தில், அன்னையின் ஆலய கருவறை மீதிருந்த மிகச் சிறிய அளவிலான விமானத்திற்கு பதிலாக, கருவறையின் நீளம், அகலத்திற்கு ஏற்ப புதிய விமான கட்டுமானமும், அதில் சுதை சிற்பங்கள் அமைக்கும் பணியும் நடந்தன. கருவறை மேலுள்ள விமான கட்டுமானம் மற்றும் விமானத்தின் மேல் வைப்பதற்கு மூன்று பெரிய செப்புக் கலசங்களையும் மாதவன்குறிச்சி கே.ரங்கசாமி அவர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் நன்கொடையாக செய்து வழங்கினர்.


 25. மகாமண்டப நுழைவு வாசலில் இரண்டு புதிய பூதத்தார் சுதை விக்ரகங்கள். 


மகாமண்டப பிரதான நுழைவு வாசலில் இடதுபுறம் ஒன்றும், வலதுபுறம் ஒன்றுமாக இரண்டு பூதத்தார் உருவங்களை சுவரில் சித்திரமாக, ஆண்டுதோறும் நடைபெறும் ஆடிக்கொடை திருவிழா நடைபெறும, முன்பாக, கிராம கோவில்களில் வரைவது போன்ற நடைமுறை குலசை முத்தாரம்மன் கோவிலிலும் இருந்தது. எனவே இந்த நடைமுறைக்கு பதிலாக, பிரமாண்டமாக இரண்டு பூதத்தார் சுதை விக்கிரகங்களை அதேயிடத்தில் புதிதாக நிறுவ முடிவு செய்யப்பட்டது. இந்த முடிவை செயல்படுத்தும் விதமாக, குலசேகரன்பட்டினம் சலவை தொழிலாளர்களின் கலா தசரா குழு, மகாமண்டப நுழைவு வாசல் முன்புறத்தில் இடதுபுறம் ஒன்றும், வலதுபுறம் ஒன்றுமாக இரண்டு பூதத்தார் சுதை விக்ரகங்களை, கம்பீரமான தோற்றத்தில் செய்து கொடுத்தனர்.


            கொடிமர மண்டப கட்டுமானம், சாலை கோபுரம் மற்றும் கருவறை விமான அமைப்பு பணிகள் அனைத்தும் நிறைவு செய்யப்பட்டவுடன், குலசை முத்தாரம்மன் கோவிலின் தோற்றம் புதுப்பொலிவு பெற்று கண்ணைக் கவரும் வகையில் காட்சி அளித்தது. மேலும், முன்புற கொடிமர மண்டபம் மிகவும் விரிவாக கட்டப்பட்டதன் காரணமாக, பக்தர்கள், கோவில் முன்பாக உட்கார்ந்து ஓய்வு கொள்ள கூட இடமின்றி தவித்த நிலை மாறி, கொடிமர மண்டபத்தில் அதற்கான புதிய இடவசதி உருவானது.


 


1985 ல் கட்டப்பட்ட புதிய கொடிமர மண்டபத்தின் முகப்பு தோற்றம்.



  26. ஐம்பது ஆண்டு கால இடைவெளிக்கு பின் நடந்த திருக்குட நன்னீராட்டு விழா.       

   

           இந்நிலையில், திருக்குட நன்னீராட்டு பெரு விழாவினை, 1985  ஆம் ஆண்டு நடைபெற இருந்த தசரா திருவிழாவுக்கு முன்பாக நடத்தி முடிக்கவும், அதன் பின், திட்டமிட்டவாறு மற்ற திருப்பணி வேலைகளைத் தொடரவும், திருப்பணிக்குழு முடிவு செய்தது. எனவே வேத விற்பன்னர்களை கலந்து, திருக்குட நன்னீராட்டு விழாவை நடத்த, நாள் குறிக்கவும் முடிவு செய்யப்பட்டது. 


திருக்குட நன்னீராட்டு விழாவுக்கான யாகசாலை ஆகம செலவுகள் அனைத்தையும் தண்டுபத்து திருமிகு கே.பி.கந்தசாமி அவர்களின், சரஸ்வதி கந்தசாமி ஆன்மீக அறப்பணி மன்றம் மனமுவந்து ஏற்றுக் கொண்டது. எனவே, திருமிகு கே.பி.கந்தசாமி அவர்கள் முன்னிலையில், பெங்களூர் நாயக் சுவாமிஜி அவர்கள் தலைமையில், வேத விற்பன்னர் குழுவின் வேத மந்திரங்களுடன், மூன்று நாள் யாகசாலை பூஜை நடத்தப்பட்டு, 28-08-1985 அன்று திருவோணம் நட்சத்திரம் கூடிய சுப வேளையில், திருக்குட நன்னீராட்டு விழா சீரும் சிறப்புமாக நடைபெற்றது. இவ்விழாவில் பெருந்திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.


27. திருக்குட நன்னீராட்டு விழா காட்சிகள் - புகைப்படங்கள்



 

 

 

 

 1934 ஆம் ஆண்டு வாக்கில், இதற்கு முன் அன்னை முத்தாரம்மன் கோவில் திருக்குட நன்னீராட்டு நடந்ததாக இந்த பகுதியிலுள்ள பெரியவர்கள் சிலர் கூறிய நிலையில், 50 ஆண்டுகளுக்குப் பின் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா நடைபெற்றது நினைவு கூறப்படுகிறது.


 


1985 ல் திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் கோவிலுக்கு  வருகை தந்த போது.

 

மேலும், இதன் மண்டலாபிஷேக நிறைவு நாளில், ஆன்மீக பெரியவரான திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் கலந்து கொண்டு ஆன்மீக சொற்பொழிவு ஆற்றினார். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


 28. மாறுதலும், மூன்றாண்டுகளுக்கு பின் குலசையில் மீண்டும் பொறுப்பேற்பும். 


  நிர்வாக அலுவலராக, குலசை, செட்டியாபத்து ஆகிய இரு கோவில்களிலும் 1978  முதல் தொடர்ந்து பணியாற்றிய எனக்கு, 1986  ஆம் ஆண்டில் திருச்சி மாவட்டம் கிருஷ்ணராயபுரம், திருக்கண்மாலீஸ்வரர் கோவிலுக்கு மாறுதல் அளிக்கப்பட்டது. பின்னர் அங்கிருந்து, 1987 ஆம் ஆண்டில் நிலை-2 (Executive Officer Grade-2) நிர்வாக அலுவலராக பதவி உயர்வு அளிக்கப்பட்டு, சேலம் அருள்மிகு கோட்டை மாரியம்மன் கோவிலுக்கு மாறுதல் ஆனேன்.

 


1986 ல் பொறுப்பு ஒப்படைத்த போது, புதிதாக பொறுப்பேற்ற நிர்வாக அலுவலர் எஸ். சுப்பிரமணிய பிள்ளை, ஆலய ஊழியர்கள், அறங்காவலர்கள்திருப்பணி குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர்.



1986 ல் செட்டியாபத்து கோவிலில், புதிதாக பொறுப்பேற்ற நிர்வாக அலுவலர் எஸ்.சுப்பிரமணிய பிள்ளை, பொன்.இராமநாத ஆதித்தன், டி.ஆர். அருணாசல நாடார், டாக்டர்.கே.சுந்தர்ராஜ் , சிவக்கொழுந்துவேல், கே.எஸ்.கணேசன் , கோவில் ஊழியர்கள் உள்ளிட்டோர்.

 


இந்த சூழ்நிலையில், மூன்று ஆண்டுகள் கழித்து 1989 ஆம் ஆண்டில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக மாண்புமிகு கே.பி.கந்தசாமி அவர்கள் பொறுப்பேற்றார்கள். இந்த சூழ்நிலையில், முத்தாரம்மன் கோவிலில் ஏற்கனவே திட்டமிட்ட பல திருப்பணி வேலைகள் நிறைவேறாமல் இருந்ததை விரைந்து முடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில், திருப்பணிக் குழு தலைவராக இருந்த கே.எஸ்.கணேசன் அவர்கள் முயற்சியால், சேலத்தில் பணியாற்றி வந்த எனக்கு, குலசைக்கு மீண்டும் மாறுதல் அளிக்கப்பட்டது.


29. முத்தாரம்மன் கோவிலுக்கென தனியாக நிர்வாக அலுவலர் நியமனம்.


 செட்டியாபத்து கோவிலுடன் இணைந்த தொகுப்பு கோவிலாக (Group Temple), 1976 முதல் சுமார் 12 ஆண்டு காலம் இருந்து வந்த குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில், 1989 ஆண்டில் செட்டியாபத்து தொகுப்பில் இருந்து தனியாகப் பிரித்து, நிலை-2 கோவிலாக நிலை உயர்வு செய்து, எனக்கு குலசைக்கு மாறுதல் அளிக்கப்பட்டது. செட்டியாபத்து கோவில் தொடர்ந்து நிலை-3 நிர்வாக அலுவலர் பொறுப்பில் இருந்து வந்தது. எனவே, குலசை முத்தாரம்மன் கோவிலுக்கென, தனியாக ஒரு நிர்வாக அலுவலர் நியமனம் 1989 ஆம் ஆண்டில்தான் நடந்தது என்பது இங்கு நினைவு கூறப்படுகிறது. மேலும், காயாமொழி அருகேயுள்ள குதிரைமொழி கிராமம், தேரிக்குடியிருப்பு கற்குவேல் அய்யனார் கோவில், அதன் வளர்ச்சிப் பணிகள் கருதி முத்தாரம்மன் கோவில் தொகுப்புடன் அப்போது இணைக்கப்பட்டது. 


30. கலையரங்க முன்மண்டப விரிவாக்க கட்டுமானப்பணி. 



1989 ல் விரிவாக்கம் செய்யப்பட்ட கலையரங்க முன் மண்டபத்தின் தோற்றம்.

 

முத்தாரம்மன் திருக்கோயில் பொறுப்புக்களை 1989 ஆம் ஆண்டில் மீண்டும் ஏற்றவுடன், கலையரங்கத்தின் முன்புற மண்டப விரிவாக்க பணியை துவக்க, சுண்டங்கோட்டை சிவ.சௌந்திரபாண்டிய நாடார் அவர்கள் விரும்பினார். அதன் பேரில், கலையரங்க கட்டுமானப் பணி உடனடியாக தொடங்கப்பட்டது. 1980  ஆம் ஆண்டு முதல் 1988 ஆம் ஆண்டு வரையிலான ஒன்பதாண்டு காலம், கலையரங்க மேடையின் முன்புறம் அமர்ந்து நிகழ்ச்சிகளை பார்ப்பதற்கு, பார்வையாளர் பகுதிக்கு மட்டும், தென்னங் கீற்றாலான தற்காலிக கொட்டகை பந்தல், ஆண்டுதோறும் தசரா திருவிழாவின் போது அமைக்கும் நடைமுறை இருந்து வந்தது.


 

கலையரங்க விரிவாக்க மண்டபம் அறநிலையத்துறை அமைச்சர் மாண்புமிகு கே.பி.கந்தசாமி அவர்கள்தி றந்து வைத்த போது, ஆணையர் இராமதாஸ், நன்கொடையாளர் சிவ.சௌந்திரபாண்டிய நாடார்.


 

 ஆண்டுதோறும், தசரா திருவிழாவின் போது அமைக்கப்படும் பாதுகாப்பற்ற முறையிலான கீற்று கொட்டகைக்கு, முடிவு கட்டும் விதமாக, 1989 ஆம் ஆண்டில் கலையரங்கத்தின் முன்புறம், சுமார் 3600  சதுர அடி பரப்பில் ஆஸ்பெஸ்டாஸ் மேற்கூரை அமைப்புடன் மண்டபம் கட்டி முடிக்கப்பட்டதுஇதனால், பார்வையாளர்கள் கலை நிழ்ச்சிகளை மழை, வெயில் போன்ற இயற்கை இடையூறின்றி அமர்ந்து காணும் வாய்ப்பு உருவானது. கலையரங்க முன்மண்டபம் கட்டப்பட்டதன் காரணமாக, கோவிலுக்கு வரும் பக்தர்கள் அமர்ந்து ஓய்வு கொள்ள, விரிவான இடவசதியும் ஏற்பட்டது. மேலும், ஏழை எளிய மக்கள் தங்கள் இல்ல திருமண விழாக்களை, திருவிழா அல்லாத நாட்களில் குறைந்த செலவில் நடத்திக் கொள்ளவும் வசதிகள் செய்யப்பட்டன. புதிதாக கட்டப்பட்ட. சிவ.சௌந்திரபாண்டிய நாடார் - தங்கக்கனி அம்மாள் கலையரங்க விரிவாக்க மண்டபம்,1989 ஆம் ஆண்டு நடைபெற்ற தசரா திருவிழாவின் போது, அறநிலையத்துறை அமைச்சர் மாண்புமிகு கே.பி.கந்தசாமி அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.


31. குறைந்த கட்டணத்தில் கோவில் கலையரங்கத்தில் திருமணங்கள். 


     அந்நாளில், குலசை முத்தாரம்மன் கோவிலில் திருமணங்கள் நடைபெறுவது என்பது, அரிதினும் அரிதான ஒரு நிகழ்வாக இருந்தது என்பதை இங்கு கூறியே ஆக வேண்டும். காரணம் திருமணம் நடத்துவதற்கு தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகளான சமையல் அறை, உணவுக் கூடம், குடிதண்ணீர் போன்ற எதுவும் அந்நாளில் இல்லை. மேலும்கோவிலில் ஏற்கனவே கட்டப்பட்டு இருந்த கல்யாண மண்டபத்திலும் கூட, திருமணம் நடத்த தேவையான எந்த ஒரு அடிப்படை வசதியும் இல்லாமல் இருந்தது. இதன் காரணமாகவே, அந்நாளில் முத்தாரம்மன் கோவிலில் திருமண விழாக்கள் பெரும்பாலும் நடைபெறவில்லை. 


           ஆனால், கலையரங்க முன்மண்டப விரிவாக்கப் பணிகள் முடிக்கப்பட்டு, கலையரங்கத்தை ஒட்டி வடமேற்கில் கோவிலுக்கு நன்கொடையாக பெறப்பட்ட காலியிடத்தில், சமையல் அறை, உணவுக்கூடம், தண்ணீர் மற்றும் இதர அடிப்படை வசதிகள் பலவும் செய்து கொடுத்த பின்னர், ஏழை எளிய மக்கள் மட்டுமின்றி, வசதி படைத்தவர்கள் கூட தங்கள் இல்ல திருமண விழாக்களை குலசை கோவிலில் வைத்து நடத்த தொடங்கினர். மேலும், கோவிலில் நடைபெறும் திருமணங்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கிய பின்புதான், பல தனியார் திருமண மண்டபங்கள் கோவிலைச் சுற்றிலும் புதிதாக உருவாகத் தொடங்கின.


 32. மகிசாசுர சம்ஹாரம் - பின்னணியாக கூறப்படும் புராண நிகழ்வு.

        குலசேகரன்பட்டினம் என்றாலே தமிழ் மக்கள் அனைவருக்கும் பளிச்சென்று நினைவுக்கு வருவது, தசரா திருவிழாதான். தமிழகத்தின் நவராத்திரி விழாதான், குலசையில் தசரா திருவிழாவாக கொண்டாடப்படுகிறது.  'தசரா' என்ற வட மொழிச் சொல்லுக்கு பத்து இரவுகள் என்பது பொருள்.


          குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா விழாவில், ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி திங்கள் அமாவாசை திதி கழிந்து, பிரதமை திதி உள்ள முற்பகல் பொழுதில் கொடியேற்றம் நிகழ்கிறது. அதனைத் தொடர்ந்து, முதல் ஒன்பது நாள் இரவுகளில், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு திருக்கோலத்தில், அன்னை முத்தாரம்மன் திருவீதியுலா எழுந்தருளும் காட்சி நடைபெறுகிறது.


       10 ஆம் திருநாளன்று, தசமி திதி கூடிய பிற்பகல் வேளையில், மூலவர் அன்னை முத்தாரம்மனுக்கும், சுவாமி ஞானமூர்த்தி ஈசுவரருக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டு, நள்ளிரவில் சிதம்பர ஈசுவரர் கோவிலுக்கு எதிரே உள்ள கடற்கரைக்கு அன்னை  முத்தாரம்மன் எழுந்தருளி, மகிட அரக்கனை வதம் செய்து வெற்றி வாகை சூடுகிறாள்


       “உலகுயிர் தழைத்திட மகிடனை வதைத்திட உமையவள் வருகின்றாள்

        பலப்பல வேடம் புனைந்தவர் கூட பவனியும் வருகின்றாள்

        கலைமகள் மலைமகள் அலைமகள் ஆகி காட்சியும் தருகின்றாள் 

        வேலவன் தாயவள் குலசை முத்தாரம்மையை துதித்திட வாரீரே!”


   மகிசாசுர சம்ஹாரம் நடைபெற காரணமாக கூறப்படும் புராண நிகழ்வை, பக்தர்கள் அனைவரும் அறிந்து கொள்வது அவசியம் என்பதால், சுருக்கமாக இங்கு கூற விரும்புகிறேன். 


முற்காலத்தில் வரமுனி என்ற தவ வலிமை மிக்க முனிவன் ஆணவத்தால் கட்டுண்டு அறிவுக் கண்ணை இழந்தவனாக இருந்தான். ஒருநாள் அவனது இருப்பிடம் வழியாக, தமிழ் ஞானி அகத்திய முனிவர் வந்த போது, ஆணவத்தின் காரணமாக அகத்திய முனிவரை அவமரியாதை செய்தான் வரமுனி. இதனால் மனம் வெகுண்ட அகத்திய முனிவர், வரமுனியை, 'எருமைத் தலையும் மனித உடலும் பெற்று இறைவியால் அழிவாயாக என சாபமிட்டார்அகத்திய முனிவரின் சாபம் காரணமாக, எருமைத் தலையும் மனித உடலுமாக உருமாறினான் வரமுனி


இருப்பினும், கடுந்தவம் செய்து பலப்பல வரங்களைப் பெற்றான். வரங்களைப் பெற்ற வரமுனி, வானுலகில் வாழும் தேவர்களையும், பூலோகத்தில் தவம் செய்த முனிவர்களையும் கொடுமைப் படுத்தினான். வரமுனி தர்ம வழியை மறந்து அதர்ம வழியில் ஈடுபட்டான். நன்னெறி மிக்க முனிவராக வாழ்க்கையை துவங்கிய‌ வரமுனி, வாழ்க்கையின் பிற்பகுதியில் அசுரனாக மாறியதால், மகிசாசுரன் என அழைக்கப்பட்டான். இங்கு மகிசம் என்பது எருமையை குறிக்கும். மகிசாசுரன் என்பதன் பொருள் எருமைத் தலையை உடைய அரக்கன் என்பதாகும். மகிசாசுரனின் கொடுமைகளை தாங்க முடியாத முனிவர்கள், அன்னையை நோக்கி வேள்வி நடத்தி,  தங்களுக்கு மகிசாசுரன் செய்து வரும் கொடுஞ் செயல்களை நீக்கித் தர வேண்டினர்.


            அகத்திய முனிவர் அளித்த சாபத்தில், வரமுனிக்கு இறைவியால் அழிவு என்பதால், முனிவர்கள் நடத்திய வேள்வியில்அன்னை ஒரு பெண் குழந்தையாக அவதரித்தாள். இந்த பெண் குழந்தையே அன்னை ஆதிபராசக்தியாக மாறி, அதர்ம செயல்களில் ஈடுபட்ட மகிசனை அழித்து, மகிசாசுரமர்த்தினி எனப் பெயர் பெற்றாள். இந்த புராண நிகழ்வு நமக்கு உணர்த்தும் நீதி, உலகில் நிகழும் அநீதிகள் அனைத்தும் இறையருளால் அழிக்கப்படும்; நீதி வெல்லும்' என்பதே. 


             இந்த புராண நிகழ்வை அடிப்படையாகக் கொண்டுதான் தசரா 10 ஆம் திருவிழா இரவில், குலசையில் அன்னை முத்தாரம்மனின் மகிசாசுர சம்ஹார நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் இலட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வதுடன், பல ஊர்களைச் சேர்ந்த தசரா குழுவினர்கள், தமிழர்களின் பாரம்பரிய நாட்டுப்புற கலைகளைப் போற்றும் வகையில் நாட்டுப்புற இசைக் கலைஞர்களை வரவழைத்து, தசரா திருவிழாவை மிகப் பெரும் விழாவாக கொண்டாடுகின்றனர்.


33.  தசரா - தனித்துவம் வாய்ந்த ஒப்பற்ற திருவிழா.


                                       

       

குலசையில், சீரும் சிறப்புமாக, பாரோர் போற்ற நடைபெறும் தசரா திருவிழாவை, இதுவரை கண்டு மகிழாத நெஞ்சம் குறித்து, கயப்பாக்கம் கவிஞர் வி.சோ.சபாரத்தினம் அவர்கள் எழுதிய எளிய, இனிய கவிதை வரிகள்தான் மேலே உள்ளவை. 


ஒரு மண்டலம் அதாவது நாற்பத்தெட்டு நாட்கள் கடுமையான விரதம் இருந்து, அன்னையின் அருளுடன், ஆவேசம் பொங்க வரும் காளி வேடம் அணிந்த பக்தர்களின் வருகை ஒருபுறம் எனில், இது பூலோகமா அல்லது இந்திரலோகமா என ஐயுறும் வண்ணம் ஒப்பனை செய்து, பல்வேறு வேடமணிந்து வரும் பக்தர்களின் வருகை மறுபுறம். பக்தர்கள் அவரவர் எண்ணங்களுக்கு ஏற்ப வண்ணம் தீட்டி, தங்கள் வேண்டுதல் நிறைவேற மாறுபட்ட வேடம் பூண்டு, அலை அலையாக வலம் வரும் காட்சியை, குலசையில் தசரா கொடியேற்றம் நிகழ்ந்ததும் காணலாம்.

 







   
பூலோகமா! இந்திரலோகமா! என ஐயுறும் வண்ணம் வேடமணிந்த பக்தர்கள்.


இந்தியாவில், மைசூரில் கொண்டாடப்படும் தசரா விழாவில், மன்னரின் அரண்மனை பல லட்சம் வண்ண மின் விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டு ஒளிமயமாக காட்சி அளிக்கிறது. மன்னராட்சி முறை இந்தியாவில் ஒழிக்கப்பட்ட போதிலும் கூட, மைசூர் அரச குடும்பத்தினரின் ராஜதர்பார் இன்றளவும் தசரா திருவிழாவின் போது அங்கு நடத்தப்பட்டு வருகிறது. மைசூர் அரச குடும்பத்தினரின் குல தெய்வமான சாமுண்டீஸ்வரி, மகிடனை வதம் செய்யும் நிகழ்வும் தசரா நாளில் நடைபெறுகிறது. மேலும், பிரமாண்டமான அளவில் யானைகளின் அணிவகுப்பும், பலவகையான போட்டிகள், கலை நிகழ்ச்சிகள், நாட்டியம், நாடகம் என அந்நாளில் மைசூர் அரச குடும்பத்தினர் நடத்திய தசரா விழாவை, தற்போது கர்நாடக மாநில அரசு தனது செலவில் நடத்தி வருகிறது.


ஆனால், குலசையில் கொண்டாடப்படும் அன்னை முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா, தமிழ் மக்களின் பாரம்பரிய நாட்டுப்புற கலைகள், பண்பாடு மற்றும் வழிபாட்டு முறைகளை உலகுக்கு பறைசாற்றும் வகையில், அன்னை முத்தாரம்மன் மீது பற்றுக் கொண்ட பக்தர்கள் அனைவரும் ஒன்று கூடி கொண்டாடும், தனித்துவம் வாய்ந்த ஒப்பற்ற திருவிழா ஆகும். ஆகவே குலசை தசரா திருவிழாவை, பிற இடங்களில் நடைபெறும் எந்த ஒரு தசரா திருவிழாவுடனும் ஒப்பிட முடியாது.  


 34.  தசரா திருவிழா - நாட்டுப்பற கலைஞர்களின் சங்கமம்.


            அன்னை முத்தாரம்மன் மீது பற்றுக் கொண்ட பக்தர்கள், தசரா குழு என்ற பெயரில் வழிபாட்டு குழுக்களை அவரவர் ஊர்களில் அமைத்து, அதற்குரிய செலவுகள் அனைத்தையும் அவர்களே ஏற்பாடு செய்து கொள்கின்றனர். தசரா குழுவினர் அனைவரும், கொடியேற்ற நாளன்று குலசை கடற்கரை சிதம்பர ஈசுவரர் கோவில் எதிரே உள்ள கடல் தீர்த்தத்தில் புனித நீராடி, முத்தாரம்மன் கோவிலை வலம் வந்து காப்புக் கட்டியவுடன், தங்கள் ஊர்களுக்கு சென்று ‘தசரா பிறை’ எனும் பெயரில் குடில் அமைத்து அங்கு விரதம் மேற்கொள்கின்றனர். மேலும், தசரா குழுவினர் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் உள்ள நாட்டுப்புற கலைஞர்களை வரவழைத்து, ஆட்டம், பாட்டு, கொண்டாட்டம் என நாட்டுப்புற இசைக் கருவிகள் முழங்க, 10 ஆம் திருவிழா அன்று அவரவர் ஊர்களிலிருந்து புறப்பட்டு, அன்னையின் அருள் வேண்டி குலசையை நோக்கி அணி அணியாக வருகின்றனர்.


  தசரா குழுவினர் அனைவரும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து குலசைக்கு அழைத்து வரும் கிராமிய கலைஞர்களின் எண்ணிக்கை நூறோ அல்லது இருநூறோ அல்ல, சுமார் இரண்டாயிரம் பேர் என்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தும் செய்தி. தசரா 10 ஆம் திருவிழாவின் போது, நாட்டுப்புற இசைக் கலைஞர்கள் குலசையில் கூடி, நமக்கு அளிப்பது இசை முழக்கமா அல்லது இடி முழக்கமா எனக் கூற இயலாதவாறு அனைவரையும் மெய் சிலிர்க்க வைக்கிறது.


  தசரா திருவிழாவின் போது, தமிழ் மக்களின் பாரம்பரிய கிராமிய இசைக் கருவிகளான தவில், நாதசுரம், பம்பை, உறுமி, கொம்பு, தாரை தப்பட்டை, லவண்டை, எக்காளம்திருச்சின்னம்சிறுமுரசு போன்ற பல்வேறு மாறுபட்ட பாரம்பரிய இசைக் கருவிகளைக் கொண்டு வழங்கும் இசை முழக்கம், இப்பகுதி முழுவதையும் ஆர்ப்பரித்து அதிர வைக்கிறது. கரகாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம் போன்ற பழந்தமிழரின் சிறப்பு மிக்க கூத்து கலை கொண்டாட்டமும் இதில் இடம் பெறுவதால், குலசையில் நடக்கும் தசரா திருவிழா, தமிழக நாட்டுப்புற கலைஞர்களின் சங்கம விழாவாக ஒளிர்கிறது.


 ஆரம்ப காலங்களில், குலசேகரன்பட்டினம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள பக்தர்கள் மட்டும், தங்கள் ஊர்களில் தசரா குழுக்களை அமைத்து, தசரா திருவிழாவை கோலாகலமாக கொண்டாடி வந்த நிலையில்பின்னாளில் தூத்துக்குடி மாவட்டம் மட்டுமின்றி, இதனை ஒட்டிய கன்னியாகுமரி, திருநெல்வேலிவிருதுநகர், இராமநாதபுரம் போன்ற பிற மாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்களும், அன்னை முத்தாரம்மன் அருளால் ஈர்க்கப்பட்டு, தங்கள் ஊர்களில் தசரா குழுக்களை அமைத்து வருகை தர ஆரம்பித்தனர்.



  

தசரா திருவிழா - தீச்சட்டி ஏந்தி வரும் பக்தர்களின் மெய் சிலிர்க்க வைக்கும் காட்சி.

 

  தசரா 10 ஆம் திருநாளன்று  அன்னை முத்தாரம்மன் அருள் வேண்டி, தசரா குழுவினர் அவரவர் ஊர் மக்களை ஒன்று திரட்டி, காளி வேடம் அணிவோர், தீச்சட்டி எடுப்போர் முன்னே வர, அவர்களுடன் பலப்பல வேடமணிந்தோர் பலரும் ஆடிப்பாடி அணிவகுத்து வர, நாட்டுப்புற கலைஞர்களின் இசை முழக்கத்துடன், அணி அணியாக அருள் முழக்கத்துடன் குலசையில் ஒன்று கூடி, கொண்டாடி மகிழ்கின்றனர். நான் 1978 ல் குலசையில் பொறுப்பேற்ற போது, கோவிலில் பதிவு செய்யப்பட்டிருந்த தசரா குழுக்களின் எண்ணிக்கை சுமார் 60  ஆக இருந்த நிலையில், 1996 ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை சுமார் 200 ஆக உயர்ந்திருந்தது. தற்போது இந்த எண்ணிக்கை மேலும் பலமடங்கு உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


35. கடலில் புனித நீராட புதிய வசதி.


               கடற்கரை சிதம்பர ஈசுவரர் கோவில் தோற்றம் - 1990 ல் எடுக்கப்பட்ட படம் 


குலசை முத்தாரம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்கள், கடலில் புனித நீராடுவதற்கென, எந்த ஒரு குறிப்பிட்ட இடமும் 1989 க்கு முன்பு வரை இல்லை என்பதை இங்கு குறிப்பிட்டுக் கூறியே ஆக வேண்டும். இந்த சூழ்நிலையில், கோவிலுக்கு வரும் பக்தர்கள் அவரவர் விருப்பம் போல், ஆளுக்கொரு இடம் தேடி கடலில் புனித நீராடும் பாதுகாப்பற்ற நிலை இருந்து வந்தது. இந்த சூழ்நிலையில், பாதுகாப்பான முறையில் பக்தர்கள் ஒரே இடத்தில் புனித நீராட, கோவில் நிர்வாகம் உரிய ஏற்பாடு செய்து தர வேண்டுமென பக்தர்களிடமிருந்து கோரிக்கைகள் பெருமளவில் வர ஆரம்பித்தனஎனவே, பக்தர்களின் கோரிக்கையை ஏற்று, இதில் நிரந்தர தீர்வு காணும் முயற்சி 1989 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்டது.



                                                
 புனித நீராட தேர்வு செய்யப்பட்ட கடற்கரையின் எழில் தோற்றம்

       அலைகளின் சீற்றம் குறைவாகவும், நீருக்கடியில் பாறைகள் ஏதும் இல்லாமல் சம தளமாகவும், ஆழம் குறைவாகவும், பக்தர்களுக்கு பாதுகாப்பான ஒரு இடமாகவும், கடற்கரை சிதம்பர ஈசுவரர் கோவில் சந்நிதிக்கு நேர் எதிரில் இருக்கும் கடல் பகுதி அடையாளம் காணப்பட்டது. மேலும், தில்லை நடராசப் பெருமானின் திருவாதிரை திருக்காட்சியை காண இயலாது வருந்திய அடியவர் ஒருவருக்கு, தில்லை திருவாதிரை திருக்காட்சியை கண்டு மகிழும் வண்ணம் காட்சி அளித்த புனித இடமாக, குலசை கடற்கரை அருகேயுள்ள சிதம்பர ஈசுவரர் கோவில் சிறப்புற்று விளங்குவதால், பக்தர்கள் புனித நீராடுவதற்கு இந்த இடம் மிகவும் பொருத்தமானது என்று முடிவு செய்யப்பட்டது.


சிதம்பர ஈசுவரர் கோவில் எதிரில் உள்ள கடலில் புனித நீராடும் பக்தர்கள்.

36. கடற்கரை சிதம்பர ஈசுவரர் கோவில் உருவான வரலாறு.



கடலில் புனித நீராட செல்லும் முன், பக்தர்கள் அனைவரும் புனித நீராடும் இடத்திற்கு நேர் எதிரில் உள்ள மிகப் பழமையான சிவாலயமான, சிதம்பர ஈசுவரர் கோவில் உருவாக காரணமான வரலாற்று நிகழ்வையும் அறிந்து கொள்வது அவசியம் என்பதால், சுருக்கமாக அதன் வரலாற்றை காண்போம்.

 

வணிகர் ஒருவர், மார்கழி மாத திருவாதிரை தோறும் சிதம்பரம் சென்று, நடராச பெருமானின் திருவாதிரை திருக்காட்சியை கண்டு மகிழும் வழக்கத்தை உடையவராக இருந்தார். ஆனால், எதிர்பாராத விதமாக ஒரு வருடம் திருவாதிரை திருநாளுக்கு முன்பாக ஏற்பட்ட பெரும் புயல், மழை காரணமாக, பாய்மர கப்பல்கள் குலசை கடற்கரை பகுதிக்கு வந்து சேரவோ அல்லது இங்கிருந்து செல்லவோ இல்லை. இதனால் மனம் நொந்து போன வணிகர், தான் தில்லை சென்று திருவாதிரை திருநாளன்று, நடராச பெருமானின் திருவாதிரை திருக்காட்சியை கண்டு மகிழ வாய்ப்பு இல்லாமல் போனது குறித்து மிகுந்த வேதனையில் மூழ்கினார்.வணிகரின் வேதனையை கண்ணுற்ற தில்லை நடராசப் பெருமான், மனம் இரங்கி திருவாதிரை திருக்காட்சியை வணிகர் கண்டு மகிழ திருவுளம் கொண்டார்.


       அப்போது வணிகர் நின்ற இடத்தில் விண்ணிலிருந்து ஒலித்த ஒரு அசரிரீ சொல்,வடக்கு நோக்கி வரிசையாக செல்லும் எறும்பு வரிசையை பின் தொடர்ந்து போ. எறும்பு வரிசை முடியும் இடத்தில், தில்லையில் நடைபெறும் திருவாதிரை திருக்காட்சியை நீ கண்டு மகிழ்வாய் என்றது. வணிகரும், விண்ணில் ஒலித்த அசரிரீயை பின்பற்றி சற்று தூரம் நடந்த பின்னர்குலசை கடற்கரைக்கு அருகே சிதம்பர ஈசுவரர் கோவில் அமைய காரணமாக இருந்த இந்த புனித பூமியில்,நடராசப் பெருமானின் தில்லை திருவாதிரை காட்சியை நேரில் கண்டு பரவசம் அடைந்தார். 


தன்மீது அசைக்க இயலாத நம்பிக்கை வைக்கும் அடியவர்களின் துயரங்களை நீக்கி, அவர்களது விருப்பங்களை இறைவன் குறைவின்றி நிறைவேற்றி வைப்பான் என்பதற்கு இந்த நிகழ்வு மிகச் சிறந்த சான்று ஆகும். எனவே தில்லை நடராசப் பெருமான், தனது அடியாருக்கு காட்சி அளித்து மகிழ்வித்த இந்த புனித இடத்தில் கட்டப்பட்டதே சிதம்பர ஈசுவரர் கோவில் ஆகும். இந்த சிவத்தலம் தில்லைக்கு நிகரான சிறப்பு உடையது என்பதால், குலசை முத்தாரம்மனின் அருள் வேண்டி வரும் பக்தர்கள், கடலில் புனித நீராடி, சிதம்பர ஈசுவரரை வணங்கி, முத்தாரம்மன் அருளைப் பெறுவது சிறப்பு ஆகும்.


37. புனித நீராட கடற்கரை வரை செல்வதற்கு சாலை அமைப்பு


சிதம்பர ஈசுவரர் கோவில் வழியாக கடற்கரைக்கு செல்ல, ஒற்றையடிப் பாதை கூட, 1988 ஆம்ஆண்டு வரை இல்லை. இந்தசூழலில், பக்தர்கள் வசதிக்காக 1989 ஆம் ஆண்டில் முத்தாரம்மன் கோவிலுக்கு பின்புறம் கீழமலையன் தெருவிலிருந்துசிதம்பர ஈசுவரர் கோவில் வழியாக கடற்கரை வரை செல்ல, புதிய பாதை அமைக்க திட்டமிடப்பட்டது. ஆனால் இந்த பாதையின் அமைவிடம், சுமார் அரை கிலோமீட்டர் தூரம் கடற்கரையை ஒட்டிய பகுதி என்பதால், நடப்பதற்கு தகுதியற்ற மணற்பாங்கான நிலமாக இருந்தது.

                                            

 எனவே, முதியோர், பெண்கள், சிறுவர்கள் உள்ளிட்டோர் கடலில் புனித நீராட, கடற்கரை வரை மணலில் நடந்து சென்று வருவதும்,அதுபோல வாகனங்களில் செல்வோர் கடற்கரை வரை சென்று திரும்புவதும் இயலாத செயல் என்பதால், கீழமலையன் தெருவிலிருந்து, சிதம்பர ஈசுவரர் கோவில் வழியாக கடற்கரை வரையிலான சுமார் அரை கிலோமீட்டர் தூரத்திற்கு புதிதாக களிமண் சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டது.


             புதிய சாலை அமைக்க, உடன்குடி ஊராட்சி ஒன்றியத்தில் கோவில் நிர்வாகம் சார்பில் கோரிக்கை அளிக்கப்பட்டதில்உடன்குடி ஊராட்சி ஒன்றியமும், கோவில் நிர்வாகத்தின் கோரிக்கையை கனிவுடன் ஏற்று, முத்தாரம்மன் கோவிலுக்கு பின்புறமாக உள்ள கீழமலையன் தெருவிலிருந்து, சிதம்பர ஈசுவரர் கோவில் வழியாக கடற்கரை வரை செல்ல, களிமண் சாலையை முதலில் அமைத்துக் கொடுத்தது. அதன் பின்னர், சரளைக்கல் சாலையாக மாற்றம் செய்து, பின் தார்ச் சாலையாக மேம்படுத்தப்பட்டது. கடற்கரை வரையிலும் ஏற்படுத்திய புதிய சாலை வசதி காரணமாக, பக்தர்கள் எளிதாக கடலுக்கு சென்று புனித நீராடும் வசதி உருவானது. மேலும், மக்கள் நடமாட்டமே இல்லாதிருந்த இந்தப்பகுதி, பக்தர்களின் தொடர் வருகை காரணமாக, மக்கள் நடமாட்டமிக்க பகுதியாக மாறியது.


38மகிஷாசுர சம்ஹார காட்சி இடம் மாற்றம் - வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வு.


தசரா திருவிழா 10 ஆம் நாள் இரவில் நடைபெறும் மகிசாசுர சம்ஹார காட்சியைக் காண வரும் பக்தர்களின் வருகைஆண்டுதோறும் அதிகரித்துக் கொண்டு வந்தது. இத்தகைய சூழலில், மிகக் குறுகிய தெருவில் நடைபெற்று வந்த மகிசாசுர சம்ஹார காட்சி நிகழ்வை, நெரிசல் இல்லாமல் நடத்துவது என்பது கோவில் நிர்வாகத்திற்கு மிகப் பெரும் சவாலாக இருந்தது. மேலும், கோவிலுக்கு அருகில் வேறு விரிவான இடவசதியும் இல்லாததால்மாற்று இடம் ஒன்றை தேட வேண்டிய அவசர அவசியம் கோவில் நிர்வாகத்திற்கு ஏற்பட்டது.


ஆண்டு தோறும் தசரா 10 ஆம் நாள் இரவில் நடைபெறும் மகிசாசுர சம்ஹார காட்சி, காவல்துறை காவலர் குடியிருப்பு பகுதியை ஒட்டி, மேல்புறம் அமைந்துள்ள உதயமார்த்தாண்ட விநாயகர் கோவிலில் இருந்து, கீழ்புறம் அக்கசாலை விநாயகர் என்ற சுந்தர விநாயகர் கோவில் வரையிலான மிகக் குறுகலான தெருவில், மிகுந்த நெரிசலுக்கு இடையே நடைபெற்று வந்ததுஇந்த நிகழ்ச்சியின் போது, சீர்பாதம் தாங்குவோர், காளி வேடம் அணிந்தோர், சம்ஹார காட்சியைக் காண வந்தோர் ஆகிய அனைவரும் நெரிசலில் சிக்கித் தவித்த பெருந் துயரத்தை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை என கூறலாம். ஏனெனில் 1978 முதல் 1986 வரையிலான காலத்தில் தசரா திருவிழாக்களை தொடர்ந்து நடத்தி, மகிசாசுர சம்ஹார காட்சியின் போது, பக்தர்களுடன் சேர்ந்து நெரிசலில் சிக்கி சிரமப்பட்ட அனுபவம், கோவில் நிர்வாக அலுவலர் என்ற முறையில் எனக்கும் இருந்தது.

   

           1989 ஆம் ஆண்டில், மீண்டும் குலசை முத்தாரம்மன் கோவில் பொறுப்பை ஏற்றவுடன், மகிசாசுர சம்ஹார நிகழ்ச்சி நடைபெறும் போது ஏற்படும் நெரிசலுக்கு, நிரந்தர தீர்வு காண முடிவு செய்யப்பட்டது. இலட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்ளும் மகிசாசுர சம்ஹார நிகழ்ச்சியை நெரிசலின்றி நடத்த, கோவிலுக்கு சற்று தென்கிழக்கில், கடற்கரை சிதம்பர ஈசுவரர் கோவிலுக்கு கிழக்கில் திறந்த வெளிப் பகுதிக்கு இடம் மாற்றம் செய்து நடத்த தீர்மானிக்கப்பட்டது. இதற்கான பொது அறிவிப்பு ஒன்றும் பக்தர்கள் பார்வைக்கு அந்நாளில் வெளியிடப்பட்டது.


 குலசை முத்தாரம்மன் கோவிலுடன் இணைந்த துணைக் கோவில்களில் (sub temples), கடற்கரை அருகே இருந்த சிதம்பர ஈசுவரர் கோவிலும் ஒன்றாகும். சிதம்பர ஈசுவரர் கோவிலுக்கு சொந்தமாக,கோவிலை சுற்றி மற்றும் கிழக்கில் கடற்கரை வரையிலும் சுமார் 10 ஏக்கருக்கும் மேற்பட்ட புஞ்சை நிலம் இருந்தது. இந்த நிலங்களில் பெரும் பகுதி குத்தகைக்கு விடப்பட்டு இருந்தது. மகிசாசுர சம்ஹார நிகழ்ச்சி இடம் மாற்றம் காரணமாக, கோவிலின் இன்றியமையா தேவை கருதி, சம்மந்தப்பட்ட நிலங்களின் குத்தகை உரிமம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு, மேற்படி நிலங்கள் அனைத்தும் கோவில் பயன்பாட்டுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.


          கடற்கரை சிதம்பர ஈசுவரர் கோவிலுக்கும், கடற்கரைக்கும் இடைப்பட்ட இந்த இடத்தைச் சுற்றிலும் எசலை’ எனப்படும் பசுமையான முட்செடி உயிர் வேலியாக இருந்து வந்தது. மேலும், இந்த இடம் முழுவதும் செடி கொடிகள் முளைத்து, மேடும் பள்ளமுமாக சமதளமின்றி அந்நாளில் காட்சி அளித்தது. எனவே இதிலிருந்த முட்செடிகள் முற்றிலும் வெட்டி அகற்றப்பட்டதோடு, அதன் உள்ளிருந்த பயனற்ற காட்டுச் செடிகளும் வெட்டி அகற்றப்பட்டு, பக்தர்கள் தங்கு தடையின்றி கடற்கரை வரை நடமாட வசதியாக சமதளப் பகுதியாக மாற்றம் செய்யப்பட்டது.


         மேலும், மகிசாசுர சம்ஹாரம் நடைபெறக் கூடிய கடற்கரை, திறந்த வெளிப் பகுதி என்பதாலும், மழை பெய்தால் ஒதுங்கி நிற்பதற்கு கூட இடவசதி ஏதும் இல்லாத இடம் என்பதாலும், பெண்கள், குழந்தைகள் ஆகியோர் நலன் கருதிபிரமாண்டமான கொட்டகை பந்தல் ஒன்றும் தற்காலிகமாக சிதம்பர ஈசுவரர் கோவிலுக்கு கிழக்கில் அமைக்கப்பட்டது. இது தவிர விரிவான அளவில் ஒலி, ஒளி ஏற்பாடுகளும் கடற்கரை வரை செய்து, திட்டமிட்டபடி 1989  ஆம் ஆண்டு தசரா 10 ஆம் திருவிழா இரவில் நடைபெற்ற மகிசாசுர சம்ஹார நிகழ்ச்சி, குலசை முத்தாரம்மன் கோவில் வரலாற்றில் ஒரு முக்கிய நிகழ்வாக இடமாற்றம் செய்யப்பட்டு, பக்தர்களின் உற்சாக வரவேற்புடன் நடத்தப்பட்டது.


                                                             

          மகிஷாசுர சம்ஹார காட்சியைக் காண குலசை கடற்கரையில் கூடியுள்ள பக்தர்கள் கூட்டம்


நள்ளிரவு வேளையிலும் கூட, மகிட அரக்கனை வதம் செய்ய வருகை தந்த அன்னை முத்தாரம்மனை வரவேற்க, கடலலைகள் அணிவகுத்து வந்து எழுப்பிய ஆரவாரப் பேரொலி, இப்பகுதி எங்கும் எதிரொலித்தது. அதேவேளையில், அன்னையின் அடியவர்கள் எழுப்பிய ஓம் சக்தி! ஓம் காளி!! எனும் மந்திர ஒலி முழக்கமோ வானமே அதிரும் வண்ணம் இருந்தது. இத்தகைய சூழ்நிலையில், மகிட அரக்கனை அன்னை முத்தாரம்மன் வதம் செய்த காட்சியை, பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் பெரும் நெரிசல் இல்லாமல் பார்த்துப் பரவசம் அடைந்தனர். 


ண்டுதோறும், குறுகிய தெருவில், மிகுந்த நெரிசலுக்கிடையே மகிசாசுர சம்ஹார நிகழ்ச்சியைப் பார்த்துப் பழகியிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்களுக்கு, கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பரந்து விரிந்த கடற்கரை தூய வெண்மணலும், கடல் அலைகளின் அணிவகுப்பும், அவை எழுப்பிய சீரான ஓசையும், குளிர்ந்த இதமான கடற்காற்றும், இளைப்பாற கிடைத்த விரிவான இடமும் அளவற்ற மகிழ்ச்சியை அவர்களுக்கு அளித்து இருந்தது.

 

1989 ஆம் ஆண்டில் இடம் மாற்றம் செய்து நடத்தப்பட்ட வரலாற்றுச் சிறப்பு மிக்க மகிஷாசுர சம்ஹார நிகழ்ச்சியில், அப்போது அறநிலையத்துறை அமைச்சராக இருந்த மாண்புமிகு கே.பி.கந்தசாமி அவர்கள், அன்னை முத்தாரம்மன் மீது கொண்டிருந்த தனிப்பட்ட ஈடுபாடு காரணமாக, இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்த நிகழ்வு, பக்தர்கள் மனதில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. சம்ஹார காட்சி இடம் மாற்றம் செய்து நடத்தப்பட்டதில் பெரிதும் மகிழ்ந்த பக்தர்கள், இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இந்து அறநிலையத் துறை அமைச்சர் மாண்புமிகு கே.பி.கந்தசாமி அவர்களை நேரில் அணுகி, தங்களின் எல்லையில்லா மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்ட நிகழ்வு, நீங்காத நினைவு ஆகும்   


கடற்கரை அருகில் கட்டப்பட்ட தசரா 10 - ஆம் திருவிழா நாள் அபிஷேக மேடை.


  மகிசாசுர சம்ஹார நிகழ்வு முடிந்தவுடன், அன்னை முத்தாரம்மனை அனைவரும் தரிசனம் செய்யும் வகையில்கடற்கரை அருகில் கோவிலுக்கு சொந்தமான இடத்தில், அபிஷேக மேடை ஒன்று சிதம்பர ஈசுவரர் சந்நிதிப் பார்வையை எதிர் நோக்கி அமைக்கப்பட்டது. பின்னர் இது நிரந்தர மேடையாக கட்டப்பட்டது. இதனால், சம்ஹாரத்தை முடித்து வெற்றி வாகை சூடிய அன்னை முத்தாரம்மனுக்கு, மேடையில் வைத்து நடந்த பன்னீர் அபிஷேகம், தீபாராதனை போன்ற சமய நிகழ்வுகளை, மேடை முன்பு அமர்ந்து பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் மனங்குளிர காணும் வாய்ப்பு முதன் முதலாக ஏற்பட்டது.


39. ‘முத்தாரம் கலைக்கூடம்’ நிறைவேறாது போன சிறப்பு திட்டம். 

         திட்டமிட்ட வளர்ச்சிப் பணிகள் பலவற்றை, எனது பணிக்காலத்தில் நன்கொடையாளர் உதவியுடன் முழுவீச்சில் செய்து முடித்ததில் மனநிறைவும், மகிழ்ச்சியும் அடையும் அதே வேளையில், திட்டமிட்ட பணிகளில் சில நிறைவேறாது போனது குறித்து நினைத்துப் பார்ப்பதும் அவசியமாகிறது. எதிர்காலத்தில் நெரிசலே இல்லாதவாறு, தசரா திருவிழாவை நடத்த வேண்டும் எனும் உயர்ந்த நோக்கத்தில், இந்து அறநிலையத் துறை, வனம் மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சராக இருந்த மாண்புமிகு கே.பி.கந்தசாமி அவர்கள், சிறப்புத் திட்டம் ஒன்றை தயாரித்து அதை நிறைவேற்ற வேண்டுமென விரும்பியதன் அடிப்படையில், குலசை முத்தாரம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் பயனடையும் வகையில், ‘முத்தாரம் கலைக்கூடம்’ என்ற பெயரில் தொலை நோக்கு திட்டம் ஒன்று அந்நாளில் தயாரிக்கப்பட்டது.

அதன்படி, குலசை கடற்கரைப் பகுதியை ஒட்டி, சுமார் 60 ஏக்கர் நிலத்தை முத்தாரம் கலைக்கூடம் என்ற பெயரால் கையகப்படுத்தி, அதில் சுற்றுலாத் துறை நிதி உதவியுடன், கடற்கரையில் தசரா குழுவினர்கள் கலை நிகழ்ச்சிகள் நடத்த சிறப்பு வசதிகளை உருவாக்கவும், கலை நிகழ்ச்சிகள் காண வரும் பார்வையாளர்கள் மற்றும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கவும் விரிவான திட்டம் ஒன்று தயார் செய்யப்பட்டது. அதனடிப்படையில் குலசை கடற்கரை பகுதியில், இந்த திட்டப் பணிக்கு தேர்வு செய்யப்பட்ட நிலங்கள் அனைத்தும் அளந்து அடையாளம் காணப்பட்டு, 1990 ஆம் ஆண்டு இறுதியில் அரசின் சிறப்பு அனுமதி வேண்டி விண்ணப்பிக்கப்பட்டது.

 

           ஆனால், அன்றைய அறநிலையத் துறை அமைச்சர் மாண்புமிகு கே.பி. கந்தசாமி அவர்களின் கனவுத் திட்டமான ‘முத்தாரம் கலைக்கூடம்’ 1991ல் ஏற்பட்ட மாறுபட்ட அரசியல் சூழ்நிலையால், நிறைவேறாது போனது. இந்த திட்டம், திட்டமிட்டபடி அந்நாளில் நிறைவேறி இருந்தால், இன்று தசரா திருவிழா நாட்களில் குலசையில் ஏற்படும் மிகப்பெரும் நெரிசலுக்கு, நிரந்தர தீர்வை ஏற்படுத்தி இருக்கும்.


40. சுற்றுப்பிரகார மண்டபம் மற்றும் மகாமண்டப கட்டுமானம்.  

 

கொடிமர மண்டப கட்டுமானப் பணி, 1985 ஆம் ஆண்டில் நிறைவு செய்து குடமுழுக்கு நடத்தப்பட்டு இருந்த நிலையில், அதன் பின்னர் திருப்பணி வேலையில் சற்று தொய்வு ஏற்பட்டது. இந்நிலையில், கோவில் திருப்பணி வேலைகளை விரைவுபடுத்தும் நோக்கத்தில், அர்த்த மண்டபம், மகாமண்டபம் மற்றும் கிழக்கு, மேற்கு, தெற்கிலுள்ள சுற்றுப் பிரகார கட்டுமானப் பணிகளை 1989 இறுதியில் துவங்க திருப்பணி குழு முடிவு செய்தது. அர்த்த மண்டபத்தை ஒட்டி மிகச் சிறிய அளவில் மகாமண்டபம் இருந்ததால்,  ஒரே நேரத்தில் பலர் சந்நிதி முன்பாக நின்று வழிபட இயலாமல், மிகவும் நெருக்கடியான நிலைமை இருந்தது. மேலும், மகாமண்டப அமைவிடம் மிகக் குறுகியதாக, தாழ்வான உயரத்தில் இருந்ததால், காற்றோட்டம், வெளிச்சம் இல்லாது, விழா காலங்களில் பக்தர்கள் கோவிலுக்குள் சென்று திரும்ப,பெரும் சிரமங்களை எதிர் கொண்டனர். 

   

         எனவே, சுற்றுப்பிரகார கட்டுமானத்துடன், அர்த்த மண்டபம் மற்றும் மகாமண்டப கட்டுமானத்தையும் இணைத்து ஒரே கட்டுமானமாக கட்டவும், மகாமண்டபத்தில் நிலவி வந்த கடுமையான நெருக்கடியை கருத்தில் கொண்டு, மகா மண்டபத்தை விரிவாகவும், காற்றோட்டம்வெளிச்சம் இருக்கும் வகையில் அதன் உயரத்தை உயர்த்திக் கட்டவும் முடிவு செய்யப்பட்டதுமேலும், ஏற்கனவே 1985 ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்ட கொடிமர மண்டப உயரத்திற்கேற்ப, கொடி மர மண்டபத்தின் தொடர் கட்டுமானமாக இருக்கும் வகையில், கிழக்கு, தெற்கு மற்றும் மேற்கு பிரகார மண்டப கட்டுமானப் பணிகளைச் செய்ய திட்டமிடப்பட்டது. இந்த கட்டுமானப் பணிகள் 1990 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கப்பட்டன


         அன்னை முத்தாரம்மன் கோவிலில் நடைபெற்ற கட்டுமானப் பணிகளுக்கு தொழில் நுட்ப ஆலோசனைகளை வழங்கவும், பணிகளை மேற்பார்வை செய்யவும் உடன்குடியைச் சேர்ந்த பொறியாளர் மா.சங்கர் என்பவர் நியமிக்கப்பட்டு இருந்தார் ஆனால், அவர் தனது பணிகளுக்காக, கோவிலிலிருந்து ஊதியம் எதுவும் பெறவில்லை என்பதும், பணிகளை திறம்பட செய்தார் என்பதும் இங்கு நினைவு கூறப்படுகிறது.


 மேற்கு பிரகார மண்டபம் - வெளிப்புற எழில் தோற்றம். 

  கிழக்கு, தெற்கு மற்றும் மேற்கு சுற்றுப் பிரகார மண்டப கட்டுமானப் பணிகளை நன்கொடையாக செய்து தர, சிறுநாடார் குடியிருப்பை சேர்ந்த பிரிமியர் எஸ்.சிவநேசன் அவர்கள் முன்வந்தார். எனவே, கிழக்கு, மேற்கு மற்றும் தெற்கு பிரகார மண்டப. கட்டுமானப் பணியை உடனடியாக துவக்க முடிவு செய்யப்பட்டதுஅதன் பின் மகாமண்டபம், அர்த்த மண்டப கட்டுமானப் பணிகளை நன்கொடையாக செய்து தர, தண்டுப்பத்து ஆண்டி நாடார் அறப்பணி மன்றம் முன் வந்தது.

 


கொடிமர மண்டப முன்புற  தோற்றம் மற்றும் கிழக்கு பிரகார மண்டபத்தின் உட்புற தோற்றம் 


 திருவிழா காலங்களில், பக்தர்கள் கோவிலுக்குள் தரிசனம் செய்து திரும்பும் போது ஏற்படும் நெரிசலை குறைப்பதற்கு, மகாமண்டபத்தில் கிழக்கு வெளிப்பிரகார மண்டபத்தை நோக்கி வெளி வாசல் ஒன்றும், மேற்கு வெளிப்பிரகார மண்டபத்தை நோக்கி வெளி வாசல் ஒன்றுமாக இரண்டு வெளி வாசல்களை புதிதாக அமைக்க முடிவு செய்யப்பட்டதுஇதன் மூலம், பிரதான மகாமண்டப வாசல் வழியாக பக்தர்கள் கோவிலுக்குள் வந்து தரிசனம் செய்த பின், மீண்டும் பிரதான மகாமண்டப வாசல் வழியாக வெளியே செல்லும் போது ஏற்படும் நெருக்கடிக்கு தீர்வு காணப்பட்டது.



கிழக்கு பிரகார மண்டபம் எழில்மிகு உள் தோற்றம்


மேலும், சந்நிதியில் தரிசனம் முடிந்தவுடன் மகாமண்டபத்தின் மேற்கு வாசல் வழியாக, பக்தர்கள் எளிதாக வெளியே செல்ல வசதிகள் செய்யப்பட்டதன் காரணமாக, திருவிழா காலங்களில், பக்தர்கள் வரிசையில் நீண்ட நெடுநேரம் காத்திருக்கும் நிலை மாறி, விரைவான தரிசனத்திற்கு வாய்ப்பு உருவானது. அது போல, திருவிழா காலங்களில் பக்தர்கள் தங்கள் காணிக்கைகளை எளிதாகவும், விரைவாகவும் செலுத்த வசதியாக பெரிய உண்டியல்கள் கூடுதல் அளவில் முதன் முதலாக நிறுவப்பட்டன.


மேற்கு பிரகார மண்டபம் எழில்மிகு உள் தோற்றம் 

  1990 ஆம் ஆண்டு வரை, வெளிப் பிரகாரத்தில் வலம் வருவதற்கான வாய்ப்பு, வசதிகள் இல்லாமல் இருந்தது. இந்த சூழ்நிலையில், சிறுநாடார் குடியிருப்பு பிரிமியர் எஸ்.சிவநேசன் அவர்கள் கிழக்கு, மேற்கு, தெற்கு பிரகார மண்டபத்தை புதிதாக கட்டி கொடுத்ததன் காரணமாக, கோவிலுக்கு புதியதொரு தோற்றமும், மழை, வெயில் பொன்ற இயற்கை இடையூறுகள் ஏதும் இல்லாமல் பிரகார மண்டபத்தில் பக்தர்கள் எளிதாக வலம் வரும் வாய்ப்பும் உருவானது.


41. பிரிமியர் சிவநேசன் அவர்கள் தேரிக்குடியிருப்பு கற்குவேல் அய்யனார் கோவிலுக்கு கட்டிக் கொடுத்த மேல்நிலை நீர்த் தேக்க தொட்டி.


குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் குறித்து கூறும் போது, தேரிக்குடியிருப்பு கற்குவேல் அய்யனார் கோவில் குறித்த செய்தி ஏன் இங்கு கொண்டு வரப்படுகிறது என பலரும் வினவக் கூடும். ஆனால் அதற்கான சிறப்புக் காரணம் இருப்பதால், அதனை இங்கு குறிப்பிட விரும்புகிறேன். குலசை முத்தாரம்மன் கோவில் பிரகார கட்டுமானப் பணி நிறைவு பெற்றதும், பிரிமியர் எஸ்.சிவநேசன் அவர்கள் பிரகார கட்டுமானப் பணிக்கு அனுப்பி வைத்த இரும்பு கம்பிகளில் கணிசமான அளவு மிஞ்சியது. எனவே எஞ்சிய இரும்பு கம்பிகள் அனைத்தையும், பிரிமியர் எஸ்.சிவநேசன் அவர்களிடம் திரும்ப ஒப்படைக்க திருப்பணி குழு தலைவர் கே.எஸ்.கணேசன் அவர்கள் விரும்பினார். 


இந்த சூழ்நிலையில், குதிரைமொழி கிராமம் தேரிக்குடியிருப்பு கற்குவேல் அய்யனார் கோவிலை குலதெய்வமாக கொண்ட பக்தர்கள், குடும்பம் குடும்பமாக கோவிலுக்கு வரும்போது, ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அனைவரும், மின் மோட்டார் மூலம் ஒரு சிறிய தொட்டியில் விழும் தண்ணீரைப் பயன்படுத்தி, குளிக்கும் அவல நிலை இருந்தது. வனப்பகுதியில் இருந்து வந்த இந்த கோவிலில் மின்சாரம் தடைபட்டு போகும் நேரங்களில், பக்தர்கள் படும் அவதிகளை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை எனலாம்


         எனவே, குலசை கோவில் பிரகார கட்டுமானத்தின் போது எஞ்சிய இரும்பு கம்பிகளைப் பயன்படுத்தி, எனது பொறுப்பில் இருந்த கற்குவேல் அய்யனார் கோவிலில் சுமார் 25000 லிட்டர் கொள்ளளவு உள்ள ஒரு மேல்நிலை நீர்த் தொட்டியை கட்டவும், அதற்கு தேவைப்படும் மற்ற செலவுகளுக்கு வேறு ஒரு நன்கொடையாளரை பயன்படுத்தி கொள்ளலாம் எனவும் முடிவு செய்தேன். மேலும்இது போன்றதொரு மேல்நிலை நீர்த் தொட்டியை, செட்டியாபத்து ஐந்துவீட்டு சுவாமி கோவில் பக்தர்கள் வசதிக்காக, 1980 ஆம் ஆண்டில், நன்கொடையாளரை பயன்படுத்தி கட்டி இருந்தது குறிப்பிடத் தக்கது.


       அதுபோன்றே, ஒரு மேல்நிலை நீர்த் தொட்டியை கற்குவேல் அய்யனார் கோவிலிலும் கட்டவேண்டும் என்ற நோக்கத்தில் எஞ்சிய இரும்பு கம்பிகளை பயன்படுத்துவதற்கு, சிறுநாடார்குடியிருப்பு பிரிமியர் சிவநேசன் அவர்களின் சம்மதம் பெற அணுகினேன். பிரிமியர் எஸ்.சிவநேசன் அவர்களோ, எஞ்சிய இரும்பு கம்பிகளை, மேல்நிலை நீர்த் தொட்டி பயன்பாட்டுக்கு பயன்படுத்திக் கொள்ள தனது சம்மதத்தை தெரிவித்ததுடன், அதன் கட்டுமானச் செலவு முழுவதையும் தானே ஏற்றுக் கொள்வதாகவும் கூறி வியப்பில் ஆழ்த்தினார்.


           இதனால், குதிரைமொழி கிராமம் தேரிக்குடியிருப்பு கற்குவேல் அய்யனார் கோவிலில், மேல்நிலை நீர்த் தொட்டி 1993 ஆம் ஆண்டு வாக்கில் கட்டப்பட்டது. மேலும், ஆண், பெண் என இருபாலரும் குளிப்பதற்கு தனித்தனியாக குளியலறைகளும் நன்கொடையாளர் உதவியுடன் புதிதாக கட்டப்பட்டு, குழாய்கள் மூலம் தங்கு தடை இல்லாமல் முழு நேரமும் பக்தர்களுக்கு தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டது. பிரிமியர் சிவநேசன் போன்ற நல்மனம் படைத்த நன்கொடையாளர் அன்று முன்வந்ததால், வனப் பகுதியில் அமைந்த கற்குவேல் அய்யனார் கோவில் பக்தர்களுக்கு, அடிப்படைத் தேவையான தண்ணீர் வசதியை, எளிதாக செய்து கொடுக்க முடிந்தது என்பதை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக, இந்த நிகழ்வை இங்கு கூறினேன்.


42தேரிக்குடியிருப்பு கோவில் பக்தர்களுக்கு செய்த இரண்டு சிறப்புமிக்க பணிகள்.


         மேலும், குதிரைமொழி கிராமம், தேரிக்குடியிருப்பு கற்குவேல் அய்யனார் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு அந்நாளில் செய்து கொடுத்த இரண்டு அடிப்படை வசதிகளை எண்ணி இன்றளவும் பெருமிதம் அடைகிறேன். அவற்றில் ஒன்று, வனப் பகுதியில் இருந்து வந்த கற்குவேல் அய்யனார் கோவிலுக்கு வரும் பக்தர்கள், எளிதாக கோவிலுக்கு வந்து செல்ல சாலை வசதி ஏற்படுத்தி கொடுத்தது. மற்றொன்று முந்தைய பத்தியில் குறிப்பிட்டவாறு நன்கொடையாளர் மூலம், பக்தர்கள் வசதிக்காக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஒன்றை கட்டி, குளிக்கவும், குடிக்கவும் தண்ணீர் வசதி செய்து கொடுத்தது ஆகும்.


         குதிரைமொழி வனப் பகுதியில் (Reserved Forests) அமைந்த கற்குவேல் அய்யனார் கோவிலுக்கு செல்ல 1980 ஆம் ஆண்டு வரை சாலை வசதி எதுவும் இல்லை என்பதை இந்த கோவிலுக்கு தொடர்ந்து வரும் பக்தர்கள் பலரும் அறிவர். இந்த சூழ்நிலையில், கோவிலுக்கு வரும் பக்தர்கள் தேரிக்குடியிருப்பு ஊர் எல்லையில் தங்களது வாகனங்களை நிறுத்தி விட்டு, அங்கிருந்து ஒரு கிலோ மீட்டர் தூரமுள்ள கோவிலுக்கு பகல் பொழுதில் சுட்டெரிக்கும் வெயிலில், அனல் கக்கும் தேரி மணலில் நடந்து கோவிலுக்கு செல்லும் நிலை இருந்தது. இதில், குலதெய்வம் கோவிலுக்கு வழிபட வரும் ஆண்,பெண் மற்றும் குழந்தைகள் செம்மண் தேரி மண்ணின் சூடு தாங்காமல் ஓட்டமும் நடையுமாக, ஆங்காங்கே இருந்த பனைமர நிழலில் நின்று தங்களை ஆசுவாசப்படுத்திக் கொண்டு, மீண்டும் ஓட்டமும் நடையுமாக கோவிலுக்கு செல்லும் பரிதாபமான நிலை இருந்தது. இத்தகைய மோசமான நிலைக்கு முடிவு காண விரும்பினேன்.

  

1980 ஆம் ஆண்டில், கற்குவேல் அய்யனார் கோவிலுக்கு என்னை தக்காராக அறநிலையத் துறை நியமனம் செய்த போதுசென்னையிலுள்ள முதன்மை வனத்துறை அலுவலர் (Chief Conservator of Forest) அவர்களுக்கு, வனப்பகுதி நிலத்தில் சாலை அமைக்க அனுமதி வேண்டி விண்ணப்பித்து அதற்கான அனுமதியை பெற்றேன். அதன் அடிப்படையில், தேரிக்குடியிருப்பில் இருந்து கற்குவேல் அய்யனார் கோவிலுக்கு செல்ல, வனத்துறை இடத்தில் சுமார் ஒரு கி.மீ. தூரத்திற்கு, உடன்குடி ஊராட்சி ஒன்றியம் மூலம் புதிய சாலை அமைக்கப்பட்டது.


           அதன் பின், 1989 ஆம் ஆண்டில் மீண்டும் பொறுப்பேற்ற போது, 1993 ஆம் ஆண்டு வாக்கில், திருவிழா காலங்களில் மிகவும் குறுகலான தேரிக்குடியிருப்பு ஊர் தெருக்கள் வழியாக பக்தர்கள் வரும் வாகனங்கள், வந்து செல்வதில் ஏற்பட்ட கடுமையான போக்குவரத்து நெரிசலை கருத்திற் கொண்டு, வாகனங்கள் கோவிலுக்கு வருவதற்கு ஒரு வழியும்திரும்ப கோவிலிலிருந்து செல்வதற்கு ஒரு வழியும் என இரண்டு வழிகள் இருப்பது அவசியம் என முடிவு செய்யப்பட்டது.


            அந்த அடிப்படையில், எள்ளுவிளை என்ற ஊரிலிருந்து கற்குவேல் அய்யனார் கோவிலுக்கு வருவதற்கு, சுமார் கி.மீ. தூரம் மணல் தேரியில் புதிய சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டது. இந்த சாலை அமைப்பு பணிக்கு பல நன்கொடையாளர்கள், தங்கள் நிலங்களை நன்கொடையாக கொடுத்தனர். நன்கொடையாளர்களை ஒருங்கிணைத்து, புதிய சாலை அமைப்பு பணி தங்கு தடையின்றி நடைபெறுவதற்கு எனக்கு உதவியதில், தேரிக்குடியிருப்பு சா.சவுந்திரபாண்டியன் அவர்களின் பணி மிகவும் பாராட்டத் தக்கது ஆகும். அதுபோல மாவட்ட வருவாய் அதிகாரி திரு. அய்யனார் அவர்களும் இந்த சாலை அமைப்புப் பணிக்கு பெரிதும் உதவினார் என்பது இங்கு நினைவு கூறப்படுகிறது. நன்கொடையாக பெறப்பட்ட நிலங்களைப் பயன்படுத்தி, எள்ளுவிளை ஊரிலிருந்து கற்குவேல் அய்யனார் கோவில் வரை புதிய இணைப்புச் சாலையை, உடன்குடி ஊராட்சி ஒன்றியம் அமைத்து கொடுத்தது. இதன் காரணமாக, திருவிழா காலங்களில் பக்தர்கள் தங்கள் வாகனங்களில் நெரிசலின்றி, கற்குவேல் அய்யனார் கோவிலுக்கு எளிதாக வந்து செல்லும் வசதி உருவானது. 


   கற்குவேல் அய்யனார் கோவிலில் அடிப்படை வசதிகள் பல உருவாக்கப்பட்டதால், 1989 ல் நான் பொறுப்பேற்ற போது சுமார் ₹5000/- ஆக இருந்த ஆண்டு வருமானம், 1996 ல் நான் பொறுப்பு ஒப்படைத்த போது, பல லட்சங்களாக உயர்ந்தது. இதனால், குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தொகுப்பிலிருந்து, கற்குவேல் அய்யனார் கோவிலைப் பிரித்து, தனியாக ஒரு நிர்வாக அலுவலர் நியமனம் செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டது. 


43. முத்தாரம்மன் கோவில் கருவறை வெளிப்புற வர்க்க வேலை பணிகள்.



 புதுப்பிக்கப்பட்ட கோவில் கருவறை வெளித் தோற்றம்


  முத்தாரம்மன் கோவில் வெளிப்புற கருவறைப் பகுதி, எவ்வித வர்க்க வேலைகளும் இல்லாமல் கிராமக் கோவில் போன்று சாதாரணமாக  காட்சி அளித்தது. எனவே கருவறைப் பகுதியை மட்டும், முற்றிலும் கருங்கல் கொண்டு, சிற்ப சாஸ்திர முறைப்படி கட்ட திருப்பணிக் குழு முடிவு செய்தது. ஆனால் அந்த முடிவில் பின்னர் மாற்றம் செய்து, கருவறையின் வெளிப்பகுதியை சிற்ப சாஸ்திர முறைப்படி செங்கல், சிமிண்ட், மணல் பயன்படுத்தி சுதை மற்றும் வர்க்க வேலைகள் செய்து புதுப்பிக்க முடிவு செய்யப்பட்டது.


                 இந்த பணியை தண்டுப்பத்து அ.ஜெயதரன் அவர்களின், அய்யாச்சாமி நாடார் அறப்பணி மன்றம் செய்து கொடுக்க முன்வந்தது. மேற்கூறிய பணிகள் அனைத்தும் நிறைவு செய்து முடிக்கப்பட்டவுடன், அதன் ஒப்படைப்பு விழா, அறநிலையத்துறை அமைச்சர் மாண்புமிகு கே.பி.கந்தசாமி அவர்கள் முன்னிலையில், 1990 ஆம் ஆண்டு தசரா திருவிழாவின் போது நடைபெற்றது.


44. காஞ்சி சங்கராச்சாரியார் சுவாமிகள் முத்தாரம்மன் கோவிலுக்கு வருகை.


    

1990 ல் காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள், இளையவர் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்  கோவிலுக்கு வருகை  

 கோவில் சார்பில் அளிக்கப்பட்ட வரவேற்பு

45. காவல் நிலைய இணைப்புச் சாலை முகப்பில் தோரண வாயில். 

        மேற்கு பிரதான சாலையில் பயணம் செய்வோர், கோவில் இருப்பிடத்தை எளிதில் அறிந்து கொள்ளும்  வகையில், காவல் நிலையம் செல்லும் இணைப்பு சாலையின் மேல்புற முகப்பில், அதாவது காவல் நிலையத்திற்கு கீழ்புறம்எழில்மிகு தோற்றத்துடன், தோரணவாயில் ஒன்றை கட்ட கோவில் திருப்பணி குழு முடிவு செய்தது. 

கோவிலிலிருந்து காவல் நிலையம் செல்லும் இணைப்பு சாலை -   எழில்மிகு தோரண வாயில். 

         இந்தப் பணியை செய்து கொடுக்க, தாண்டவன்காடு பிரதீப் டி.பி.ஏ. கார்த்திகேயன் அவர்கள் தன்னுடைய விருப்பத்தை தெரிவித்தார். எனவே, தாண்டவன்காடு பிரதீப் டி.பி.ஏ.கார்த்திகேயன் அவர்கள் விருப்பத்தின் பேரில், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் மாண்புமிகு கே.பி.கந்தசாமி அவர்களால், 1990 ஆம் ஆண்டில் தோரண வாயில் கட்டுமான பணிக்கான அடிக்கல் நாட்டப்பட்டது. 

        ஆனால், தோரண வாயில் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்து திறப்பு விழா காணும் போது நான் மாறுதலாகி விட்டதால், ஆ.கணேசன் என்பவர் கோவில் நிர்வாக அலுவலராக பணியில் இருந்தார். தாண்டவன்காடு பிரதீப் டி.பி.ஏ. கார்த்திகேயன் அவர்கள் கலையழகுடன், காண்போரை கவர்ந்திழுக்கும் தோற்றத்தில், தோரண வாயில் பணியை இங்கு செய்து கொடுத்துள்ளார் என்பது நினைவு கூறத்தக்கது.

46. கடற்கரை சாலை இருமருங்கிலும் மரங்களை நட்டு வளர்த்தல்.

  மனிதர்களே இல்லாத பூமியில் மரங்களால் உயிர் வாழ முடியும். அதேவேளையில், மரங்களே இல்லாத பூமியில் மனிதர்களால் உயிர் வாழ முடியாது. எனவேதான் அரசரடி விநாயகர், வேம்படி இசக்கியம்மன், புளியடி மாரியம்மன், ஒத்தப்பனை சுடலைமாடன் என மரத்தடியில் வீற்றிருந்து அருள் பாலிக்கும் இந்த மண்ணில் உதித்த தெய்வங்களுக்கு, மரங்களின் பெயர்களை அடைமொழியாக வைத்து, நம் முன்னோர்கள் வழிபட்டனர். காரணம் இந்த மண்ணில் உதித்த தெய்வங்களும், இந்த மண்ணில் வாழும் மரங்களும் என்றென்றும் போற்றிப் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் நம் முன்னோர்கள் மிகவும் உறுதியாக இருந்தனர்.


 சிதம்பர ஈசுவரர் கோவில் வடக்கு வெளிப் பிரகாரம் - மரங்களின் பசுமைக் காட்சி

    குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலுக்கு பின்புறம் உள்ள கீழ மலையன் தெருவிலிருந்து, சிதம்பர ஈசுவரர் கோவில் வழியாக கடற்கரைக்கு செல்ல, புதிதாக அமைக்கப்பட்ட சுமார் அரை கிலோ மீட்டர் நீளமுள்ள சாலையின் இருமருங்கிலும் மரங்களை நட்டுப் பராமரிக்கும், நல்லதொரு வாய்ப்பு எனக்கு கிடைத்தது. இந்த சாலை வழியாக கடலில் புனித நீராட செல்லும் பக்தர்கள், வெயிலின் கொடுமைக்கு ஆளாகாமல் கடலில் புனித நீராடி, மரங்களின் நிழலில் நடந்து வர வேண்டும் என்ற நோக்கத்தில், ஓரளவு வளர்ந்து பெரிதான 200 வேப்ப மரங்களை, இந்த சாலையின் இருபுறமும் நட முடிவு செய்யப்பட்டது.


கடற்கரை சிதம்பர ஈசுவரர் கோவில் மேற்கு வாசல் - மரங்களின் பசுமைக் காட்சி

           ஆனால், ஒரே நேரத்தில், கடற்கரை சாலை மற்றும் சிதம்பர ஈசுவரர் கோவில் திறந்த வெளிப் பகுதிகளில் சுமார் 200 வேப்ப மரங்களை நட்டு பராமரிப்பது மிகப் பெரும் பணியாக இருக்கும் எனக் கருதப்பட்டது. எனவே,ஆண்டுக்கு 50  வேப்ப மரங்கள் என்ற எண்ணிக்கையில், 1990 ஆம் ஆண்டு முதல் 1993 ஆம் ஆண்டு வரையிலான நான்கு ஆண்டுகளில் ஒரு அரச மரம் உள்ளிட்ட சுமார் 200  மரங்கள் கொண்டு வந்து நடப்பட்டனமேலும், அவ்வப்போது பழுதான ஒருசில மரங்களுக்கு பதிலாக, புதிய மரங்கள் கொண்டு வந்து மீண்டும் நடப்பட்டு, அதன் எண்ணிக்கையில் குறைவு இல்லாமல் பார்த்துக் கொள்ளப்பட்டது. மேலும், வேப்ப மரங்களை சுற்றிலும் வேலிக்கருவை செடிகள் முளைத்தால், வேப்ப மரங்கள் காலப்போக்கில் அழிந்து போகும் என்பதால், வேலிக்கருவை செடிகளை உடனுக்குடன் அகற்றும் பணியும் மேற்கொள்ளப்பட்டது.   

சிதம்பர ஈசுவரர் கோவில் தெற்கு வெளிப் பிரகார சாலை - மரங்களின் பசுமை காட்சி.

        நான்கு ஆண்டுகளாக,கடற்கரை சாலை மற்றும் சிதம்பர ஈசுவரர் கோவில் வளாக பகுதிகளில் தொடர்ந்து வேப்ப மரங்களை கொண்டு வந்து நட்டுக் கொடுத்ததில், எனக்கு பெரிதும் துணையாக இருந்தவர் குலசையைச் சேர்ந்த ஆ.சப்பாணிமுத்து ஆவார். ஆ.சப்பாணிமுத்து போன்று ஆர்வமிக்க ஒருவர் எனக்கு அன்று கிடைக்காமல் போயிருந்தால், வேப்பமரங்களை கொண்டு வந்து கடற்கரையில் நடுகின்ற பணியை, அவ்வளவு எளிதாக என்னால் செய்திருக்க இயலாது.


                கீழமலையன் தெரு பிரிவிலிருந்து கடற்கரை செல்லும் சாலை -  மரங்களின் எழில் காட்சி.


 மேலும், ஆ.சப்பாணிமுத்து, குலசை முத்தாரம்மன் கோவிலின் மற்றொரு துணைக்கோவிலான குலசை விண்ணவரம் பெருமாள் கோவிலைச் சுற்றிலும் நூற்றுக்கும் மேற்பட்ட வேப்ப மரங்களை கொண்டு வந்து நட்டு, பசுமையை உருவாக்கியதிலும் பெரும்பணி ஆற்றி இருக்கிறார். ஆ.சப்பாணிமுத்து அவர்கள், பின்னாளில் குலசை முத்தாரம்மன் கோவில் அறங்காவலராகவும் இருந்துள்ளார். மேலும், கடற்கரை சாலையிலுள்ள மரங்கள் பராமரிப்பு பணியில் கோவில் அர்ச்சகர் எஸ்.செல்லப்பா பட்டர் என்ற மகரா‌ஜ பட்டர் இணைந்து பணியாற்றியதும் நினைவு கூறத்தக்கது.


 இது தவிர, 2006  ஆம் ஆண்டில், கோவில்பட்டி பூவனநாதசுவாமி கோவிலில் நிர்வாக அலுவலராக நான் பணியாற்றிய போது, கோவில்பட்டி பூவனநாத சுவாமி கோவில் மற்றும் சொர்ணமலை கதிரேசன் கோவில் (மலைக் கோவில்) ஆகியவற்றில் சுமார் 60 வேப்ப மரங்களை கொண்டு வந்து நட்டுக் கொடுத்ததில், குலசை ஆ.சப்பாணிமுத்து மற்றும் அர்ச்சகர் எஸ்.செல்லப்பா பட்டர் ஆகிய இருவரது பணியும் பாராட்டதக்கது ஆகும். 

 

       கடற்கரை சாலை - மரங்களின் இயற்கை எழில் காட்சி


   சிதம்பர ஈசுவரர் கோவில் கடற்கரை சாலையில் நடப்பட்ட வேப்ப மரங்களுக்கு தொடர்ந்து தண்ணீர் விட்டு பாதுகாத்து, பராமரிப்பு பணியைச் செய்ய, காவலர் என ஒரு புதிய பணியிடம் உருவாக்கப்பட்டு, குலசையை சேர்ந்த மு.நம்பி என்ற பணியாளர் அந்நாளில் நியமிக்கப்பட்டார். மரங்களுக்கு ஆரம்ப நாட்களில் தண்ணீர் விட்டுமரங்களை பழுதின்றி பாதுகாத்து பராமரிப்பு செய்த பணி இவரையே சேரும்.


              வேப்ப மரங்களை, பெயரளவில் நட்டதுடன் நின்று விடாமல், பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு ஆகிய பணிகள் தொடர்ந்து மேற் கொள்ளப்பட்டதால், வெயில் நேரத்தில் ஒதுங்க கூட நிழலின்றி, பாலைவனம்  போன்று வெட்ட வெளியாக காட்சி அளித்த சிதம்பர ஈசுவரர் கோவில் கடற்கரை வளாகம் மற்றும் கடற்கரைச் சாலை ஆகியன காண்போரை ஈர்க்கும் வகையில் பசுமைப் பகுதியாக மாற்றம் கண்டது.


          முப்பது ஆண்டுகளுக்கு முன்பு, வளம் இல்லாத கடற்கரை மணலில், பெரும் முயற்சி செய்து நட்டு பராமரித்த இந்த வேப்ப மரங்கள், இன்று சிதம்பர ஈசுவரர் கோவில் வளாகம் உள்ளிட்ட கடற்கரை சாலை முழுவதையும் பசுமைப் போர்வை கொண்டு போர்த்தியது போல் காட்சி அளிக்கிறது. கண்ணுக்கு குளிர்ச்சியையும், மனதுக்கு மகிழ்ச்சியையும், சுவாசிக்க தூய காற்றையும் வாரி வழங்கும் விலை மதிப்பற்ற இந்த மரங்கள், காலத்தால் அழிந்து விடாமல் பாதுகாத்து பராமரிக்க வேண்டிய பொறுப்பு, இந்த சாலையைப் பயன்படுத்தும் ஒவ்வொருவருக்கும்  உள்ளது.


47. அருள் மணம் பரப்பும் அன்னை முத்தாரம்மன் ஒலி நாடா வெளியீடு.

 

அன்னை முத்தாரம்மன் கோவிலில் மேற்கொள்ளப்பட்ட தொடர் வளர்ச்சிப் பணிகள் காரணமாக, கோவில் புதுப்பொலிவு பெற்று பக்தர்கள் வருகை அதிகரிக்கத் தொடங்கியது. இந்நிலையில் அன்னை முத்தாரம்மன் அருளுக்கு மகுடம் சூட்டும் வகையில், கவிஞர் வைரா அவர்களின் எளிய பாடல் வரிகளில், திரையுலக பின்னணி பாடகர்களில் அந்நாளில் மிகவும் பிரபலமாக இருந்த டி.எம்.சௌந்திரராஜன் மற்றும் பி.சுசிலா ஆகியோரது தேன்மதுர குரலில், அன்னையின் அருள் மணம் பரப்பும் ஒலிநாடா, கோவில் குறித்த ஒரு இனிய முன்னுரை விளக்கத்துடன் தயாரித்து வெளியிடப்பட்டது.


ஒலி நாடாவை வெளியிட்டு அறநிலையத்துறை அமைச்சர் மாண்புமிகு கே.பி.கந்தசாமி அவர்கள் உரை. அருகில் மாலைமுரசு அதிபர்  பா.இராமச்சந்திர ஆதித்தனார் அவர்கள் மற்றும் ஒலி நாடாவை தயாரித்து வெளியிட்ட ஆ.சுந்தரன் அவர்கள்.

இந்த ஒலி நாடாவின் வெளியீட்டு விழா, அறநிலையத்துறை அமைச்சராக இருந்த மாண்புமிகு கே.பி.கந்தசாமி அவர்கள் தலைமையில், 1991 ஆம் ஆண்டில் கோவில் கலையரங்கத்தில் வைத்து நடைபெற்றது. மாலைமுரசு நாளிதழ் அதிபர் திருமிகு பா.இராமச்சந்திர ஆதித்தனார் அவர்கள் இவ்விழாவில் கலந்து கொண்டு, குலசை முத்தாரம்மன் பாமாலை ஒலி நாடாவின் முதல் பிரதியை பெற்றுக் கொண்டார் என்பது இங்கு நினைவு கூறப்படுகிறது.


அன்னை முத்தாரம்மனின் அருள் மணம் பரப்பும் இந்த ஒலி நாடாவை, தனது சொந்த முயற்சியிலும், செலவிலும் தயாரித்து குலசை அன்னை முத்தாரம்மன் புகழுக்கு மகுடம் சூட்டியவர், தாண்டவன்காடு எனும் ஊரைச் சேர்ந்த ஆ.சுந்தரன் அவர்கள் ஆவார். தாண்டவன்காடு ஆ.சுந்தரன் அவர்கள், அன்னை முத்தாரம்மன் மீது கொண்ட தனிப்பட்ட ஈடுபாடு காரணமாக இந்த ஒலிநாடாவை தனது சொந்த செலவில் தயாரித்து வெளியிட்டார். அன்னையின் அருள் மணம் பரப்பும் இந்த எளிய, இனிய பாடல்கள் தமிழ் மக்கள் வாழும் பல பகுதிகளையும் சென்றடைந்தன. இதன் காரணமாக, அன்னை முத்தாரம்மன் கோவில் குறித்து அறிந்து கொள்ளும் ஆவலில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் கோவிலுக்கு வருகை தர ஆரம்பித்தனர்.

48. திருத்தேரில் அன்னை முத்தாரம்மன் திருவீதியுலா


 தோதகத்தி  மரத்தாலான எழில்மிகு தேர் 

மாதாந்திர கடைசி செவ்வாய் மற்றும் தசரா 10 ஆம் நாளன்று, சிதம்பர ஈசுவரர் கோவிலில் வைத்து நடைபெறக் கூடிய அபிஷேக ஆராதனைகளுக்கு பின், கடற்கரை சிதம்பர ஈசுவரர் கோவிலிலிருந்து முத்தாரம்மன் கோவிலுக்கு பவனி வரும் நிகழ்வு ஆகியவற்றை நடத்த மரத்தாலான அழகிய திருத்தேர் ஒன்றை செய்வதென திருப்பணி குழு முடிவு செய்ததுஇப்பணியை செய்து கொடுக்க காயாமொழியைச் சேர்ந்த பி.கோபால் அவர்கள் மற்றும் அவரது துணைவியார் திருமதி குணவதி அம்மாள் ஆகியோர் விருப்பம் தெரிவித்தனர். பி.கோபால் அவர்கள் பின்னாளில் அன்னை முத்தாரம்மன் கோவில் அறங்காவலர் குழு தலைவராகவும் இருந்துள்ளார் என்பது நினைவு கூறப்படுகிறது.




அறநிலையத்துறை அமைச்சர் மாண்புமிகு நடேசன் பால்ராஜ் அவர்களால் தேர் நிறுத்த நிலையம் திறப்பு. சட்டமன்ற உறுப்பினர் ஆ.செல்லத்துரை, அறநிலையத்துறை ஆணையர் ஜி. இராமகிருஷ்ணன் மற்றும் கோவிலுக்கு ஒரு ஏக்கர் நிலம் அளித்த தேரியூர். ந.இராம்குமார் ஆகியோர்.

. 

 திருப்பணிக் குழுவின் விருப்பத்தை நிறைவேற்றும் பொருட்டு, பி.கோபால் அவர்கள் அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய, தோதகத்தி (Rosewood) மரத்தாலான திருத்தேர் ஒற்றை செய்து கொடுத்தார். மேலும், திருத்தேரை நிறுத்துவதற்கு வசதியாக தேர் நிறுத்த மண்டபம் ஒன்றையும், கோவிலுக்கு எதிரே கீழ் வரிசையில், பி.கோபால் அவர்கள் கட்டிக் கொடுத்தார். பின்னர், திருத்தேர், தேர் நிறுத்த மண்டபம், அதன் அமைவிடம் சுமார் 2 சென்ட் நிலம் ஆகிய அனைத்தையும் பி.கோபால் குணவதி அம்மாள் தம்பதியர் குலசை முத்தாரம்மன் கோவிலுக்கு நன்கொடையாக வழங்கினர். இதன் விழா, 1994 ஆம் ஆண்டில் அறநிலையத் துறை அமைச்சர் மாண்புமிகு நடேசன் பால்ராஜ் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது


  மேலும், எஞ்சி இருந்த தோதகத்தி மரங்களைப் பயன்படுத்தி, தசரா திருவிழா நாட்களில் இரவு நேரத்தில் நடைபெறும் அன்னை முத்தாரம்மனின் திருவீதியுலா காட்சிகளை அனைவரும் என்றென்றும் சிற்ப வடிவில் கண்டு மகிழும் வகையில், நுணுக்கமான மரச் சிற்பங்களாக கதவுகளில் வடிவமைத்து, பிரமாண்டமான இரண்டு கதவுகளும், கொடிமர மண்டப வாசல் முகப்பில் பொருத்தப்பட்டன.


இந்து அறநிலையத்துறை அமைச்சர் மாண்புமிகு நடேசன் பால்ராஜ் அவர்கள் முன்னிலையில், நன்கொடையாளர் பி.கோபால் அவர்கள் தேர் நிறுத்த மண்டபத்தில் குத்துவிளக்கு ஏற்றுதல்.

49. இரண்டு கால பூஜை, நான்கு கால பூஜையாக மாற்றம்.

1980 ஆம் ஆண்டு வரை, குலசை முத்தாரம்மன் கோவில் நடை, தினசரி காலை 8.00 மணிக்குதான் திறக்கப்பட்டு வந்தது என்பது இன்று பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. தினசரி காலை 8.00 மணிக்கு கோவில் நடையை திறந்து, பகல் 12.00 மணி அளவில் உச்சி கால பூஜையும், உச்சிகால பூஜை முடிவுற்ற பின்னர் கோவில் பகல் 12.30 மணியளவில் நடை மூடப்பட்டு, பின்னர் மீண்டும் மாலை 5.00 மணிக்கு கோவில் நடையை திறந்துஇரவு 8.30 அளவில் அர்த்த ஜாம பூஜை என தினசரி இரண்டு கால பூஜை மட்டுமே தொன்று தொட்டு  முத்தாரம்மன் கோவிலில் நடைபெற்று வந்தது.


          பக்தர்களின் வருகை அதிகரித்து வந்த நிலையில், தினசரி காலை 8.00 மணிக்கு கோவில் நடை திறக்கும் வழக்கத்தால், வெளியூர்களிலிருந்து வரும் பக்தர்கள் பெரும் சிரமங்களுக்கு ஆளானார்கள். எனவே, பக்தர்களின் சிரமங்களை களைய, காலை 8.00 மணிக்கு கோவில் நடை திறக்கும் வழக்கத்திற்கு பதிலாக, இரண்டு மணி நேரம் முன்னதாக அதாவது காலை 6.00 மணிக்கே கோவில் நடையை திறந்து, காலை 8.00 மணி அளவில் காலசந்தி பூஜை என்ற புதிய காலத்தை உருவாக்கி,14-01-1981 முதல் தினசரி இரண்டு காலம் மட்டுமே நடைபெற்று வந்த பூஜையை, மூன்று கால பூஜையாக மாற்றி அமைக்கப்பட்டது.


         அதன் பின்னர், மாலை வேளையில் கோவிலுக்கு வரும் பக்தர்கள் இரவு 8.30 மணிக்கு நடைபெறும் அர்த்தஜாம பூஜை வரை காத்திருக்க வேண்டிய நிலை இருந்தது. இதனை கருத்தில் கொண்டு, 31-08-1993 முதல், மாலை 5.00 மணிக்கு கோவில் நடையை திறக்கும் வழக்கத்திற்கு பதிலாக, ஒரு மணி நேரம் முன்னதாக, அதாவது மாலை 4.00 மணிக்கு கோவில் நடையை திறந்து, மாலை 5.30 மணியளவில் சாயரட்சை எனும் புதிய பூஜை காலத்தை உருவாக்கி, அதுவரை தினசரி மூன்று கால பூஜை நடைபெற்று வந்ததை, நான்கு கால பூஜையாக மாற்றி அமைக்கப்பட்டது. இதன் காரணமாக வெளியூர்களிலிருந்து கோவிலுக்கு வரும் பக்தர்கள், கோவிலில் நடைபெறும் தினசரி பூஜையைக் காண, நீண்ட நெடு நேரம் காத்திருக்கும் நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. 


மேலும், தினசரி நடந்த இரண்டு கால பூஜை, நான்கு கால பூஜையாக மாற்றம் செய்யப்பட்டதால், மடப்பள்ளி/பரிசாரகர் பணியை கூடுதல் பணியாக தொடர்ந்து செய்து வந்த அர்ச்சகரின் வேலைப் பளுவை குறைக்கும் நோக்கத்தில், மடப்பள்ளி/பரிசாரகர் எனும் புதிய பணியிடம் 1993 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டு, அதில் ஒருவர் முதன்முதலாக நியமனம் செய்யப்பட்டார்.


50. தேரியூர் ந.இராம்குமார் அவர்கள் வழங்கிய சுமார் ஒரு ஏக்கர் நன்கொடை நிலம்.


       எனது பணிக்காலத்தில், கோவில் விரிவாக்க பணிகளுக்காக, கோவிலை ஒட்டி பல காலிமனைகள் நன்கொடையாக பெறப்பட்டன. எனினும், பக்தர்களின் வருகையும், வருமானமும் அதிகரித்தும் கூட, கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுப்பதற்கு தேவையான இடம், கோவிலுக்கென அதன் அருகில் இல்லாமல் இருந்தது மிகப் பெரும் குறை என்றே கூற வேண்டும்.

  

      இத்தகைய சூழ்நிலையில், உடன்குடியில் ராம்பிரசாத் என்ற பெயரில் ஜவுளி நிறுவனம் ஒன்றை நடத்தி வந்த, உடன்குடி அருகேயுள்ள தேரியூர் எனும் ஊரைச் சேர்ந்த ந.இராம்குமார் அவர்களும் அவரது துணைவியார் சுயம்புகனி அம்மாள் அவர்களும், கோவிலை ஒட்டி கீழ்புறம், அவர்களுக்கு சொந்தமாக இருந்த சுமார் ஒரு ஏக்கர் அளவுள்ள இடத்தை, முத்தாரம்மன் கோவில் பக்தர்களுக்கு உதவும் நோக்கத்தில், நன்கொடையாக வழங்க முன்வந்தனர் என்பதை நன்றியுடன் நினைவு கூற விரும்புகிறேன். 

  

இந்த நன்கொடை நிலம் கோவிலுக்கு கிழக்கில், கோவில் கல்யாண மண்டபத்தை ஒட்டி தெற்கு மற்றும் தென்கிழக்கு பகுதியில், குலசேகரன்பட்டினம் கிராம புல எண் 136 ல் 74 சென்ட் புஞ்சை நிலம் மற்றும் அதனை ஒட்டிய குலசேகரன்பட்டினம் கிராம புல எண் 186-ல் சுமார் 20 சென்ட் கிராம நத்தம் நிலம் ஆகியவற்றை உள்ளடக்கியது ஆகும். இந்த நிலத்தை ந.இராம்குமார் அவர்களும், அவரது துணைவியார் திருமதி சுயம்புகனி அம்மாள் அவர்களும் அன்று தாராள மனதுடன் வழங்கியதால், இந்த இடத்தில் பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தவும், குளிப்பதற்கும் வசதிகள் செய்து கொடுக்கப்பட்டன. மேலும், இந்த இடத்தின் கிழக்கு எல்லையை ஒட்டிபக்தர்களின் தண்ணீர் தேவை கருதி பெரிய வட்டக் கிணறு ஒன்றும் தோண்டி கட்டப்பட்டது


51. கோவில் தலவரலாறு நூல் வெளியீடு.

 

 கண்ணுக்குத் தெரியாத காற்றைப் போல், அன்னை முத்தாரம்மன் எங்கும் நீக்கமற நிறைந்து அருள் பாலிக்கும் சிறப்பு மிக்க திருத்தலம் இது. எனவே, அன்னை முத்தாரம்மன் புகழுக்கு பெருமை சேர்க்கும் வகையில், அன்னையின் திருத்தல பெருமை, பெயர்க் காரணம், பிற சக்தி தலங்களில் காண இயலாத அதிசயமாக அம்மையும் அப்பனும் ஒரே பீடத்தில் வடதிசை நோக்கி அமர்ந்து  அருள் பாலிக்கும் சிறப்பு, தசரா திருவிழா கொண்டாடக் காரணமாகக் கூறப்படும் புராண நிகழ்வு, தசரா திருவிழாவின் பெருஞ் சிறப்புமுத்தாரம்மன் நிகழ்த்திய அற்புத செயல்கள் போன்ற பலவற்றையும் பக்தர்கள் அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில், தலவரலாறு நூல் ஒன்றை முதன் முதலாக தயாரித்து வெளியிடும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.


 கோவில் தலவரலாறு வெளியீடு- அறநிலையத்துறை அமைச்சர் மாண்புமிகு நடேசன் பால்ராஜ் அவர்கள் வருகை.


 கோவில் தலவரலாற்றை எழுதுவதற்கு, நாகர்கோவில் அருகே உள்ள மருங்கூர் எனும் ஊரைச் சேர்ந்த பூமணி அடிகள் முன்வந்தார். பூமணி அடிகளார் சிவஞான போதம், சிவஞான சித்தியார் போன்ற சைவ சமய நூல்களில் உள்ள தத்துவ கருத்துக்களை பாமரரும் புரிந்து கொள்ளும் வகையில் மிக எளிமையாக எடுத்துரைக்கும் வல்லமை உடையவராக இருந்தார். இவர், தமிழக கோவில்கள் பலவற்றிலும் சொற்பொழிவாற்றி, அருள் மணம் பரப்பியவர். மேலும், பூமணி அடிகளும் அவரது துணைவியார் திருமதி லலிதா பூமணி அவர்களும் குமரி முதல் இமயம் வரை நடைபயணம் மேற்கொண்டுசைவ சமயத்திற்கு அருந்தொண்டு ஆற்றியவர்கள்.

 

அறநிலையத்துறை அமைச்சர் மாண்புமிகு நடேசன் பால்ராஜ் அவர்கள் குலசை கோவிலில் தரிசனம்.


இத்திருத் தலத்தில் அம்மையும், அப்பனுமாக ஒரே பீடத்தில் அமர்ந்நு அருள் பாலிக்கும் அன்னை முத்தாரம்மன், சுவாமி ஞானமூர்த்தி ஈசுவரர் திருமேனி குறித்த விளக்கத்தை, பூமணி அடிகள் தனக்கே உரிய தத்துவ விளக்கத்துடன், தல வரலாற்றை மிகச் சிறப்பாக எழுதி இருந்தார். தல வரலாற்று நூலுக்கு திருத்தங்கள் தேவைப்பட்ட இடங்களில், குலசை திருவருள் உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணிபுரிந்த புலவர் சு. முத்தரசு அவர்கள் உரிய திருத்தங்களை திறம்பட செய்து கொடுத்தார்.


                      தலவரலாறு நூலை வெளியிட்டு இந்து அறநிலையத் துறை அமைச்சர் மாண்புமிகு நடேசன் பால்ராஜ் அவர்கள் உரை. அருகில் சட்டமன்ற உறுப்பினர்  ஆ.செல்லத்துரை அவர்கள்.


 கோவில் தலவரலாறு நூலை, சென்னை ஓட்டல் சரவணபவன், தாண்டவன்காடு எஸ்.எஸ்.ஏஜென்ஸி, உடைப்பிறப்பு கே.சண்முகசுந்தரபாண்டி நாடார், சிறுநாடார் குடியிருப்பு குறிஞ்சி எம்.கார்த்திகேயன் ஆகியோர் இணைந்து, அழகிய வண்ணப் படங்களுடன் சிவகாசி மேப்சன் ஆப்செட் அச்சகத்தில்‌ அச்சிட்டு நன்கொடையாக கோவிலுக்கு வழங்கி இருந்தனர். பக்தர்கள் படித்துப் பயனுறும் வகையில் அமைந்த, இந்த தலவரலாறு நூல் 1994 ஆம் ஆண்டில், அறநிலையத் துறை அமைச்சர் மாண்புமிகு நடேசன் பால்ராஜ் அவர்களால், அன்னை முத்தாரம்மன் கோவில் கலையரங்கத்தில் வைத்து வெளியிடப்பட்டது. 


52. கோவில் வெளிப்பிரகார நடைபாதை சீரமைப்பு பணி.


    மாதாந்திர கடைசி செவ்வாய் மற்றும் திருவிழா நாட்களில், கோவிலைச் சுற்றி அன்னையின் திருவீதியுலா தங்கு தடையின்றி நடைபெறவும், பக்தர்கள் கோவிலைச் சுற்றி எளிதாக வலம் வரவும், வெளிப்பிரகார நடைபாதையை சீரமைக்க வேண்டிய அவசியம் அந்நாளில் ஏற்பட்டது. இந்த சீரமைப்பு பணிக்கு, கோவிலைச் சுற்றி தேங்காய் பழம் மற்றும் பூக்கடைகள் வைத்து வணிகம் செய்த சிறு வணிகர்கள் அனைவரும், கோவில் நிர்வாகத்திற்கு மிகுந்த ஒத்துழைப்பு அளித்தனர். முத்தாரம்மன் கோவிலின் அபரிமிதமான வளர்ச்சிக்கு, இதுபோல பல்வேறு தரப்பினரும் அளித்த ஆதரவும், ஒத்துழைப்புமே அடிப்படை காரணம் எனில், அது மிகையன்று.

       

             மேலும், கோவில் கொடிமர மண்டபத்திற்கு கீழ்புறம் இருந்து வந்த கோவில் கல்யாண மண்டபம் மற்றும் அதனை ஒட்டி வடக்கில் இருந்த கோவில் மடப்பள்ளி ஆகிய இரண்டு கட்டிடங்களின் முகப்பு பகுதிகள், கிழக்கு வெளிப் பிரகார நடைபாதை சீரமைப்பு பணிக்கு சற்று இடையூறாக இருந்தன. இதன் காரணமாக, கோவிலை ஒட்டியிருந்த, கோவில் கல்யாண மண்டபம் மற்றும் மடப்பள்ளி ஆகிய இரண்டு கட்டிடங்களின் முகப்பு பகுதிகள் சற்று பின்தள்ளி கட்டப்பட்டன. இதனால், திருவிழா காலங்களில், திருவீதியுலா தங்கு தடையின்றி நடைபெறவும், பக்தர்கள் எளிதாக வெளிப் பிரகாரத்தில் வலம் வரவும் வசதி ஏற்பட்டது.


53. நிறைவேறாது போன கோவில் மடப்பள்ளி புதிய கட்டுமானம்.

          கிழக்கு வெளிப் பிரகார நடைபாதை சீரமைப்பு பணியில், கோவில் மடப்பள்ளி கட்டிடத்தின் முகப்பு பகுதி சற்று பின் தள்ளப்பட்டதால், மடப்பள்ளியின் பயன்பாட்டு இடம் குறைந்து, திருவிழா காலங்களில் பிரசாதம் தயாரிப்பு பணிகளுக்கு இடையூறு ஏற்பட்டது. இந்நிலையில்மடப்பள்ளிக்கு பின்புறத்தில் கோவிலுக்கு சொந்தமான இடம், கோவில் கல்யாண மண்டப கிழக்கு எல்லை வரை, நூறடி நீளத்திற்கும் மேலாக காலியிடமாக விடப்பட்டு இருந்தது. சுமார் 5 சென்ட் அளவுள்ள இந்த காலியிடம், மடப்பள்ளியிலிருந்து கழிவுநீர் வெளியேற வசதியாக, திறந்தவெளிப் பகுதியாக இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

         எனவே, கிழக்கு வெளிப் பிரகாரத்தில் இருந்த ஆஸ்பெஸ்டாஸ் மேற்கூரை அமைப்புடன் கூடிய மடப்பள்ளி கட்டிடத்தை முற்றிலும் இடித்து அகற்றி விட்டு, மடப்பள்ளிக்கு பின்புறம் இருந்த சுமார் 5 சென்ட் அளவுள்ள காலியிடத்தையும் சேர்த்து, மிகவும் விரிவான அளவில் நவீன வசதிகளுடன் கூடிய காங்கிரீட் கட்டுமானமாக மடப்பள்ளியைக் கட்ட திட்டமிடப்பட்டதுமேலும், மடப்பள்ளிக்கு பின்புறம் இருந்த காலியிடத்தின் கிழக்கு எல்லை முடிவில், கோவில் கல்யாண மண்டப பயன்பாட்டிற்காக அந்நாளில் தோண்டி கட்டப்பட்ட பெரிய வட்டக் கிணறு ஒன்றும் இருந்தது. ஆனால், இந்த கிணற்றில் 1977 ஆம் ஆண்டில் நடந்த ஒரு அசாதாரண நிகழ்வு காரணமாக, கிணறு நல்ல நிலையில் இருந்தும், பயன்படாமல் கைவிடப்பட்டு இருந்து வந்தது.

மேற்கூறிய பெரிய கிணற்றை முன் மாதிரியாக கொண்டுதான், கடற்கரை செல்லும் சாலையில், சிதம்பர ஈசுவரர் கோவிலை ஒட்டி தெற்கில் ஒன்றும், அதன் கிழக்கில் ஒன்றும், முத்தாரம்மன் கோவிலுக்கு வடமேற்கில் சுண்டங்கோட்டை திருமதி பூமணி அம்மாள் மற்றும் அவரது புதல்வர் டி.எஸ்..ஜோதிஆனந்தன் ஆகியோர் வழங்கிய நன்கொடை இடத்தில் ஒன்றும், முத்தாரம்மன் கோவிலுக்கு கிழக்கில் தேரியூர் ந.இராம்குமார் வழங்கிய நன்கொடை இடத்தில் ஒன்றுமாக, 4 பெரிய வட்ட கிணறுகள் புதிதாக தோண்டி கட்டப்பட்டு, பக்தர்களுக்கு தேவையான தண்ணீர் வசதிகள் அந்நாளில் செய்து கொடுக்கப்பட்டன. ஆனால் 1996 ஆம் ஆண்டில் தூத்துக்குடி சங்கர ராமேசுவரர் கோவிலுக்கு மாறுதல் அளிக்கப்பட்டதால், திட்டமிட்டவாறு புதிய மடப்பள்ளி கட்டுமானத்தை கட்ட இயலாமல் போனது


54. கோவிலுக்குச் சொந்தமான அசையாச் சொத்துக்கள். 


குலசை முத்தாரம்மன் கோவிலைப் பொறுத்தவரை, கோவிலுக்கு சொந்தமாக கட்டிடங்கள், நஞ்சை, புஞ்சை போன்ற அசையாச் சொத்துக்கள் எதுவும் இல்லை. கோவிலிலிருந்து, காவல் நிலையம் செல்லும் இணைப்பு சாலையை ஒட்டி வடபுறம், பக்தர்களுக்கு கை கால் முகம் கழுவி சுத்தம் செய்வதற்கென ஒரு துலா கிணறும் மற்றும் அதைச் சேர்ந்த சுமார் 5 சென்ட் அளவுள்ள காலியிடமும்குலசேகரன்பட்டினம் கிராம நத்தம் புல எண் 186-1 ல் இருந்து வந்தது. கோவிலுக்கென தொன்று தொட்டு இருந்து வந்த பாரம்பரிய அசையாச் சொத்து இதுவாகும்.


          அதன் பின்னர் கோவிலுக்கு மேல்புறத்தில், குலசேகரன்பட்டினம் கிராம நத்தம் புல எண் 186-1 ல் ஒரு ஓட்டுக் கட்டிடம் மற்றும் அதனுடன் இணைந்த காலிமனை உள்ளிட்ட சுமார் 3 சென்ட் அளவுள்ள இடம், 1963 ஆம் ஆண்டில் சந்தையடியூர் தசரா குழுவினரால் கோவிலுக்கு நன்கொடையாக வழங்கப்பட்டது. கோவிலுக்கு நன்கொடையாக கிடைத்த முதல் அசையாச் சொத்து இதுவாகும்.


            பின்னர், கல்யாண மண்டபம் ஒன்றை கட்ட, குலசேகரன்பட்டினத்தை சேர்ந்த பெ.சுடலைக்கோனார் அவர்களை தலைவராக கொண்டு, கட்டிடக் கமிட்டி என்ற பெயரில் ஒரு குழு செயல்பட்டு வந்துள்ளது. கட்டிட கமிட்டியின் முயற்சியால், கோவிலை ஒட்டி கீழ்புறமாக, குலசேகரன்பட்டினம் கிராம நத்தம் புல எண் 186-1 ல் சுமார் 50 சென்ட் அளவிலான பல காலி மனை நிலங்களை, 1967 ஆம் ஆண்டில் நன்கொடை மற்றும் கிரயம் மூலம் பெற்று, பத்திரப் பதிவுத் துறையில் பதிவு செய்யப்பட்டது. 


           இந்த இடத்தில், ஆஸ்பெஸ்டாஸ் மேற்கூரை அமைப்புடனும், வடக்கு மற்றும் வடகிழக்கில் இருந்த காலியிடத்தின் வடகிழக்கு மூலையில், பெரிய வட்டக் கிணறு உள்ளிட்ட வசதியை உள்ளடக்கி கல்யாண மண்டபம் ஒன்று கட்டப்பட்டு, 1975 ஆம் ஆண்டில், தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் மாண்புமிகு சி.பா.ஆதித்தனார் அவர்களால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.


55. விரிவாக்க பணிக்கு நன்கொடையாக பெற்ற சுமார் 2 ஏக்கர் மனை நிலங்கள்


கோவிலில் மேற்கொள்ளப்பட்ட தொடர் வளர்ச்சிப் பணிகளால், பக்தர்களது வருகையும், வருமானமும் அதிகரிக்கத் தொடங்கி இருந்த நிலையில், குறுகிய இடத்தில் இருந்து வந்த கோவிலை விரிவுபடுத்தி, பக்தர்களுக்கு நெரிசல் இல்லாத வழிபாட்டு சூழ்நிலையை உருவாக்கி கொடுக்கவும், அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கவும் கூடுதல் இடவசதி கோவில் நிர்வாகத்திற்கு தேவைப்பட்டது. 

  

        நான் பொறுப்பேற்ற போது, சிவ.சௌந்திரபாண்டிய நாடார் அவர்களிடமிருந்து, 1980 ஆம் ஆண்டில் கோவிலுக்கு மேல்புறமாக குலசை கிராம நத்தம் புல எண் 186-1 ல் 44 சென்ட் அளவுள்ள மனை நிலம் மற்றும் அதிலுள்ள கலையரங்க மேடை ஆகியன கோவிலுக்கு நன்கொடையாக பெறப்பட்டது. திருவிழா காலங்களில் கலை நிகழ்ச்சிகள் நடத்தவும், பக்தர்கள் ஓய்வு கொள்ளவும், திருவிழா அல்லாத காலங்களில், ஏழை எளிய மக்கள் தங்கள் இல்ல திருமணங்களை குறைந்த கட்டணத்தில் நடத்தவும் இங்கு வசதிகள் ஏற்படுத்தப்பட்டன.


       அதன்பின், கலையரங்கத்தை ஒட்டி வடக்கு பகுதியில், அரசு மருத்துவமனை காம்பவுண்ட் மதில் சுவருக்கு கிழக்கில், திருச்செந்தூர் பிரதான சாலைக்கும், பிரதான சாலையிலிருந்து கோவிலுக்கு வரும் பாதைக்கும் தெற்குஇரா.மாணிக்கம் ஆச்சாரி, இரா.உமையொருபாகம் ஆச்சாரி, திருநீலகண்டம் பிள்ளை வகையறா தங்கராசு காலி மனைக்கும் மேற்கில், சுண்டங்கோட்டை திருமதி பூமணி அம்மாள் மற்றும் அவரது புதல்வர் டி.எஸ்..ஜோதிஆனந்தன் ஆகியோரிடமிருந்து குலசை கிராம நத்தம் புல எண் 186-1 ல் சுமார் 17 சென்ட் அளவுள்ள காலிமனை நன்கொடையாக பெறப்பட்டது.


           பின்னர், அரசு மருத்துவமனை காம்பவுண்ட் மதில் சுவரை ஒட்டி, திருமதி பூமணி அம்மாள் நன்கொடை இடத்திற்கும் கிழக்கில், கலையரங்கத்திற்கு சற்று வடமேற்காக, குலசையை சேர்ந்த இரா.மாணிக்கம் ஆச்சாரி மற்றும் இரா.உமையொருபாகம் ஆச்சாரி ஆகிய இருவரது வீடுகளுக்கு பின்புறம் இருந்த காலிமனை நிலம்நத்தம் புல எண் 186-1 ல் சுமார் 6 சென்ட் அளவுள்ள இடம், குலசை விஸ்வகர்ம தொழியல் கூட்டுறவு சங்க செயலராக இருந்த எஸ்.இரகுநாதன் அவர்கள் உதவியுடன், சம்மந்தப்பட்டவர்களிடம் நன்கொடையாக பெறப்பட்டது. அதுபோல கோவில் கலையரங்கத்தின் வடமேற்கு மூலையில், பூமணி அம்மாள் நன்கொடை இடத்திற்கு கீழ்புறம் சுமார் 2 சென்ட் அளவுள்ள இடம், திருநீலகண்டம் பிள்ளை வகையறா தங்கராசு என்பவரிடமிருந்து பெறப்பட்டது.


        இரா.மாணிக்கம் ஆச்சாரி, இரா.உமையொருபாகம் ஆச்சாரி, திருநீலகண்டம் பிள்ளை வகையறா தங்கராசு ஆகியோரிடமிருந்து பெற்ற நன்கொடை காலிமனை நிலம் மற்றும் திருமதி பூமணி அம்மாள் நன்கொடை நிலத்தின் ஒரு பகுதி ஆகியவற்றை பயன்படுத்தியே, கலையரங்கத்தில் திருமணம் நடத்துவோர் பயன் பெறும் வகையில், சமையல் அறை மற்றும் உணவுக்கூடம் போன்ற வசதிகள் அந்நாளில் சிறிய அளவில் உருவாக்கப்பட்டது. அதன் பின்னர் 2008 ஆம் ஆண்டு வாக்கில் இந்த இடத்தில் மாதவன்குறிச்சி நா.அருணாசல நாடார் அவர்களால் நவீன முறையில் உணவுக்கூட மண்டபம் மற்றும் சமையல் கூடம் ஆகியன காங்கிரீட் மண்டபமாக கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது.


     அதுபோல கலையரங்கத்தின் தென்புறம், பேய்க்குளம் இராமசாமி ஆச்சாரி அவர்களிடமிருந்துகுலசேகரன்பட்டினம் கிராம நத்தம் புல எண் 186-1 ல் சுமார் 8 சென்ட் அளவுள்ள மனை நிலம் நன்கொடையாக பெறப்பட்டது. மேலும், இந்த இடத்தை ஒட்டி கோவில் அனுபவத்தில் தொடர்ந்து இருந்து வந்த, உதிரமாடன்குடியிருப்பு பால்பாண்டி நாடார், பெரியகண்டன்வடலி சுப்பிரமணிய நாடார் மற்றும் ஈசுவரத்தம்மாள் ஆகியோரது காலி மனை நிலங்களுக்கு, இந்த நிலங்களுக்கு சம்மந்தமே இல்லாத சிலர், நத்தம் நிலவரி திட்டத்தின் கீழ் பட்டா பெற்றனர்


            இது கண்டறியப்பட்டு, மாவட்ட வருவாய் அலுவலரிடம் முறையீடு செய்ததன் பேரில், தனி நபர்களுக்கு வழங்கப்பட்ட பட்டாக்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. இதனால் சுமார் 16 சென்ட் அளவுள்ள காலி மனை நிலம் கோவில் பயன்பாட்டுக்கு மீண்டும் கொண்டு வரப்பட்டது. இந்த இடத்தில்தான் திருவிழா காலங்களில் தரிசனத்திற்கான வரிசை முறை அமைக்கப்பட்டு, நெரிசலின்றி பக்தர்கள் பாதுகாப்பாகவும், விரைவாகவும், கோவிலுக்குள் சென்று தரிசனம் செய்ய வசதிகள் உருவாக்கப்பட்டன. இந்த இடத்தின் ஒரு பகுதியில் கொட்டங்காடு தசரா குழுவினர், 2008 ஆம் ஆண்டு வாக்கில் கோவிலுக்கு நன்கொடையாக ஆஸ்பெஸ்டாஸ் மண்டபம் ஒன்று கட்டி கொடுத்துள்ளனர் .


             மேலும், பி.கோபால் - குணவதி அம்மாள், குலசை கிராம நத்தம் புல எண் 186-ல் கோவிலுக்கு எதிரே கீழ்புறத்தில்தேர் நிறுத்த மண்டப கட்டிடம் மற்றும் அதன் முன்புறம் உள்ள காலி மனை உள்ளிட்ட சுமார் 2 சென்ட் நிலத்தையும்கோவிலுக்கு நன்கொடையாக அளித்தனர்.


        உடன்குடி தேரியூர் ந.இராம்குமார் அவர்களிடம் இருந்து, கோவிலுக்கு கீழ்புறத்தில், கோவில் திருமண மண்டபத்திற்கு தெற்கு மற்றும் தென்கிழக்கில், குலசேகரன்பட்டினம் கிராம புல எண் 136 ல் சுமார் 74 சென்ட் புஞ்சை நிலமும், அதன் மேல்புறம் கிராம நத்தம் புல எண் 186-1 ல் சுமார் 20 சென்ட் மனை நிலமும் நன்கொடையாக பெறப்பட்டன. தேரியூர் ந.இராம்குமார் அவர்களிடமிருந்து பெறப்பட்ட நன்கொடை நிலத்தைப் பயன்படுத்தியே, பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டன.


56. கோவில் வளர்ச்சியில் நன்கொடையாளரின் அளப்பரிய பங்கு.


  கோவிலை விரிவுபடுத்தவும், கட்டுமானப் பணிகளைச் செய்யவும், பக்தர்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கவும், எனது பணிக்காலத்தில் நன்கொடையாளர் பணிகள் மிக அதிக அளவில் பயன்படுத்திக் கொள்ளப்பட்டன. நன்கொடையாளர் பலரும், சிறிதும், பெரிதுமாக வழங்கிய சுமார் இரண்டு ஏக்கர் அளவுள்ள காலிமனை நிலங்கள்தான், கோவிலை விரிவுபடுத்தவும், புதிய கட்டுமானப் பணிகளை செய்யவும், கோவிலை, வளர்ச்சியின் உச்சத்துக்கு கொண்டு செல்லவும் பெரிதும் உதவியது எனலாம்.

  

         கோவில் வளர்ச்சியில், கைமாறு கருதாது உதவிய நல்மனம் படைத்த நன்கொடையாளர் பலரையும், இன்றளவும் நன்றியுடன் நினைத்துப் பார்க்கிறேன். ஏனெனில், நன்கொடையாளர் பங்களிப்பு இல்லாமல் இது போன்ற வளர்ச்சியை எட்டி இருக்க இயலாது. 1978 ஆம் ஆண்டில் ஒரு சாதாரண கிராமக் கோவிலாக, மிக குறைந்த வருமானத்தில் இருந்து வந்த குலசை முத்தாரம்மன் கோவில், வியக்கத்தக்கதொரு வளர்ச்சியை அடைய காரணம், அற உணர்வும், அன்னை முத்தாரம்மன் மீது அபரிமிதமான பற்றும் கொண்ட நன்கொடையாளர்களின் அளப்பரிய பணிகளே! இதனால் பக்தர்களின் வருகையும், வருமானமும் மள மள என குறுகிய காலத்தில் உயர்ந்து, தமிழகத்தின் முன்னணி கோவில்களில் ஒன்றாக குலசை முத்தாரம்மன் கோவில் உயர்ந்தது.


    எனது பணிக்காலத்திற்கு பின்பும் கூட, கலையரங்கத்தின் தென் பகுதியில் கொட்டங்காடு தசரா குழுவினரால் பிரமாண்டமான ஆஸ்பெஸ்டாஸ் மண்டபம், கலையரங்கத்திற்கு வடமேற்கில் மாதவன்குறிச்சி நா.அருணாசல நாடார் அவர்களால் காங்கிரீட்டாலான நவீன உணவுக்கூட மண்டபம் மற்றும் சமையல் கூடம் ஆகிய நன்கொடையாளர் பணிகள், காயாமொழி பி.கோபால் அவர்கள் அறங்காவலர் குழு தலைவராக இருந்த போது நடைபெற்றுள்ளது. 


   அதுபோல, தண்டுபத்து ச.இராமசாமி நாடார் அவர்கள் எழில்மிகு தோற்றத்தில், பிரமாண்டமான முன்மண்டபம் கோவிலுக்கு நன்கொடையாக கட்டி வழங்கியுள்ளார். மேலும், கோவில் அர்த்த மண்டபம், மகா மண்டபம், கொடிமர மண்டபம் மற்றும் சுற்றுப் பிரகார மண்டபம் ஆகியவற்றின் தரைதளம் முழுவதும் மார்பிள் கல் பதித்து, காண்போரை கவரும் வகையில் மெருகூட்டப்பட்டுள்ளது. மேற்கூறிய பணிகள், தாண்டவன்காடு வே.கண்ணன் அவர்கள் அறங்காவலர் குழு தலைவராக இருந்த போது நடைபெற்றுள்ளது. எனவே, குலசை முத்தாரம்மன் கோவில் வளர்ச்சியில், நன்கொடையாளர்கள் தொடர்ந்து அளித்து வரும் ஆர்வம் மிகவும் பாராட்டத் தக்கது ஆகும்.


 57. எனது பணிக்காலத்தில் இருந்த அறங்காவலர் குழு.

 

எனது பணிக்காலத்தில், 1980-1981 ல் குலசையை சேர்ந்த வி.தம்பாபிள்ளை அவர்கள் அறங்காவலர் குழு தலைவராக இருந்தார். இரா.சந்நியாசி, கே.பி.கந்தன், ஆ.செல்லத்துரை, கே.எஸ்.கணேசன் ஆகியோர் இதில் அறங்காவலர்களாக இடம் பெற்று இருந்தனர். பின்னர் 1981-1984 ல் அறங்காவலர் குழு தலைவராக, உடன்குடி சிவலூர் ஆ.செல்லத்துரை அவர்கள் இருந்தார். பின்னர், 1984-1986 ல், உடன்குடி சண்முகானந்தா திரையரங்க உரிமையாளர் எஸ்.துரைராஜ் பிள்ளை அவர்கள் அறங்காவலர் குழு தலைவராக இருந்துள்ளார். இந்த குழுவில் பி.சுடலைமணி என்பவரும் இடம் பெற்றிருந்தார்பின்னர் 1993-1996 ல், கே.எஸ்.கணேசன் அவர்கள் அறங்காவலர் குழு தலைவராக இருந்தார். இந்த குழுவில் சிவ.மனோகரன், எஸ்.இசக்கிமுத்து, எம்.பெருமாள், ஆ.சப்பாணிமுத்து ஆகியோர் அறங்காவலர்களாக இடம்  பெற்பெற்று இருந்தனர்


   குலசை முத்தாரம்மன் கோவில் அறங்காவலர் குழு தலைவராக இருந்த போது மிகத் திறம்பட பணியாற்றிய ஆ.செல்லத்துரை அவர்கள், பிற்காலத்தில் திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினராகவும், தூத்துக்குடி மாவட்ட அறங்காவலர் நியமனக் குழு தலைவராகவும் பணியாற்றி உள்ளார் என்பது இங்கு நினைவு கூறப்படுகிறது. 


  எனது பணிக்காலத்தின் போது, நியமனம் செய்யப்பட்ட அறங்காவலர்கள் அனைவருமே, என்னுடன் கருத்தொருமித்து, கோவில் வளர்ச்சியில் மிகுந்த ஆர்வமும், அக்கறையும் செலுத்தினர். இதன் காரணமாக, திட்டமிட்டவாறு பல்வேறு வளர்ச்சிப் பணிகளை தங்கு தடையின்றி, இடையூறுகள் எதுவும் இல்லாமல் செய்ய முடிந்தது என்பதை இங்கு குறிப்பிட்டு கூற விரும்புகிறேன்.


 58ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்ட பல்வேறு கோவில் சொத்துக்கள்.

 

கோவில் நிலங்களில் ஏற்படும் ஆக்கிரமிப்புகள் குறித்து, பொது வெளியில் இன்று அதிகம் பேசப்படுகிறது. எனினும்கோவில் நிலங்களில் ஆக்கிரமிப்பு என்பது தொன்று தொட்டு தொடர்ந்து வரும் தொடர் நிகழ்வு என்பதை யாரும் மறுக்க இயலாது. ஆக்கிரமிப்புக்கு உள்ளான கோவில் நிலங்கள் அல்லது அபகரிக்கப்பட்ட கோவில் நிலங்கள் அல்லது முறைகேடாக விற்பனை செய்யப்பட்ட கோவில் நிலங்கள் என கோவில்களுக்கு சொந்தமான பல நூறு ஏக்கர் நிலங்கள், பலகோடி ரூபாய் மதிப்புள்ள நகர்ப்புற நிலங்கள், காலி மனைகள், கட்டிடம் போன்றவற்றை கண்டறிந்து, அவற்றை மீட்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்ததில், இன்றளவும் நான் பெருமிதம் கொள்கிறேன்.


அதேவேளையில், ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்கும் நடவடிக்கையின் போது நான் எதிர் கொண்ட இடையூறுகள், அச்சுறுத்தல்கள், தொல்லைகள் போன்ற நிகழ்வுகளையும் சற்றுப் பின்னோக்கிப் பார்க்கிறேன். எனது பணிக்காலத்தில், கோவில் நிலங்கள் மீதான ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில், நான் சந்தித்த பிரச்சனைகள் ஏராளம். எனினும், ஆக்கிரமிப்புகளை அகற்றும் நடவடிக்கையின் போது நடந்த பல்வேறு நிகழ்வுகளுக்குள் செல்ல விரும்பவில்லை. ஆனால், ஆக்கிரமிப்பிலிருந்து என்னால் மீட்கப்பட்ட கோவில் நிலங்களில், சிலவற்றை மட்டும் மேலெழுந்தவாரியாக இங்கு கூற விரும்புகிறேன்.


         குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் பணி புரிந்த போது, அதன் துணைக் கோவிலான சிதம்பர ஈசுவரர் கோவிலுக்கு சொந்தமாக, கடற்கரைக்கு அருகிலுள்ள நிலங்களை 1989 ஆம் ஆண்டு வாக்கில் அளந்து சரிபார்க்கும் பணியை செய்த போது, சிதம்பர ஈசுவரர் கோவிலுக்கு சொந்தமான சுமார் 50 சென்ட் நிலத்தை தனியார் ஒருவர் ஆக்கிரமித்து, சவுக்கு பயிரிட்டு இருந்ததை கண்டறிந்து அந்த ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது.

  

        அதுபோல, 1980 ஆம் ஆண்டில் திருச்செந்தூர் வட்டம் குதிரைமொழி கிராமம் தேரிக்குடியிருப்பு கற்குவேல் அய்யனார் கோவிலுக்கு, செட்டியாபத்து கோவில் நிர்வாக அலுவலராக இருந்த என்னை, தக்கார் ஆக அறநிலையத்துறை நியமனம் செய்தது. இந்த நியமனத்தை எதிர்த்து, கற்குவேல் அய்யனார் கோவில் பூசாரிகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, இடைக்கால தடை பெற்றனர். 1987 ஆம் ஆண்டில் வழக்கு முடிவுக்கு வந்தவுடன், கற்குவேல் அய்யனார் கோவில் அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டது.


           மேலும்,  கற்குவேல் அய்யனார் கோவிலுக்கு சொந்தமாக, கோவிலை உள்ளடக்கி 152.78 ஏக்கர் இனாம் நிலம் (Inam Land), குதிரைமொழி கிராம வனப் பகுதியில் இருந்தது. இந்த நிலங்களுக்கு 1963 ஆம் வருடத்திய மைனர் இனாம் ஒழிப்பு சட்டப்படி, ‘Karkkuvel Ayyanar Kovil represented by its service holders’ என்ற பெயரில் பட்டா வழங்கப்பட்டு இருந்தது. ஆனால் இந்த சொத்தின் மீதிருந்த, கற்குவேல் அய்யனார் கோவில் பெயரை நீக்கி, தனிப்பட்ட நபர்கள் பலரது பெயரில் பட்டா வழங்கப்பட்டு இருந்தது.


          பட்டா பெற்றவர்களில் ஒன்றிரண்டு பேர், இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி, தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் கோவில் நிலத்தை அடமானம் வைத்து கடன் பெற்றனர். இதனைக் கண்டறிந்து, உரிய ஆவண ஆதாரங்களுடன் வருவாய்த் துறையினரிடம் முறையிட்டு, கற்குவேல் அய்யனார் கோவிலுக்கு சொந்தமான, குதிரைமொழி கிராம புஞ்சை நிலம் ஏக்கர் 152.78 ம் மீட்கப்பட்டது. 


          அதுபோன்றே, திருச்செந்தூர் வட்டம் நங்கைமொழி கிராமத்தில் உள்ள சொக்க நாச்சியம்மன் கோவில் தக்காராக, 1982 ஆம் ஆண்டு வாக்கில், அறநிலையத்துறை என்னை தக்கார் ஆக நியமனம் செய்து பொறுப்பேற்ற போது, கோவிலுக்கு சொந்தமான 16.16 ஏக்கர் புன்செய் நிலத்தில் பெரும் பகுதியை, கோவில் நிர்வாகி என்ற பெயரில் போலியாக ஒரு நபர், பலருக்கு முறைகேடாக விற்பனை செய்திருந்ததை கண்டறிந்து, அதனடிப்படையில் மோசடியாக விற்பனை செய்த கோவில் சொத்துக்களில் சிலவற்றை நேரடியாகவும், சிலவற்றை நீதிமன்ற நடவடிக்கைகள் மூலமாகவும் மீட்டு, ஒட்டுமொத்த கோவில் நிலமும் கோவில் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டது. 


             மேலும், தூத்துக்குடி சங்கர ராமேசுவரர் கோவிலில், 1996-1999 ஆகிய காலகட்டத்தில் பணியாற்றிய போது, பன்னெடுங்காலமாக ஆக்கிரமிப்பில் இருந்த கோவிலுக்கு சொந்தமான சுமார் 50 ஏக்கர் அளவுள்ள உப்பள நிலங்களை மீட்கும் பொருட்டு, ஆக்கிரமிப்பாளர்கள் மீது, நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. 


           அது போன்று, சங்கரராமேசுவரர் கோவிலுக்கு சொந்தமான அமெரிக்கன் ஆஸ்பத்திரி அருகேநான்கு ரோடுகள் சந்திக்கும் இடத்தின் கிழக்கு பகுதியில் இருந்து வரும், பல கோடி மதிப்புள்ள சுமார் 5 ஏக்கர் அளவுள்ள நகர்ப்புற நிலம், இருபதுக்கும் மேற்பட்ட நபர்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு பழைய இரும்பு, மரம், ஓடுகள் விற்பனை செய்யும் இடமாக மாற்றப்பட்டு இருந்தது. இந்த நிலத்தில் இருந்த ஆக்கிரமிப்புகளை முற்றிலும் அகற்றி, நன்கொடையாளர் உதவியுடன் இந்த நிலத்தை சுற்றிலும் முள்கம்பி வேலி அடைப்பு செய்து, மீண்டும் ஆக்கிரமிப்பு ஏற்படாதவாறு தடுக்கப்பட்டது. மீட்கப்பட்ட இந்த இடத்தின் தெற்கு பகுதியில்தான்தூத்துக்குடி இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் அலுவலகம் கட்டப்பட்டு, இயங்கி வருகிறது.. 


           மேலும், 1999 ஆம் ஆண்டில் எனக்கு நிலை-1 நிர்வாக அலுவலராக (Executive Officer Grade-1) பதவி உயர்வு வழங்கி, தூத்துக்குடியிலிருந்து ஈரோடு மாவட்டம், கொடுமுடி மகுடேசுவரர் கோவிலுக்கு மாறுதலாகி, 1999-2004 கால கட்டத்தில் அங்கு பணியாற்றினேன். கொடுமுடி கோவிலை ஒட்டி கோவிலுக்குச் சொந்தமான இடத்தில், சுமார் கால் ஏக்கர் நிலப் பரப்பில் பக்தர்கள் வசதிக்காக, சுமார் 90 ஆண்டுகளுக்கு முன், 1916 ஆம் ஆண்டுவாக்கில் தர்ம சத்திரம் ஒன்றை கட்டிக் கொள்ள, தனி நபர் ஒருவருக்கு நிபந்தனைகளின் பேரில் அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது.


           பழநி தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு, கொடுமுடி காவிரி ஆற்றிலிருந்து தீர்த்த காவடி எடுத்துச் செல்லும் பக்தர்கள், இந்த தர்ம சத்திரத்தில் இலவசமாக தங்குவது வழக்கமாக இருந்து வந்தது. காலப் போக்கில், சத்திர நிர்வாகத்தினர், நிபந்தனைகளுக்கு புறம்பாக தீர்த்த காவடி பக்தர்களிடம் கட்டணம் வசூலித்ததோடு, சத்திரத்தில் திருமணம் போன்ற பல்வேறு விழாக்களை நடத்தி வருமானம் ஈட்டவும் ஆரம்பித்தனர். எனவே, சத்திரம் நிர்வாகம் மீது உரிய நடவடிக்கை எடுத்து, நிபந்தனைக்கு புறம்பாக இயங்கிய சத்திரத்தை கைப்பற்ற நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, கோவிலுக்குச் சாதகமாக தீர்ப்பும் பெறப்பட்டது .    


  59. கோவில் அருகே இருந்த தமிழக தொழில் வணிகத் துறை (TAICO) க்கு சொந்தமான இடம்.

 

   தமிழ்நாடு அரசு தொழில் மற்றும் வணிகத் துறைக்கு (Tamil Nadu Industrial and Commerce Dept.) சொந்தமான சுமார் 75 சென்ட் அளவுள்ள இடம் ஒன்று, குலசை முத்தாரம்மன் கோவில் கலையரங்க  வளாகத்தின் தென்மேற்கில், திருச்செந்தூர் பிரதான சாலையை ஒட்டி கிழக்கில், குலசேகரன்பட்டினம் கிராம நத்தம் புல எண் 186-1 ல் உள்ளது. இந்த இடத்தை விற்பனை செய்வதற்கான பொது ஏலத்தை, தமிழ்நாடு அரசு தொழில் மற்றும் வணிகத் துறையின் ஒரு அங்கமான தாய்கோ (TAICO) வங்கி, கோவில்பட்டியில் வைத்து சில ஆண்டுகளுக்கு முன்பு நடத்தியது.


               தாய்கோ வங்கி, கோவில்பட்டியில் வைத்து நடத்திய இந்த ஏலத்தில் கலந்து கொள்ள கோவில்பட்டி வந்திருந்த குலசை கோவில் திருப்பணி குழு தலைவர் கே.எஸ்.கணேசன் அவர்கள், கோவில்பட்டி பூவனநாதசுவாமி கோவில் நிர்வாக அலுவலராக இருந்த என்னை சந்தித்து, குலசை முத்தாரம்மன் கோவில் நிர்வாகம் நேரடியாக இந்த ஏலத்தில் பங்கேற்க இயலாத சூழ்நிலையில், தான் தனிப்பட்ட முறையில் ஏலத்தில் கலந்து கொள்ள போவதாகவும், இந்த நிலத்தை ஏலத்தில் எடுத்து குலசை முத்தாரம்மன் கோவிலுக்கு நன்கொடையாக  வழங்க போவதாகவும் தெரிவித்தார்மேலும், அன்றைய நாளில் தாய்கோ நடத்திய பொது ஏலத்தில் கலந்து கொண்டு, ரூபாய் ஒன்பது இலட்சத்துக்கும் சற்று கூடுதலான தொகைக்கு உயர்ந்த ஏலம் கேட்டதின் பேரில், கே.எஸ்.கணேசன் அவர்களுக்கு ஏலம் உறுதி செய்யப்பட்டுஅதில் ரூபாய் ஒரு இலட்சம் வரை முன்பணமும் செலுத்தி இருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.


னால் எஞ்சிய தொகையை செலுத்தாத நிலையில், கே.எஸ்.கணேசன் அவர்கள் அன்னையின் திருவடி சேர்ந்தார். எனவே, தாய்கோ வங்கி நடத்திய விற்பனை ஏலம், கே.எஸ் கணேசன் அவர்களுக்கு அங்கீகாரம் ஆகாமல் தடைபட்டு நின்றுள்ளது. எனவே, முத்தாரம்மன் கோவிலுக்கு நன்கொடையாக கிடைத்திருக்க வேண்டிய சுமார் முக்கால் ஏக்கர் பரப்புள்ள மிகப் பயனுள்ள இந்த நிலம், பல ஆண்டுகளாக முடிவு காணப்படாமல் இருந்து வருகிறது.


         இந்நிலையில், முத்தாரம்மன் கோவில் கலையரங்க வளாகத்திற்கு தென்மேற்கில் உள்ள இந்த இடம், கோவில் அனுபவத்திற்கு கொண்டு வரப்படும் போது, தசரா திருவிழா காலங்களில் பல அடுக்கு வரிசை முறையை ஏற்படுத்தி, பக்தர்களை தரிசனத்திற்கு எளிதாக கோவிலுக்குள் அனுப்பவும், கோவிலுக்கு முன்புறம் ஏற்படும் கடுமையான நெரிசலைக் கட்டுப்படுத்தவும் பெரிதும் உதவும் என்பதில் ஐயமில்லை.


 எனவே கே.எஸ்.கணேசன் அவர்களின் வாரிசுதார் மூலம், தாய்கோ வங்கிக்கு செலுத்த வேண்டிய எஞ்சிய ஏலத்தொகை மற்றும் அதனுடன் கூடுதல் அபராத வட்டி ஏதும் செலுத்த வேண்டியது இருப்பின், அதனையும் கணக்கிட்டு கோவில் நிதியிலிருந்தோ அல்லது நன்கொடையாளர்களைப் பயன்படுத்தியோ தமிழ்நாடு தொழில் மற்றும் வணிக துறைக்கு செலுத்தி, கோவிலுக்கு மிகவும் பயனுள்ள இந்த நிலத்தை கையகப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒருவேளை அதற்கான வாய்ப்பு இல்லை எனில், இந்த இடம் தனியார் கைகளுக்கு போய் விடாமல் தடுக்க, சந்தை மதிப்பு அல்லது வழிகாட்டி பதிவேடு மதிப்பின்படி, மேற்படி நிலத்திற்கு மதிப்பு நிர்ணயம் செய்து, நேரடியாக அரசிடமிருந்து விலைக்குப் பெற தேவையான நடவடிக்கையை கோவில் நிர்வாகம் எடுப்பது அவசியம் ஆகும்.

 நிறைவு உரை.

1996 ல் புதிதாக பொறுப்பேற்ற நிர்வாக அலுவலர் ஆ.கணேசன், அறங்காவலர்கள், திருப்பணி குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள், ஆலயப் பணியாளர்கள், ஊர்ப் பிரமுகர்களுடன்.

 

  அனைத்து தரப்பினரையும் தனது அன்பால் அரவணைத்து, கோவில் வளர்ச்சிப் பணிகள் தங்கு தடையின்றி நடைபெற உதவிய திருப்பணிக்குழு தலைவர் கே.எஸ்.கணேசன் அவர்களின் அரும் பணியும், தனது கருணை விழியால் அனைவரையும் தன்பால் ஈர்த்து, அருள்பாலித்து வரும் ஆற்றல்மிகு அன்னை முத்தாரம்மனின் அருட் பார்வையும்கோவில் வளர்ச்சிக்கு உறு துணையாக இருந்தன. மேலும், அந்நாளில் ஆட்சி பொறுப்பில் இருந்த அமைச்சர் பெருமக்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், அறநிலையத் துறை உயர் பொறுப்பு அலுவலர்கள் மற்றும் அலுவலர்கள், அறங்காவலர்கள், திருப்பணி குழு உறுப்பினர்கள், கோவில் பணியாளர்கள் ஆகிய அனைவரது ஆதரவும், ஒத்துழைப்பும் கோவில் வளர்ச்சியை உயர்நிலைக்கு கொண்டு சென்றது எனலாம். 

 

          நிறைவாக, குறுகிய இடத்தில் இருந்த கோவிலை விரிவுபடுத்தி, பல்வேறு கட்டுமானப் பணிகளை முன்னின்று செய்ய நல்லதொரு வாய்ப்பையும், அதற்கான சூழ்நிலையையும் அன்னை முத்தாரம்மன் அந்நாளில் எனக்கு உருவாக்கிக் கொடுத்தாள். என்னை ஒரு கருவியாக பயன்படுத்தி, அனைத்து நிகழ்வுகளையும் முன் நின்று இயக்கியவள் அன்னை முத்தாரம்மனே! கோவிலை விரிவுபடுத்தி, அடிப்படை கட்டுமானப் பணிகளுக்கு வித்திட்ட காலத்தால் அழியாத அந்த நிகழ்வுகளை, எனது நெஞ்சம் நிறைந்த இனிய நினைவுகளைகுலசை முத்தாரமே! நீங்காது நின் நினைவு!! எனும் தலைப்பில் தொகுத்து எழுத, அருள் புரிந்த அன்னை முத்தாரம்மன் சுவாமி ஞானமூர்த்தி ஈசுவரர் பொற்பாதம் தொட்டு வணங்கி சமர்ப்பிக்கிறேன்.

 

ஓம் சக்தி !

  ------------------------------------------------------------------------------------------------------------------------------


                     
 -------------------------------------------------------------------------------------------------------------------------------        
      குலசை முத்தாரமே நீங்காது நின் நினைவு என்ற தலைப்பில், குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில், நான் பணியாற்றிய காலத்தில் நடந்த வளர்ச்சிப் பணிகள் மற்றும் அது தொடர்பான நிகழ்வுகள் குறித்து இங்கு நான் தொகுத்து அளித்த விவரங்கள் அனைத்தும், எனது நினைவுக்கு தெரிந்தவரை சரியானது.

       குலசை முத்தாரமே நீங்காது நின் நினைவு எனும் தலைப்பில் நான் தொகுத்து அளித்துள்ள கோவில் நிலங்கள் குறித்த தகவலில், சரியான நில அளவு விவரம் என்னிடம் இல்லாததால், சுமார் என்ற அடைமொழியுடன் உத்தேச நில அளவு விவரம் சில இடங்களில் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே கொடுக்கப்பட்டுள்ள நில அளவுகளில் சற்று கூடுதல் அல்லது குறைவு இருக்கும் வாய்ப்பு உள்ளது

************************************************************************************* 
       
 2021 டிசம்பர் மாதம் வெளியிடப்பட்ட இந்த மின் நூல் (e-book), சில திருத்தங்களுடன் 2022 ஆகஸ்ட் மாதம் மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது.

*******************************************************************************************


 

Comments

Maharaja said…
அருள்மிகு ஶ்ரீ முத்துமாரியம்மன் கோவில் வளர்ச்சிக்கு முக்கிய பங்கு தாங்கள் ஆற்றிய உள்ளீர்கள் அன்னையின் அருள் உங்களது தலைமுறை கடந்தும் வரும். ஒ
ஓம் சக்தி பராசக்தி.